81 எல்லாம் பழக்கி வளர்க்கும் ஈன்றார்க்கு ஒப்பார் யார் - தாய் தந்தையரை வணங்கல் 8
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
ஐயமெய் யம்ம ணத்தோ(டு)
..அழுவதை யன்றிப் பேசச்
செய்வொன் றறியா நொய்ய
..சிற்றுடல் சேய்வ ளர்த்திங்(கு)
உய்யவேண் டுவன செய்த
..உயிரினு மினிதாக் காக்கும்
பொய்யிலன் புடைத்தாய் தந்தை
..போல்பவ ருளரோ நெஞ்சே. 8
- தாய் தந்தையரை வணங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஐயோ! நாம் உடலில் ஆடையின்றி நிர்வாணத்தோடு அழுவதைத் தவிர பேசவும், வேறு செயல் செய்யவும் அறியாது பலவீனமாக இருந்தோம்.
சிறிய உருவத்திலிருந்த குழந்தையாகிய நம்மை வளர்த்துப் பிழைத்துக் கொள்ள வேண்டியவற்றைச் செய்யப் பழக்கி உயிரினும் சிறப்பாகக் காத்தவர் பொய்யில்லாத மெய்யன்புடையவர்களாகிய தாய் தந்தை போன்றவர்கள் வேறு யாருள்ளனர், நெஞ்சே!” என்று பெற்றோர்களுக்கு ஒப்பானவர் வேறு யாருமில்லை என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
நொய்ய – பலவீனமாக,