147 உடல், உயிர்க்காம் இருதலைவர் எவர்க்குமுளர் உண்மையே - கணவன் மனைவியர் இயல்பு 39

தரவு கொச்சகக் கலிப்பா

கேள்வரிலா விடத்தொர்பிழை செயினறியா ரெனக்கிளக்கும்
வாள்விழியென் றுகத்துறையு மகிழ்நரிரு வரிலொருவர்
மூள்வினையாற் பிரியினுமற் றொருவர்சக முழுதுநிறை
கோள்வினையா ரவரறியாச் செயலுளதோ கூறுவையே. 39

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”வாள்போலும் கண்ணையுடைய தோழி! தலைவரில்லாத இடத்தில் ஒரு பிழை செய்தால் அவர் அறியமாட்டார் என்று சொல்லுகின்றாய்.

என்னுடைய உள்ளத்தில் வாழும் தலைவர் இருவராவர். அவர்களுள் உடல் தலைவராகிய ஒருவர் பொருளீட்டும் ஊக்கத்துடன் பிரிந்தாலும், மற்றொருவராகிய உயிரோடு கலந்த உயிர்த்தலைவர் உலகம் எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் கொள்கையினை உடையவர். அவர் அறியாச் செயல் உள்ளதோ என்று கூறுவாயாக” என்று தோழியிடம் தலைவி தெரிவிக்கிறார்.

கேள்வர் - தலைவர். கிளக்கும் - சொல்லும்.
மகிழ்நர் - தலைவர். சகம் - உலகம்.
மூள்வினை -ஊக்கத்துடன் முற்படுந் தொழில்.
கோள் - கொள்கை.

தோழி கேட்கிறாள், உயிர்த்தலைவர் யார்? (தொடரும்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-23, 4:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே