ஒரே பூ நீ தான் நூலாசிரியர் கவிஞர் சு சிவனேஸ்வரன் நூல் அணிந்துரை கவிஞர் இரா இரவி

ஒரே பூ நீ தான்!
நூலாசிரியர் : கவிஞர் சு. சிவனேஸ்வரன்
நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

*******

நூலாசிரியர் கவிஞர் சு. சிவனேஸ்வரன், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் M.A., பயின்று வருகிறார். ‘ஒரே பூ நீ தான்’ என்ற தலைப்பில் கவிதை நூல் வடித்துள்ளார். மாணவப் பருவத்திலே கவிதை நூல் வெளியிடுவது சிறப்பு, பாராட்டுகிறேன்.

எனது ஹைக்கூ கவிதைகளை அவரது பாடத்திட்டத்தில் படித்து வருவதைத் தொடர்ந்து, நட்பாகி அணிந்துரை எழுதும் அளவிற்கு வளர்ந்துள்ளது மகிழ்ச்சி.

நிலங்கள், மலர்களின் பெயரிலேயே கவிதைகளுக்கு தலைப்பு வைத்துள்ளது புதிய முயற்சி. முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

காந்தள்

முதலில் பிடித்துப் பிடித்து பிடிக்கவில்லை
இறுதியில் பிடிக்காது பிடிக்காது பிடித்து விட்டது
காதல்!

பிடித்து, பிடிக்காது என்ற முரண்சுவையுடன் காதல் பற்றி சொல் விளையாட்டுடன் காதல் பிடித்து விட்டது என்பதை நயமாக ரசனையோடு எழுதி உள்ளார்.

குறிஞ்சி!

சென்று சென்று பார்த்தாலும் – அங்கு
சென்றதற்கான காரணம் ஏதும் தோணவில்லை
ஆனாலும் அவளை முதன்முதலில் அங்கு தான்
பார்த்த ஞாபகம் உண்டு!

காதல் எப்படி வரும்? எங்கு வரும்? ஏன் வரும்? என்பது முன்கூட்டியே தெரியாது. ஆனால் காதல் தற்செயலான சந்திப்பில் மலரும் மலர். காதல் அரும்பியபின் எங்கு நிகழ்ந்ததை என்பதை நினைத்துப் பார்த்து அந்த இடம் மிகவும் புனிதமான இடமாக மனதில் பதிந்து விடும். காதலை உணர்ந்து எழுதி உள்ளார். பாராட்டுகள்.

குருக்கத்தி :

காதலித்தவனிடத்தில் வாய்மை துணையல்ல,
காதலியின் வாய்மைச் சண்டைக்கு
பொய்யே அவள் கண்ணுக்குள் பொதிர்ந்த
கருவிழி!

‘அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்ற புகழ்பெற்ற கம்பன் வரிகளை நினைவூட்டும் விதமாக, ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து’ என்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளை நினைவூட்டும் விதமாக, விழியால் எழுதிய கவிதை நன்று.

வாடாமல்லி!

முற்றாத கதிர் அறுவடைக்குப் பயனாகா
உரிய வயதை அடையாப் பெண்
காதலுக்குத் துணையாகா
முற்றுவதற்கு மாதம் ஆறு
கன்னி முதிர்வதற்கு ஆர்மூனே
ஆகணும் வருடம்!

காதலோடு உழவை ஒப்பிட்டு கதிர் விளைந்தால் தான் அறுக்க முடியும். விளையாத கதிரை அறுப்பது வீண்! அதுபோல காதலிக்கு பதினெட்டு வயது அடைந்தால் தான் பக்குவம், பருவம் வரும், சட்டப்படியும் செல்லுபடியாகும் என்பதை உணர்ந்து வடித்த கவிதை நன்று. அடுத்த நூல், காதல் கவிதைகளின்றி சமூகத்தை சீர்படுத்தும் கவிதைகளாக எழுத வேண்டுமென்ற வேண்டுகோளையும் வைத்து விடுகிறேன்.

செங்காந்தள்!

சில நேரங்களில் தமிழ் எனக்கு இனிப்பதில்லை
சிலரிடம் பேசும் போதும்
சிலர் என்னைப் பேசும் போதும்
பல நேரங்களில் காதல் எனக்கு தித்திப்பதில்லை
அவள் காதல் சொல்ல நாணும் போதும்
காதல் வந்தபின் நான் நாணும் போதும்!

கண்ணும் கண்ணும் பேசி விட்டால் இதழ்கள் பேசிட வேலை இருக்காது, மௌனித்து விடுவார்கள், வார்த்தை வருவதில்லை, வெட்கத்தில் மூச்சுக்காற்று தான் வரும், சொற்கள் வருவதில்லை, அதனால் செல்லமாக தமிழ் எனக்கு இனிப்பதில்லை என கோபம் கொள்கிறார். இனிக்கும் தமிழை இனிக்கவில்லை என காதலிக்காக தலைவிக்காக உரைப்பது நன்று.

எள்ளல் சுவையுடன் சில கவிதைகள் உள்ளன. கல்லூரி மாணவர் என்பதால் நண்பர்களின் காதலை உற்றுநோக்கி தானும் காதல் உணர்வுகளை உணர்ந்து வடித்துள்ள கவிதைகள் நன்று. முதல் முயற்சி என்பதால் பாராட்ட வேண்டும், காதலர்கள் இந்நூல் படித்தால் அவரவர் காதலை அசை போட்டுக் கொள்ள உதவிடும் வரிகள் உள்ளன. மலரும் நினைவுகளை மலர்விக்கும் வரிகளாக உள்ளன. பாராட்டுகள், வாழ்த்துகள்.

பிரம்ம கமலம்!

என் வெற்றிடமான மேகத்தில் இளமதியாய்
எப்பொழுதுமே பூக்கின்ற ஒரே பூ நீ தான்
அவ்வப்போது உன் பேரழகில் மயங்கிய
நானோ அன்று அமாவாசை!

நூலின் தலைப்பிலான வரி வரும் கவிதை நன்று! காதலி முழு நிலவு, அவள் அழகைப்பார்த்து ரசித்து பிரமித்து அமாவாசையாகி விடுகிறேன். ஒளியின்றி ஆகி விடுகிறேன் என்று உணர்த்துகின்றார்.

வாலிப வயதில் இளமைத் துள்ளலுடன் காதல் பற்றி அறிந்து படித்து, தமிழ் படித்து இலக்கிய ஆர்வம் கொண்டு கவிதை நூல் வடித்து இருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.

காதல் கவிதைகளை வழக்கமான மானே தேனே மயிலே குயிலே என்ற வரிகளில் எழுதாமல் புதிதாகச் சிந்தித்து புதிய கோணத்தில் மாறுபட்ட வடிவில் புதுக்கவிதைகளாக வடித்துள்ளார்.

கவிதைகளுக்கான ஓவியங்கள் கோட்டு ஓவியங்கள் புதுமையாகவும் சிறப்பாகவும் உள்ளது, பாராட்டுகள்.

வளர்ந்து வரும் கவிஞர், இந்த காதல் கவிதை நூலான ‘ஒரே பூ நீ தான்’ மூலம் காதல் கவிதை எழுதிடும் கவிஞராக அறியப்படுவார். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள், தமிழ்க்கடலில் மூழ்கி முத்தெடுத்து நல்ல பல சமுதாயக் கவிதைகளும் அடுத்தடுத்து எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்தி முடிக்கிறேன்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (20-Feb-23, 11:57 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 45

மேலே