583 தாயினும் பிழைபொறுத்துத் தாங்குவோன் கடவுள் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 41

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

புகர்சில வியற்றிற் றாயும்
..பொறுப்பள்கொல் மனத்தால் வாக்கால்
இகழுறு செயலா னாஞ்செய்
..ஏதமெண் ணிலவென் றாலுஞ்
சகமிசைத் தண்டி யாது
..சாந்தனை யும்பொ றுத்துச்
சுகமெலா மீயுந் தேவைத்
..துதித்தன்பாற் பதித்துய் நெஞ்சே. 41

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! குற்றம் செய்யும் பிள்ளைகளை நற்றவத் தாயும் பொறுத்தல் செய்யாள். நாம் நினைப்பால், சொல்லால், செயலால் பொறுக்கலாற்றாத எல்லாராலும் எள்ளற்பாட்டுக் குரிய அளவிலாக் கொடுஞ் செயல்களை ஓவாது செய்யினும் ஆண்டவன் அவைகளை மனம் பொறுத்து மண்மேல் சிறிதும் தண்டியாது ஆமளவும் சாந்துணையும் நலமெலாம் அருள் செய்கின்றான்.

அத்தகைய ஆண்டவனை மறவா மனத்தால் விடாது தொழுது உள்ளத்து வைப்பாயாக. அதுவே வீழ்நாள் படாஅமை நன்றாற்றும் விழுமிய வழியாகும். அவ்வழியே வீடெய்தி உய்யும் நிலைக்குத் துணையாகும்.

புகர் - குற்றம். ஏதம் - கொடுமை. சகம் - நிலம்; மண். சுகம் - நலம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Feb-23, 12:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

சிறந்த கட்டுரைகள்

மேலே