ஆலம்சேர் கண்டத்தான் ஈன்ற களிறு - ஐந்திணை எழுபது - கடவுள் வாழ்த்து
நேரிசை வெண்பா
எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு
நண்ணும் கலையனைத்தும் நல்குமால் - கண்ணுதலின்
முண்டத்தான், அண்டத்தான், மூலத்தான், ஆலம்சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு!
- கடவுள் வாழ்த்து, ஐந்திணை எழுபது
பொருளுரை:
கண்ணை நெற்றியிலுடைய தலையினை யுடையவனும், இவ்வுலகமாகிய அண்டத்தினைத் தனது வடிவமாகக் கொண்டவனும், எல்லாவற்றிற்கும் முதற் காரணனாய் உள்ளவனும்,
ஆலகால விஷமாகிய நஞ்சு பொருந்தியிருக்கும்படியான கழுத்தை உடையவனுமான சிவபெருமான் பெற்றெடுத்த யானைமுகக் கடவுள்;
யாம் விரும்பும் பொருள்கள் எல்லாவற்றையும் நன்றாக முடிவுபெறச் செய்து எங்களுக்கு இவ்வுலகத்தே பொருந்தியுள்ள கல்விப் பொருள்கள் எல்லாவற்றையும் கொடுக்கும்!

