நூல் திரைச் சுவடுகள் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் கவிபாரதி மேலூர் மு வாசுகி

நூல் : திரைச் சுவடுகள்

ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி

நூல் விமர்சனம் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி

வெளியீடு :வானதி பதிப்பகம்
பக்கங்கள் 160. விலை ரூபாய் 160.

23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17
தொலைபேசி044 24342810 / 24310769



பெருமதிப்பிற்குரிய கவிஞர் இரா. இரவி அவர்களின் திரைச் சுவடுகள் என்ற நூலை வாசித்தேன். கவிஞர் இரா. இரவிக்கு எத்தனை முகமென்றே தெரியவில்லை கவிதை எழுதுகிறார், பட்டிமன்றம் பேசுகிறார், பிறநூல்களுக்கு விமர்சனம் எழுதுகிறார். தற்போது இதுவரை பார்த்திராத ஒரு முகத்தைக் காண்பித்து வெற்றி பெற்றுள்ளார்.

திரைத்துறையில் இயங்குபவர்கள் கூட இத்தனை அழகாக சுருக்கமாக, தெளிவாக, புரியம்படி சொல்ல வேண்டியவற்றையும் சரியாக சொல்ல முடியாது. ஆனால் இரா. இரவி அவர்கள்,
ஒரு பார்வையாளராக படம் பார்த்ததை மிகத் துல்லியமாக திரை விமர்சனம் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. எல்லோருக்கும் இக்கலை கைவராது.

நான் அதிகம் திரைப்படம் பார்த்தது இல்லை. ஆனால் ‘மாயாண்டி குடும்பத்தார்’ படம் பார்த்து அழுதிருக்கிறேன். அதை அப்படியே உணர்ச்சி மாறாமல் விவரித்து இருப்பது மிகச்சிறப்பு.

பலரும் திரை விமர்சனம் எழுதுகிறார்கள். அதை படித்தபின்பு படம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த வரிசையில் கவிஞர் இரா. இரவியின் திரை விமர்சனம் மிகத்துல்லியமாகவே உள்ளது என்பதனை நான் மட்டும் சொல்லவில்லை நடிகர் சத்தியராஜ் அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

பல திரைப்படங்களை இந்நூலைப் படித்த பிறகு தேடிப்பிடித்து பார்க்கவும் வாய்ப்புண்டு. ‘ஜோக்கர்’ பட விமர்சனத்தில் ‘படத்தில் துணிவுடன் உண்மை பேசி இருப்பதால் விருது தர யோசிக்கலாம்’ என்றும் எழுதியிருக்கிறார்.

‘வனயுத்தம்’ என்ற பட விமர்சனத்தில் தெரிந்த கதை தெரியாத உண்மை என்று சுவரொட்டிகளில் பிரசுரம் செய்துள்ளார்கள். வீரப்பன் கதை என்று ஆர்வமாக சென்று ஏமாற்றமே மிச்சம் என்பதோடு விடாமல் வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி பாத்திரம் திரையரங்கில் புகைப்படத்தில் உள்ளது. ஆனால் ஒரு காட்சியிலும் படத்தில் வரவில்லை என்கிறார். மேலும் தெரியாத உண்மை எனச் சொல்லி தெரிந்த உண்மையையே எடுத்துவிட்டனர் எனவும் கோபம் கொள்கிறார்.

நர்த்தகி பட விமர்சனத்தில் ஷா திரையரங்கில் 200 ரூபாய் வாங்கும் காலத்தில் வெறும் 20 ரூபாய் மட்டும் பெற்று நுழைவுச்சீட்டு வழங்கியதை பதிவு செய்திருப்பது ‘ஷா’ திரையரங்கின் உரிமையாளருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதோடு பலரும் இச்செய்தியை அறிந்து கொள்ளவும் முடிகிறது. மேலும் அழகான ஹைக்கூவோடு நர்த்தகி பட விமர்சனத்தை முடித்திருப்பதும் மிக அருமை.

ஒவ்வொரு பட விமர்சனமும் தயாரிப்பாளர் முதல் நடிகர், நடிகை, குழந்தை நட்சத்திரம், இசையமைப்பாளர் என்பதை மட்டும் கூறிவிடாமல் அப்படத்திற்கு முன் அவர் தயாரித்த படங்கள் பற்றியும் அதற்கான உழைப்பு பற்றியும் நடிகர் நடிகைகளையும் அப்படத்திற்கு முன் வெற்றிபெற்ற படங்களின் பெயரை குறிப்பிட்டும் இசையமைப்பாளருக்கும் அதே போன்று வெற்றி பெற்ற படத்தின் பாடல்களை குறிப்பிட்டு நமக்கு அறிமுகம் செய்கிறார். இதன்மூலம் ஒரு தயாரிப்பாளரை, இசையமைப்பாளரை, பாடலாசிரியரை, குழந்தை நட்சத்திரங்களை அதிகம் படம் பார்க்காத பலரும் எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது.

மேலும் எந்தக்காட்சிக்கு மக்கள் திரையரங்கில் கைதட்டுகிறார்கள் எந்தக்காட்சிக்கு அமைதியாக உள்ளார்கள் என அக்குவேறு ஆணிவேறாக உணர்த்துகிறார். கவிஞர் இரா. இரவிக்கு திரை விமர்சனம் இயல்பாகவே நன்கு வருகிறது.

சில படங்களுக்கு, நடிப்பும், சில படங்களில் வசனமும், சில படங்களில் பாடல்களும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன என்பதையும் பதிவு செய்கிறார்.

இவர் விமர்சனம் செய்த படங்களை பார்த்தவர்கள் கண்டிப்பாக ஒத்துக்கொள்வார்கள் கவிஞர் இரா. இரவி அவர்களின் கணிப்பு உண்மையென்று.

திரைத்துறையினரே இந்நூலை வாசிக்க நேர்ந்தால் மிகவும் மகிழ்ந்து பாராட்டி மகிழ்வார்கள். அத்தனை அழகாக எழுதியிருக்கிறார் கவிஞர். திரைத்துறையினரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருப்பது இந்நூலிற்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது சர்வதேச தர எண்ணுடன் (ISBN) இந்நூலை புகழ்பெற்ற வானதி பதிப்பகம் மிக அழகாக வெளியிட்டிருப்பது மகிழ்வே. பின்அட்டையில் புரட்சித் தமிழன் இனமுரசு சத்தியராஜ் அவர்கள் குறிப்பிட்டு இருப்பது அனைத்தும் நூறு சதவீத உண்மையே என இந்நூலை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.

தொடரட்டும் உங்களின் திரைச் சுவடுகள் தொடர்ந்து பேசட்டும் அதனை பல உதடுகள்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (26-Apr-25, 3:27 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 7

மேலே