509 பொதுமகட்குக் குலதெய்வம் பொன்னளிப் போரே – கணிகையரியல்பு 36

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

தரணியின்மிக் கெழின்மாதை யுனதுகுல தெய்வமெது
..சாற்றா யென்றேன்
இரணியனென் றெய்வமென்றாள் விட்டுணுவோர் நரசிம்மம்
..எனவே வந்தான்
முரணுறவொண் ணாதென்றே னிரணியன சுரனன்று;
..முராரி மெய்மேற்
கிரணவுடை யெனைப்புனைந்த விரணியனென் றெய்வமென்றாள்
..கிளியன் னாளே. 36

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

உலகில் மிக்க அழகு வாய்ந்த கிளிபோன்ற பொதுமகளைப் பார்த்து, `உன் குலதெய்வம் எது? சொல் என்றேன். `இரணியன் என் தெய்வம் என்றாள். `இரணியனை அடக்கத் திருமால் ஆளரியாக வந்தான். அதனால், உன் தெய்வம் வலியுடையதாகாதென்றேன். அவள், `யான் கூறியது இரணிய அசுரன் அன்று. திருமால் மேனியின்கண் காணப்படும் ஒளிமிக்க பொன் ஆடையை ஒத்த பொன்னணி என்மேற் புனைந்த பொன்னுடையானே என் தெய்வம் என்றாள்.

தரணி - உலகம். இரணியன் - ஓர் அசுரன். முராரி - திருமால். இரணியன் - பொன்னுடையோன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-23, 10:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே