298 தன்னுருவம் தான் தேறாது தீய உருவமே சினத்தால் வரும் – சினம் 4

கலித்துறை
{மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காச்சீர் வரலாம்)

கோட வாண்முகஞ் சுழித்திதழ் மடித்தெழில் குலையச்
சேடன் மீதியான் சினமுற்ற பொழுதெதிர் திகழும்
ஆடி நோக்கயா னியான்கொன்மற் றார்கொலன் றயிர்த்துத்
தேடி நோக்கவோர் குரூபமே கண்டுளந் திகைத்தேன். 4

- சினம், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”ஒளி பொருந்திய முகத்தைக் கோணும்படி சுருக்கி, உதட்டை மடித்து அழகு கெட வேலையாள் மேல் சினங்கொண்ட பொழுது எதிரிலிருந்த கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன்.

நானே நான்தானா அல்லது வேறொருவரா என்று பெருமூச்சு விட்டு நன்றாக ஆராய்ந்து பார்க்க ஒரு தீய உருவமே கண்டு உள்ளம் திகைத்தேன்” என்று கோபப்படுவதனால் ஏற்படும் விளைவை இப்பாடல் ஆசிரியர் தெரிவிக்கிறார்.

கோட - கோண. சுழித்து - சுருக்கி. எழில் - அழகு. சேடன் - வேலையாள்.
ஆடி - கண்ணாடி. குரூபம் - தீய உருவம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Feb-23, 7:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

மேலே