511 வேடிக்கைக் குரல்விலங்காய் மெய்ப்பண்பாய் மாறினரே – கணிகையரியல்பு 38

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

சேயிழையின் சேடியர்முன் னெமக்கிதஞ்செய் வான்புலிவெஞ்
..சினமா கோகு
நாயோரி கரடியெனக் கத்திமகிழ் விப்பர்கள்நா
..நலிந்த பின்னத்
தீயவிலங் கினச்செய்கை நங்கண்ணே செயத்தொடுத்தார்
..திருவை யொப்பா
ளாயமிரு கங்கட்கோ ரரசானா ளவட்கிரைநாம்
..ஆயி னோமே. 38

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! அழகிய அணியணிந்த பொதுமகளின் தோழியர் நாம் செல்வமுள்ளவராயிருந்த காலத்து நம்மை மகிழ்செய்வித்தற் பொருட்டுப், புலி, குதிரை, கழுதை, நாய், நரி, கரடி முதலிய விலங்குகள் போன்று ஒலி செய்வர்.

அவர்களே செல்வம் நீங்கி வறுமையுற்ற இக்காலத்து உண்மையாக அவ்விலங்குகளாக மாறித் தீய செயல்கள் பலவும் நம்மாட்டுச் செய்யலானார். அவள் தலைவியும் விலங்கரசாம் அரியாகி நம்மைத் தன் இரையாக்கினள்.

சேடியர் - தோழியர். மா - குதிரை. கோகு - கழுதை. ஓரி - நரி.
விலங்கரசு - அரி; சிம்மம். இரை - விலங்குணவு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-23, 6:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே