கவிஞர் இரா இரவியின் ஹைக்கூ உலகம் நூலாசிரியர் கவிஞர் பொன் குமார் நூல் விமர்சனம் கவிபாரதி மேலூர் மு வாசுகி
கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலகம்
நூலாசிரியர் : கவிஞர் பொன். குமார்
நூல் விமர்சனம் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி
வெளியீடு :வானதி பதிப்பகம்
பக்கங்கள் 118. விலை ரூபாய்110.
23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17
தொலைபேசி044 24342810 / 24310769
பெருமதிப்பிற்குரிய கவிஞர் பொன். குமார் அவர்களின் கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலகம் என்ற நூலை விரித்தவுடனேயே மனமும் விரிந்தது. இரா. இரவியின் எல்லா நூல்களையும் முன்பே வாசித்தும் இருக்கிறேன். விமர்சனமும் எழுதியிருக்கிறேன். இருந்தும் ஒவ்வொரு கவிஞரும் அதைப்பற்றி எழுதும் போது மீண்டும் புதிதாகவே தெரிகிறது. ஒருவேளை பிரம்மன் தினமும் படைக்கிறானோ உங்களை என்றே தோன்றுகிறது. பொற்குடத்தைப் பாராட்டுவதா? பொட்டு வைத்தவரைப் பாராட்டுவதா? திணற வைக்கிறது இந்நூல்.
கவிஞர் பொன். குமார் அவர்கள் இதுவரை எழுதியுள்ள நூல்களின் பட்டியலை மட்டுமே பத்துநிமிடம் வாசித்தேன்! வியந்தேன்! இந்த வருடம் பட்டியலில் இனிமேல் சேர்க்கும் கவிதைகளில் எனது ஹைக்கூ கவிதைகளையும் இணைக்க ஆவலாக உள்ளேன்.
மல்லிகை மாலையின் இடையில் ரோஜாப் பூவை இரண்டு வரிசை மட்டும் இணைத்துக் கட்டுவார்கள், அந்த இரண்டு ரோஜா வரிசை தான் மொத்த மல்லிகை மாலையையே சிறப்பாக்கிக் காட்டும். அதைப் போலவே ஹைக்கூ கவிஞர் இரா. இரவியின் கவிதையும் அழகு. அதைத் தொடுத்த பொன். குமாரின் இரசனையும் அழகு. இருவரும் தனித்தனியே ஒருவித அழகு. இணைந்ததில் ஒருவித அழகு. மொத்தத்தில் இந்நூலே பேரழகு. வாசகர்கள் கொண்டாடும் நூலாக வடித்துள்ளார் பொன். குமார் இந்நூலிற்கு கவிஞர்கள் பலரும் பாராட்டு தெரிவிப்பது உறுதி. சுருக்கமாகச் சொன்னால் கவிஞர் இரா. இரவிக்கு ‘கிரீடம்’ சூட்டியிருக்கிறார் பொன். குமார்.
இந்நூலில் பொன். குமார் தனது உரையில் கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ பயணத்தில் நிச்சயம் ஒரு கிலோமீட்டர் கல்லாக அமையும் என்று குறிப்பிட்டு இருக்கிறார், அதை நான் மறுக்கிறேன் நிச்சயமாய் எல்லைகள் கடந்து விமானம் பறப்பதைப் போல் உலக கவிஞர்களிடம் பறந்து இந்நூல் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. (நிலப்பரப்பிற்கு தானே மைல்கல், கிலோமீட்டர் கல் இவையெல்லாம்)
தான் எழுதும் நூல்களுக்கு கூட இவ்வளவு சிரத்தை எடுத்திருப்பாரா என எனக்குத் தெரியாது. இந்நூலுக்கு என்று மிக அழகாக இரசனையோடு இயற்றிருக்கும் பொன். குமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் பொருத்தமே. கவிஞர் பொன். குமாரின் கைகளுக்கு வருவதற்கு பல கவிஞர்களின் கவிதைகள் வரிசை கட்டி நிற்கப் போகின்றன என்பதே உண்மை. அத்தனை அழகு இந்நூலில் தெரிகிறது. எதை சொல்வது எதைவிடுவது என மிக குழப்பம் எனக்கு.
மனதில் ஹைக்கூ என்ற தலைப்பின் கீழ் ‘ஹைக்கூ பல படைப்பாளருக்கு பேச்சு எனில் இரவிக்கு மூச்சு’ என்கிறார். மேலும் ஹைக்கூவில் அதிகம் இயங்கியவரும், எழுதியவரும், தொகுப்பு வெளியிட்டவரும் இவரே என உறுதியாகக் கூறமுடியும் என்கிறார். இணைய தளம் இரா. இரவிக்கு நல்லகளம் பக்கபலம் அதனைப் பயன்படுத்திக் கொண்டவரும் இரா. இரவியே ஆவார் என புகழாரம் சூட்டுகிறார்.
எலி மீது யானை
எப்படி சாத்தியம்
பிள்ளையார்.
எனக்குத் தெரிந்து பிள்ளையாருக்கு இப்படி ஒரு கவிதை யாரும் வடித்தது இல்லை.
எல்லோரும் சொல்கின்றனர்
மதுவிலக்கு
எப்படி வந்தன மதுக்கடைகள்?
மிக மிக அழகான வரிகள். என்னல் சுவைபட எழுதியிருக்கிறார் கவிஞர்.
இரா. இரவியை நேர்காணல் செய்யும் பொன். குமார் அவர்கள் படைப்புத்துறையில் இயங்கிய நீங்கள் விமர்சனத் துறைக்கு வந்தது ஏன்? என்ற கேள்விக்கு கவிஞர் பொன். குமார் அவர்களையே மடக்கும் விதமாக தாங்கள் தான், உண்மை தான். உங்களின் விமர்சனத்தை இந்நிகழ்வில் படித்து நானும் முயற்சித்தேன் என யதார்த்த வாழ்வை அழகாக பதிலாக கூறியிருப்பது சிறப்பிலும் சிறப்பு. இதன் மூலம் கவிஞர் பொன். குமாரின் விமர்சன புகழையும் மறைமுகமாக வாசகருக்கு உணர்த்தியிருக்கிறார்.
கவிஞர் பொன். குமார் அவர்களின் உரையின் நிறைவாக எழுங்கள்; எழுகிறேன்; எழுதுவோம் என்ற வார்த்தைகள் அழகானவை. மிகப்பெரிய கவிஞர் பொன். குமார் என்பதை இவ்வரிகள் எடுத்துக் கூறுகின்றன. வாசிக்கும் போதே மகிழ்வையும், நம்பிக்கையையும் வாசகருக்கு ஏற்படுத்துகின்றது.
இனி, ஹைக்கூவை ஆய்வு செய்யும் மாணவர்கள் இரா. இரவியின் எல்லா நூல்களையும் தேடியலைய வேண்டாம். இந்த நூல் ஒன்றே போதும் என பரிந்துரைக்கலாம்.
கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ நூலை புனித நூலின் தன்மைக்கு உயர்த்தியிருக்கிறார் கவிஞர் பொன். குமார்.
இவரின் இலக்கிய ஏணியில் பல கவிஞர்கள் உயரே வரட்டும்.