148 உயிர்த்தலைவர், படைத்தளிக்கும் ஒப்பில் முழுமுதல்வர் - கணவன் மனைவியர் இயல்பு 40

தரவு கொச்சகக் கலிப்பா

இருதுணைவர் தனக்குளரென் றிறைவிசொல ஐயமுற்றிங்(கு)
ஒருதுணையான் அறிகுவன்மற்(று) ஒருதுணையா ரெனவினவப்
பெருமகனை யுன்னையென்னைப் பேரண்டங் களையமைத்தான்
தருமநிலை மூர்த்தியென்றாள் சதியிவட்கோர் குறையுளதோ. 40

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

இருவர் தலைவர் தனக்கு உளர் என்று தலைவி சொன்னாள். தோழி ஐயமுற்றுத் தலைவியே! ஒரு துணைவரை யானறிவேன், மற்றொரு தலைவர் யார் என்று வினவினாள்.

அதற்குத் தலைவி, தோழியே! நம் தலைவரை, உன்னை, என்னை, இந்தப் பெரிய அண்டங்களைப் படைத்துக் காத்து அறத்தை நிலைநிறுத்தும் ஆண்டவனே மற்றொரு துணைவன் என்றாள்.

இத்தகைய மெய்யறிவு படைத்த நம் தலைவிக்கு குறை ஏதும் உள்ளதோ? குறை ஒன்றும் இல்லை என்று தோழி அறிவதாக இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.

துணைவர் - தலைவர். இறைவி - தலைவி. பெருமகன் - தலைவன். தருமம் - அறம். சதி - தலைவி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-23, 4:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே