510 பொதுமகட்காகக் களவுசெய்யப் போயினவே இருகையும் – கணிகையரியல்பு 37
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
பொய்யேந்து மனவேசைக் காத்திருடிக் கையிரண்டும்
..போக்கிக் கொண்டே
மையேந்து விழிமனையாட் கிடையேந்துந் துகிலின்றி
..மானந் தன்னைக்
கையேந்தி யாடையிரக் கவோகையிலா ளானாளெக்
..கையை யேந்திச்
செய்யேந்தும் உலகத்திற் பலியேந்தி யுண்ணுவயாஞ்
..செப்பாய் நெஞ்சே. 37
– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
உள்ளமே! பொய்யே சுமந்த மனமுடைய பொதுமகட்குப் பொருள் வேண்டிக் களவு செய்தோம். அதனால் இருகையும் போக்கப் பெற்றேம்.
மை தீட்டப்பட்ட கண்ணையுடைய மனைவி இடையிற் கட்ட உடையின்றித் தன் கையால் மானம் மறைத்து அகமொடுங்கி அல்லற்படுகின்றாள் அவள் பொருட்டு வயல்சூழ் உலகில் ஆடையிரக்கவும், இருவர் பொருட்டும் சோறு இரக்கவும் நமக்கோ கையில்லை. என் செய்வோம் சொல்லுவாயாக.
துகில் - ஆடை. பலி - பிச்சை.