403 பிறர்க்கு உதவி இன்பம் பெறுவர் மேலோர் - கைம்மாறு கருதா உதவி 21

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

இதமிலா வுலோபர்தம் பொருளை யெண்ணியே
மதமொடு நாடொறு மகிழ்வர் மேலவர்
பதவிதீர் மிடியர்க்குப் பரிவிற் றாஞ்செயும்
உதவியை யுனுந்தொறும் உளங்க ளிப்பரே. 21

- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நற்குணமில்லாத கஞ்சர் தம் பணத்தைப் பெரிதாக நினைத்தே செருக்குற்று தினமும் பொய்யின்ப மகிழ்ச்சி அடைவர். மேன்மையான குணமுடைய சான்றோர் வசதியற்ற ஏழைகட்கு மிகுந்த பரிவுடன் தாம் செய்யும் பொருள் உதவியை நினைக்கும் பொழுதெல்லாம் உள்ளத்தில் மகிழ்வர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

இதம் - நன்மை. உலோபர் - கஞ்சர். மதம் - செருக்கு. பதவிதீர் - வசதியற்ற. மிடியர் - ஏழையர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-23, 8:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே