584 அடியிணை பிடித்தென்றும் அகலாமை அன்பு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 42
தரவு கொச்சகக் கலிப்பா
உற்றசஞ் சீவினியை யுண்ணா(து) ஒழியுமதி
யற்றவர்போன் மாதாவாய் அப்பனாய் ஆருயிராய்ச்
சுற்றமாய் வாழ்வாய்த் துணையாய்நம் பாலுறையும்
கொற்றவனைப் போற்றிக் குறையிரந்து பல்வரமும்
உற்றநல் காயாயின் விடேனென்று முறைகால் பூண்டெவ்
வற்றமுமேத் தோமினிவே றாருதவி சொன்மனமே. 42
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
நெஞ்சே! கையிற் கிடைத்த உயிருய்யச் செய்யும் மருந்தாம் அமிழ்தத்தை உண்ணாது விட்டொழியும் அறிவில்லாதவர் போல், அம்மையாய் அப்பனாய் உடங்கியைந்துணர்த்தும் ஆருயிராய், அருப்பறா ஆக்கம் பலவும் தரும் விருப்பறாச் சுற்றமாய் குறைவிலா நிறைவாம் வாழ்வாய், என்றும் நீங்கா இன்துணையாய், நம்மைவிட்டு நீங்காது நம்மோடே யுறையும் வெற்றிப் பெரும்பொருளை, அன்புடன் தொழுது மன்றாடிக் கேட்டுப் பல வரங்களையும் தந்தருள வேண்டுக.
தாராதொழியின் உன் திருவடிப்பிடியை விட்டகலேனென்று முறைமுறையாக அவன் திருவடியைப் பற்றிக் கொள்வாயாக.
இவை முறையாகவும், நேரும் பொழுதெல்லாம் அவன் திருவடியைத் தொழாதிருந்தால் நமக்கு வேறு உதவி எவ்வாறு யாரால் கிடைக்கும்? கூறுவாயாக.
சஞ்சீவினி - உயிர்மருந்து. கொற்றவன் - வெற்றியுள்ளவன். குறையிரந்து - மன்றாடிக்கேட்டு.