நூல் கவிஞர் இராஇரவியின் ஹைக்கூ உலகம் நூலாசிரியர் கவிஞர் பொன்குமார் பொருண்மை கவிஞர் இராஇரவியின் படைப்புகள் மதிப்புரை முனைவர் நசெகிசங்கீத்ராதா

நூல்: கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ உலகம்
நூலாசிரியர் :கவிஞர் பொன்.குமார்
பொருண்மை: கவிஞர் இரா.இரவியின் படைப்புகள்

மதிப்புரை : முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதாவெளியீடு :வானதி பதிப்பகம்
பக்கங்கள் 118. விலை ரூபாய்110.23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17
தொலைபேசி044 24342810 / 24310769

கவிஞர் இரா. இரவியின் படைப்புகளின் விமர்சனத் தொகுப்பே இந்நூல்.
இந்நூல் சேலம் கவிஞர் பொன். குமார் அவர்களால் படைக்கப்பட்டுள்ளது. 103
பக்கங்களைக் கொண்ட இந்நூலை புகழார்ந்த வானதி பதிப்பம் சர்வதேச தர
எண்ணுடன் வெளியிட்டு பெருமை சேரத்துள்ளது.
முன் அட்டையில் பாடுபொருளுக்குரியவர், படைப்புக்குரியவரின்
ஒளிப்படங்கள் முகமலர்ச்சியோடு முன் வந்து நம்மை வரவேற்கின்றன. பின்
அட்டையில் கவிஞர் இரா. இரவி ‘தமிழ்ச்செம்மல்“ விருது பெற்ற விருதாளர் படம்.
இதுவரை கவிஞர் பெற்ற விருதுகளின் “தலைக்கோல் பட்டம்“ போல்
காட்சியளிக்கின்றது.
இந்நூலினை தனது வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய தமிழ்த்தேனீ தகைசால்
பேராசிரியர் இரா. மோகன் ஐயா அவர்களுக்கு காணிக்கையாக்கியுள்ளார்.
1997 – லிருநு்து 2023 வரை வெளியாகியுள்ள கவிஞரது படைப்புகளில்
பதினைந்து படைப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமது விமர்சனப் பார்வைக்கு
உட்படுத்தியுள்ளார் கவிஞர் பொன். குமார். ஏறக்குறைய கால்நூற்றாண்டிற்கும்
மேலாக ஹைக்கூ உலகில் உலா வருகிறார் கவிஞர் இரவி என்பதை
அறியமுடிகின்றது.
இந்நூலாசிரியர் கவிஞர் பொன். குமாரினைக் குறிப்பிடும்போது பொன்மன
பொன். குமார் என்றே கவிஞர் குறிப்பிடுகிறார். சேலத்தின் பெருமைகளுள் இவரும்
ஒருவர்!. “எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பாடைப்பாளிகளை ஊக்கப் படுத்தும்
வகையில் காயப்படுத்தாகு பாராட்டிப் பதிவிடும் பண்பாளர்“ நூல்களின் வங்கி! சின்ன
கூகுள்! ஆவண காப்பகம்! என்றெல்லாம் அடைமொழியோடு கவிஞர் மேல் தாம்
கொண்ட அன்பினை அடையாளப்படுத்துகிறார் அல்ல ஆழப்படுத்துகிறார்.
நூலின் விமர்சனம் அணிந்துரையிலிருநு்து ஆரம்பமாகின்றது. “விரிந்து கிடக்கும்
வானப்பெருவெளி. விழியின் சிறுவலைக்குள் விழுந்து விடுவது போல, அகலச்
செய்தியை ஆழச்சொற்களுக்குள் அமிழ்த்தி வைப்பது கவிதையின் குணந்தான்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். ஜப்பானிய கவிஞர் இதை ஹைக்கூ என்றனர்.
இந்த ஹைக்கூவை தமிழில் பயிர் செய்துவிடக் கவிஞர் சிலர் முயல்கின்றனர்.--
இவர்களின் வரிசையில் தம்பி இரவி நிமிர்ந்து நிற்கிறார்“ என்று பத்மஸ்ரீ பேராசிரியர்
சாலமன் பாப்பையா அவர்களின் அணிந்துரை கவிஞரின் படைப்பிற்கு அரண்
சேர்க்கின்றது.
நூலாசிரியர், கவிஞரின் சமூக அவலங்களை சாடும் ஹைக்கூக்களை
பெரும்பாலும் விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளார். “ஹைக்கூ கவிதைகள்“
தொகுப்பில் முதல் ஹைக்கூ, “விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு”

நிலவைப் பார்த்துப் பாடாத கவிஞரே இல்லை எனலாம். நிலவைப் பாடாவிட்டால்
அவர் கவிஞரே இல்லை எனலாம். முதல் பார்வையே சமூக சீர்கேடுகளை களையும்
விதமாக உள்ளது. நிலவைப் பார்த்தவுடன் ஏதேதோ தோன்றும் கவிஞர்களுக்கு
மத்தியில் விதவை மறுமணம் குறித்த ஏண்ணப் புரட்சியை ஏட்டில் பதிவு செய்கின்றது
இக்கவிதை. நிலவைப் பார்த்தவுடன் “ஒரு பானை வெண்சோறு பார்த்ததாகப் பாடிய
புரட்சிக் கவிஞர் பாவேந்தரின் பாசறையிலிருந்து வந்தவர் இந்த பகுத்தறிவுக்கவிஞர்
என்பதை பறைசாற்றுகின்றது.
சமூக அவலங்களில் ஒன்றான சாதியச் சாடல்கள்கவிஞரின் ஹைக்கூக்களில்
விரைந்து கிடப்பதை நூலாசிரியர் சுட்டிச்செல்கிறார். “விழிகளில்ஹைக்கூ’
தொகுப்பில்,
“இதயம் சுடுகின்றது
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
தனிக்குவளை“ (ப.10)
நெஞ்சில் ஹைக்கூ வில்
“தாழ்த்தப்பட்டவன் விளைவித்த
பஞ்சில் உருவானது
அர்ச்சகர் புணுல்“ (ப.25)
அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் பொருளாதாரச் சீர்கேடுகளையும் அப்படியே
கவிஞர் கவிதையாக்கி வருகிறார். கவிஞர் இரவிக்கு நல்ல எழுத்து ஆற்றல் உண்டு.
வெளிப்படுத்தும் தன்மை, செய் நேர்த்தியும் உண்டு எனப் பாராட்டுகிறார்.

“ஏறும்போது ரூபாயில்
இறங்கும்போது பைசாவில்
பெட்ரோல்“ (ப.9)
உள்ளத்தில் ஹைக்கூ, தொகுப்பில், “ஆழமான முத்துக்களின் அணிவகுப்பில்
காலத்ததை வெல்லவந்த கெய்க்கூ பாக்கள் கவிஞர் இரவியின் கவிதைகள்“ என்று
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவனும்,
“சமூக நிகழ்களாகவும், வாழ்க்கை யதார்த்தங்களாகவும் சிந்தனை ஒளியுடன்,
விமர்சன ரீதியில் இரா. இரவி செய்க்கூக்களைப் பதிவு செய்துள்ளார்“ என கவிவேந்தர்
வேழவேந்தன் எழுதிய அணிந்துரைகள் கவிஞரின் கவிதைத் திறத்தை
ஆழுப்படுத்துகின்றன. (ப.12)
“பணம் இல்லாதவன் பிணம்
பிணமானாலும் தேவை பணம்.தகனத்திற்கு” (ப.15)
வாழ்வின் ஆதாரமே பொருளாதாரம் என்பதையும், “செய்க பொருளை“ என்ற
வள்ளுவனின் வாக்கினையும் நினைவு கூர்கின்றது.
நெஞ்சில் ஹைக்கூவில், பெண்ணியம் ஹைக்கூக்களும் நிறைய விமர்சனத்தில்
உண்டு.. பதச்சோறாக, சிலவற்றைக் காணலாம்.
“படிப்பு எதற்கு
அடுப்புதும் பெண்களுக்கு
செருப்பாலடி சொல்பவனை“ (ப.20)
“எழுத்திலும் அநீதி
ஆண் நெடில் தொடக்கம்
பெண் குறில் தொடக்கம்” (ப.25)
என்று வார்த்தையிலே அநீதி இருக்கும்போது பெண்ணின் வாழ்க்கையை எங்ஙனம்
விமர்சிப்பது என்ற ஆதங்கம் தென்படுகின்றது.
இதயத்தில் ஹைக்கூ,
ஹைக்கூ பல படைப்பாளர்களுக்கு பேச்சு எனில் இவருக்கு மூச்சு! கவிஞரின்
உள்ளத்தில், மனதில், இதயத்தில், நெஞ்சத்தில், விழிகளில் எப்போதும் ஹைக்கூ
உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொகுப்பின் தலைப்பையும் அவ்வாறே
கவனத்துடன் வைத்துள்ளார் என்ற பதிவு நூலாசிரியரின் நுட்பத்தினை
எடுத்துரைக்கின்றது. (ப.30)

மனதில் ஹைக்கூ,
“கோழிகள் மிதித்து
குஞ்சுகள் காயம்
முதியோர் இல்லம்” (ப.32)
சுட்டும் விழி,
“எலி மீது யானை
எப்படி சாத்தியம்
பிள்ளையார்“
தமிழியம், தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழலியம் மூடநம்பிக்கையியம்
முற்போக்குயியம் என எல்லா இயங்களையும் கவிஞர் பேசியுள்ளார். ஒரே
பிரச்சனையை பலமுறைப் பேசியும், ஒரு பொருளை பல கோணங்களில் எழுதியும்
வருகிறார். என்ற நூலாசிரியரின் பாராட்டு கவிஞரின் பன்முகச்சிந்தனையைக்
குறிப்பிடுகின்றது.(ப.40)
ஆயிரம் ஹைக்கூ,
இதற்கு முன்னர் கவிஞர் மு. முருகேஷ் இந்த முயற்சியை செய்துள்ளார் எனக்
குறிப்பிட்டு முன்னைய கவிஞரையும் நூலாசிரியர் பாராட்டும் தன்மை
பின்பற்றவேண்டிய ஒன்றாகும். கவிஞரைப் பற்றி கூறுகையில், எந்தவொரு
பாடுபொருளைப் பற்றி ஹைக்கூ எழுதினாலும் அப்பொருளின் அத்தனைப்
பரிமாணங்களிலும் எழுதித் தன் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார் என்று கவிஞரின்
ஹைக்கூத் திறனை ஆங்காங்கே அறைகூவல் விடுகிறார். (ப.44)
ஹைக்கூ முதற்றே உலகு,
“படிப்பதை விடபடைப்பதே சிறப்பு
வரலாறு“ (ப.48)
இரவியின் ஹைக்கூ விற்கு வாசகர்களுக்கு பஞ்சமில்லை. ஏட்டில் விட இணையத்தில்
அதிகம். தமிழ் ஹைக்கூவிற்கு உலக அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளார் (ப.45)
ஹைக்கூ500,
“பெயர் வைத்தது யாரோ
சரியான ஆட்டத்திற்கு
தப்பாட்டம் என்று” (ப.59)
தப்பு என்ற இசைக்கருவியிலிருந்து உருவாகும் இசையினைக் குறிக்கும்
சொல்லைக்கொண்டு கவிஞர் சொல் விளையாட்டு ஆடியுள்ளதைச் நூலாசிரியர்
சுட்டிச் செல்வது நயக்கத்தக்கது.
உதிராப் பூக்கள்,
“சுவரில் எழுதாதே
சுவர் முழுவதும்
எழுதியிருந்தது“ (ப.69)
இந்த ஹைக்கூ கவிஞர் ஆத்மார்த்தி தேர்ந்தெடுத்த உதிராப்பூக்கள் தொகுப்பில்
ஒன்றாகும்.
ஹைக்கூ முன்னோடிகளான முனைவர் மித்ராவை விடவும், கவிஞர்
முருகேஷை விடவும் கூடுதலாகக் ஹைக்கூக்கள் படைத்து அனைவரையும் விட
ஹைக்கூ முன்னோடியாகத் திகழ்கிறார் கவிஞர் இரா.இரவி. என்று நூலாசிரியர்
சான்றளிக்கின்றார். (ப.43)
ஹைக்கூ என்னும் வடிவம் பாரதியார் அறிமுக்படுத்தப்பட்டு கவிஞர் சி.மணி,
எழுத்தாளர் சுஜாதா, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் ஈரோடு தமிழன்பன்,
ஆகியோரால் வளர்க்கப்பட்டதாகும். கவிஞர் அமுதபாரதி, கவிஞர் அறிவுமதி
ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டதாகும். கவிஞர் மு. முருகேஷசின் வருகைக்குப்பின்
ஓர் இளையதலைமுறைப் பட்டாளமே ஹைக்கூவை முன்னெடுத்துச் சென்றது.
அப்பட்டாளத்தில் தனித்த அடையாளத்துடன் செயல்பட்டு வருபவர் கவிஞர் இரவி
என்று தடம் பதித்துச் செல்கிறார் நூலாசிரியர். (ப.47)
இறுதியாக கவிஞரின் நேர்காணலோடு நூலினை நிறைவு செய்துள்ளார்.
நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு கவிஞரின் பதில்களும் கவிஞர்
தம்மை செதுக்கிக்கொண்ட செயலாக்கங்களை நம் நெஞ்சில் அசைபோட
வைக்கின்றன.
விமர்சனம் என்பது எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறியது போல, மயிலிறகு
போல் வருட வேண்டும். ஊசிபோல் குத்தி காயப்படுத்தக்கூடாது என்தற்கேற்ப
அல்லவை நீக்கி நல்லவை போற்றியுள்ளார் கவிஞர் பொன். குமார் அவர்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (26-Apr-25, 12:54 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 31

மேலே