நூறு

எல்லோர்க்கும் எல்லாமும் இல்லை என்னும்
எழுதாதச் சட்டத்தின் ஏடு நூறு
சொல்வோரும் சொல்லாத சுமைக ளோடு
சுவைக்காமல் அழிகின்ற சுகங்கள் நூறு
நில்லாமல் உழைத்தாலும் நிலைத்தி டாமல்
நீர்மேலே எழுத்தாகும் நிசங்கள் நூறு
மெல்லாமல் விழுங்காமல் மெல்லக் கொல்லும்
மிடுக்கான விசமிங்கே மேலும் நூறு
*
கல்லாமல் அரசாண்டு காசு சேர்த்து
களிக்கின்றக் காட்சிக்கண் காண நூறு
வெல்லாமல் தோல்விகளை வெற்றி யாக்கி
வீறுநடை போடுகின்ற வீணர் நூறு
வில்லாகி வளைபுருவ வீச்சைக் கொண்டு
வில்லாதி வில்லனையும் வீழ்த்தும் நூறு
செல்லாதக் காசாகிச் சீர்மை குன்றிச்
செருப்பாகித் தேய்ந்தறுந்த சேதி நூறு
*
நெல்லாக விலையுமென்று நினைத்த வொன்று
நேர்மாறாய்ப் பதரான நீசம் நூறு
இல்லறத்தை காக்குமென்று இணைத்த மங்கை
எல்லைமீறி விட்டகதை இங்கு நூறு
அல்லாடும் வாழ்க்கையில் ஆசை யாலே
அழிந்தகதை ஆராய்ந்தால் அதுவும் நூறு
சொல்லப்போ னால்வாழ்வில் சோர்ந்த வர்க்குள்
சொல்லாத சோகங்கள் நூறு நூறு!
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Jan-25, 4:17 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 11

மேலே