வானுலகில் எம்ஜியார் சிவாஜி மற்றும் டிஎம்எஸ்

முன்னுரை: என் கற்பனை ஊற்றில் பெருக்கெடுத்த நகைச்சுவை உணர்வைத்தான் இந்தப் பகுதியில் வெளியிடுகிறேன். ஆயினும் என்னை அறியாமல் படைப்பின் இறுதியில் நகைச்சுவை மக்கிப்போய், உணர்ச்சிமயம் மேலோங்கியுள்ளது . இருப்பினும் இதை நான் நகைச்சுவை பகுதியிலேயே வெளியிடுகிறேன். இதில் வரும் உரையாடல்கள் எல்லாமே எனது படைப்பாற்றலின் வெளிவந்த கற்பனையே. இதோ நகைச்சுவை தொடங்குகிறது.

எம்ஜியார்: அட என்ன தம்பி நீ திடீர்னு இங்கே வந்து நிக்கறே?

சிவாஜி: அது என்ன வந்து நிக்கறேன்னு கேட்கறீங்க, இப்போ நாமெல்லாம் ஒரு புள்ளிவடிவமாக பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒதுங்கி பதுங்கி பிதுங்கி வாழ்கிறோம். நாமெல்லாம் நிற்கவும் முடியாது உட்காரவும் முடியாது ஓடவும் முடியாது. ஆனால் ஒரு கொசு அல்லது ஈயைப்போல இங்கும் அங்கும் எங்கும் பறக்காமலேயே இப்படியும் அப்படியும் அலையலாம். ஆகவே 'என்ன வந்து நிக்கறே' ன்னு கேட்காம 'என்ன வந்திருக்கே' ன்னு கேளுங்க.

எம்ஜியார்: சரியாப்போச்சுடா, உன் தத்துவ வசனங்களை பூமியுடன் வைத்துக்கொள். இப்போ சொல்லு என்ன திடீர்னு வந்திருக்கே?

சிவாஜி: பூமியில்தான் உங்களை அடிக்கடி சந்திச்சு பேசமுடியவில்லை என்ற ஏக்கம் இருப்பதால் இங்கே வந்து நிம்மதியாக உங்களுடன் பேசிவிட்டுப்போகலாம்ணுதான் வந்தேன். நீங்க எப்படி இருக்கிறீங்க?

எம்ஜியார்: நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஏன் நீயும் என்னைப்போலவே ஒரு சின்ன ஒளிவடிவமாத்தான் இருக்கே.

சிவாஜி: நீங்க சொல்வது உண்மைதான் அண்ணே. சென்னையில் சினிமா உலகத்தில் மிகப்பெரும்புள்ளியாக இருந்த நான் இப்போது கண்ணிற்குக்கூட தெரியாத சின்னஞ்சிறு புள்ளியாகிவிட்டேன். என்ன செய்வது, இறப்பு என்று வந்துவிட்டால் எல்லார் வாழ்க்கையுமே ஒரு முற்றுப்புள்ளிதான்.

எம்ஜியார்: சரியாச்சொன்னே தம்பி. கரும்புள்ளி செம்புள்ளி எல்லாம் வைத்து நானும் எவ்வளவோ படத்துல நடிச்சிருக்கேன். ஆனால் சாவு என்ற ஒன்று எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. ஆமாம் நான் 1987 இல் காலமானேன். நீ எப்போ காலமானாய்?

சிவாஜி: நீங்க காலமானது எனக்கு எப்படி தெரியாமல் இருக்கும். நான் நேரிலே வந்து உங்கள் பூத உடலுக்கு மலர் வளையம் வைத்தேனே. உங்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது உங்களைப்பற்றி நாலு வார்த்தை உங்களை சிறப்பித்து பேசினேன்.
எம்ஜியார்: நீ மட்டும் இல்லை ஆயிரம் லட்சக்கணக்கில் என் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்துகொண்டார்கள். நான் அதையெல்லாம் என்னுடைய பூதஉடலின் வெளியே எங்கோ ஆகாயத்திலிருந்து பார்ப்பதுபோல இருந்தது. ஆனால் எதையும் முழுமையாக பார்க்கமுடியவில்லை. எங்கேயோ மிதந்து செல்வதுபோன்ற அனுபவம்தான் இருந்தது. இப்போதும் அப்படிதான்.

சிவாஜி: நான் 2001 இல் காலமானேன் அண்ணே. உங்களை விட நான் இரண்டு வருடங்கள் அதிகமாக வாழ்ந்தேன் தெரியுமா?

எம்ஜியார்: கேட்க ரொம்ப சந்தோஷமாவும் அதே நேரத்தில் ரொம்ப வருத்தமாவும் இருக்கிறது.

சிவாஜி: ஏன் அண்ணே அப்படி சொல்றீங்க?

எம்ஜியார்: பின்ன என்ன தம்பி, உன்னைப்போல அடிக்கடி தண்ணி போடாமல் இருந்தும் நான் 70 வயதில் மேலே வந்துட்டேன். நீ குடிச்சி கும்மாளம் அடிச்சும் என்னைவிட இரண்டு வருடங்கள் கூடவேதான் வாழ்ந்திருக்கிறாய்.

சிவாஜி: ரெண்டு வயசு வித்தியாசமெல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை அண்ணே. நீங்க சினிமா அரசியல் ரெண்டுலேயும் கொடிகட்டி பறந்தீங்க. ஆனால் நானோ சினிமாவில் மட்டும்தான் கொடிகட்டிப்பறந்தேன். அரசியலில் என்னை மக்கள் கிள்ளுக்கீரையாகக்கூட நினைக்கவில்லை. திமுக கட்சியை தோற்றுவித்தவர்களில் நானும் ஒருவன். அதன் பின்னர் பெருந்தலைவர் காமராஜை ஆதரித்து சிலவருடங்கள் இருந்தேன். ஆனால் பொதுமக்கள் என்னை ஒரு அரசியல்வாதியாக ஏற்கவேயில்லை. எங்கே, சினிமாவைப்போல இங்கேயும் நிறைய வேடங்கள் கட்டிவிடுவானோ என்று ஜனங்கள் பயந்துபோய்விட்டார்களோ தெரியவில்லை.

எம்ஜியார்: எனக்கும் அப்படிதான் தோணுது. நீ மிகவும் அதிகமான காதாபாத்திரங்களில் நடித்ததால் ஜனங்கள் உன்னை ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக மட்டுமே நினைத்தார்கள். தவிர, பல கதாபாத்திரங்களில் நீ கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங்கும் செய்திருக்கிறாய். ஆனால் நீ அப்படி அரசியலில் செய்தால் பிரச்சினை என்று நினைத்துத்தான் உன்னை அரசியலிலிருந்தே காலி செய்துவிட்டார்கள்.

சிவாஜி: நீங்க சொல்லுவதில் மிகவும் சிறிய அளவு உண்மை இருந்தாலும் என் ஜாதகத்தில் எனக்கு அரசியலில் போணி இல்லை என்பதுதான் உண்மை. இன்னொரு விஷயம் அண்ணே, நான் இப்போ சொல்ற விஷயம் உங்களுக்குக் கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் நீங்கள் நடிப்பு எதுவும் இன்றியே சினிமாவில் பெரிய ஆளாகி விட்டீர்கள்.

எம்ஜியார்: தம்பி, நீ இப்போக்கூட கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணுறே. நான் எவ்வளவோ படங்களில் நன்றாக நடித்திருக்கிறேன். ரிக்சாக்காரன், விவசாயி படங்களில் ஒரு ரிக்சாக்காரன் மற்றும் விவசாயி கூட, பாண்ட் சட்டை அணிந்துகொண்டு அவர்கள் தொழிலை கௌரவமாச் செய்யலாம் என்பதை மிகவும் அருமையாக நடித்துக்காட்டினேன். இந்த படங்களை பார்த்தபிறகு பல விவசாயிகளும் ரிக்ஸாகார்களும் பாண்ட் சட்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். அதெல்லாம் உனக்கு எங்கே ஞாபகம் வரப்போகுது. எவ்வளவோ படங்களில் நான் மரத்தின் பின்புறமும், சுவற்றின் பின்புறமும் கண்களை மூடிக்கொண்டும் பார்பவர்களுக்குத்தெரியாமல் அழுது தத்ரூபமாக நடித்ததை என்னைத்தவிர வேறு யாரால் உணரமுடியும்? இப்போ தமிழ்நாட்டுல நடிகர்கள் யாருமே உன்னைப் போல பத்து இருபது பக்க வசனங்களையோ அல்லது மிகவும் சத்தம்போட்டோ பேசுவதில்லை. ராஜனியை எடுத்துக்கோ, கமலை எடுத்துக்கோ, அஜித்தை எடுத்துக்கோ. இவங்களெல்லாம் சத்தம் போட்டு பேசினாலும் என்னுடைய பேச்சுபோல மென்மையாகத்தான் இருக்கிறது.

சிவாஜி: அண்ணே, நாம நடித்தது அந்தக்காலம் இதெல்லாம் இந்தக்காலம். காலப்போக்கில் நடிப்பு என்ன, திரைக்கதை வசனம் இசை கேமரா டைரக்க்ஷன் எல்லாமே மாறிவிட்டது. இப்போதெல்லாம் உங்களைப்போலவும் என்னைபோலவும் பீப்பாய் வயிறு உடையவர்கள் கதாநாயகனாக நடிக்கமுடியாது. இப்போ உங்களைப்போல கொள்கைப்பாடல்களை மக்கள் ரசிப்பார்களா, வெறும் காலிப் பெட்டியை தூக்கிக்கொண்டு 'புதிய வானம், புதிய பூமி' என்று சிம்லாவிலும் டார்ஜீலிங்கிலும் ஓடிக்கொண்டு பாடினால் கேட்பார்களா?
அண்ணே, 1950இலிருந்து இப்போதுவரை மாறாமல் இருக்கும் இரண்டு விஷயங்கள் என்னாண்ணா, ஒண்ணு ஹீரோ-ஹீரோயின் இன்னொண்ணு காதலன் காதலி கனவு காட்சிகள். ‘ரிக்சாக்காரன்’ படத்தில் நீங்க பாண்ட் தொப்பி போட்டுக்கொண்டு நடித்த ஒரே காரணத்தினால் உங்களுக்குச் "சிறந்த நடிகர் தேசிய விருது" கிடைத்ததை நினைத்தால் இன்னிக்கும் எனக்கு சிரிப்பு வருது. அதுக்கு பதில் பல படங்களில் நீங்க வாள்சண்டை கோல்சண்டை நன்றாகச் செய்ததிற்கு விருது கொடுத்திருந்தா கொஞ்சம் பொருத்தமாக இருந்திருக்கும் என்பதுதான் உங்க தம்பியின் தாழ்மையான கருத்து.

எம்ஜியார்: எனக்கு தேசிய விருது கொடுத்ததால் உனக்கு சிரிப்பு இல்லை தம்பி, வயிற்றில் எரிச்சலும் தோலில் அரிச்சலும்தான் வரும் என்று எனக்கு நல்லாத்தெரியும். ஏன், உன்னைபோலவே பல நடிகர்களுக்கும், உன் ரசிகர்களுக்கும் எரிச்சல் இருக்கலாம். ஆனால் நான் அரசியலிலும் வெளுத்துக்கட்டினேன். பத்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துகாட்டினேன். நான் டெல்லிக்குப் போய் 'ஐயா எனக்கு இந்த படத்துல நல்லா நடிச்சதுக்கு தேசிய விருது கொடுங்க" ன்னு கெஞ்சினேனா? நீகூடத்தான் பாபு படத்துல கைரிக்சா இழுத்து 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே" அப்படீன்னு என் ஸ்டைலிலே டிஎம்எஸ் குரல் கொடுத்து பாடினே. பாட்டு ஹிட் ஆச்சி, படம் ஹிட் ஆச்சா? சரி, அதையெல்லாம் விடு தம்பி.
இப்போ நமக்கும் உலகவாழ்க்கைக்கும் ஒரு துளி சம்மந்தமும் இல்லை. நான் காலமான பதினான்கு வருடம் கழித்து நீ காலமாகி இங்கே வந்திருக்கே. இவ்வளவு காலமும் நான் காலம் கடந்ததே தெரியாமல் நானே என் கண்ணுக்குத்தெரியாமல் இருந்துகொண்டிருக்கிறேன். எனக்கு மீண்டும் எப்போது பூமியில் பிறப்பு என்றே தெரியவில்லை. ஒருவிதத்தில் மனிதப்பிறவியே இனி வேண்டாம் என்று தோன்றுகிறது. ஆனாலும் மனதின் ஒரு மூலையில் “ராமச்சந்திரா, நீ ஒருதடவையாவது இந்தியாவின் பிரதமமந்திரியாக இந்தியாவை ஆளவேண்டும்" என்று ஏதோ ஒன்று ரீங்காரம் செய்துகொண்டிருப்பதை என்னால் மறுக்கமுடியவில்லை. சரி தம்பி, உனக்கு மீண்டும் பூமியில் பிறந்து வாழவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?

சிவாஜி: இந்த கேள்விக்குமட்டும் என்னால் தெளிவாக பதில் சொல்லமுடியவில்லை அண்ணே. சினிமா உலகில் நல்ல சாதனைகள் படைத்தாலும் 'சிவாஜி நல்ல நடிகர் ஆனால் ஓவர் ஆக்ஷன் செய்பவர்" என்ற கரும்புள்ளி இல்லாமல் மிகவும் இயற்கையாக நடிக்கவேண்டும் என்ற ஒரு விருப்பம் இருக்கிறது, முதல்மரியாதை படத்தில் போட்ட வேடம் போல. இந்தியாவின் சிறந்த நடிகர் என்று ஒருமுறை இல்லை குறைந்தது ஐந்து முறையாவது தேசியவிருது வாங்கவேண்டும். அதுமட்டும் இல்லை உலகில் சிறந்த நடிகர் என்று ஓரிருமுறை ஹாலிவுட் விருதுகளும் வாங்கவேண்டும் என்று என் அடிமனத்தின் அடிப்பகுதியில் என் மனம் அடிக்கடி அடித்துக்கொண்டிருக்கிறது என்பதை நான் அடித்துச்சொல்வேன். உங்களுக்கே தெரியும் நான் ஆங்கிலம் பேசுவதில் உங்களைவிட மிகவும் சிறந்தவன். முடிந்தால் ஒரு ஹாலிவுட் படத்தில்கூட கதாநாயகனாகக்கூட நடிக்கமுடியும்.”

(அந்த நேரத்தில் "பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு" என்ற டிஎம்எஸ்ஸின் குரல் கேட்டு எம்ஜிஆர் சிவாஜி இருவருமே திகைத்துப்போனார்கள்)

சிவாஜி: அட நம்ம டிஎம்எஸ் குரல்தான். அதோ பாருங்க ஒரு புள்ளி பாடிகிட்டே வருது. என்ன சௌந்தரராஜா சௌக்கியமா?

டிஎம்எஸ்: ஏதோ முருகன் திருவருளால் சொர்க்கமா நரகமா என்று தெரியாத ஏதோ ஒரு இடத்தில ஒரு மூலையில் இருந்துகொண்டிருக்கிறேன். நான் காலமாகி பத்துவருடங்கள் ஆகப்போவுது. ஆனால் என் பாடல்கள் எவ்வளவு காலமானாலும் தமிழ் பூமியெங்கும் ரசிகர்கள் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும்.

எம்ஜியார்: அதெல்லாம் சரிதான் சௌந்தரராஜன். ஆமாம் இப்போ நீங்க பாடின பாட்டு எனக்காகவும் பாடலை சிவாஜிக்காகவும் பாடலை. அப்போ யாருக்காக பாடினீங்க?

டிஎம்எஸ்: ஆமாம் 'யாருக்காக' பாட்டு யாருக்காக பாடினீங்கன்னு சிவாஜிக்கு முன்னாலேயே கேட்கறீங்களே. அவருக்காகத்தான் 'யாருக்காக' பாடலை 'வசந்த மாளிகை' படத்திற்காகப் பாடினேன்.

எம்ஜியார்: டிஎம்எஸ், நான் அதை கேட்கவில்லை. இப்போது 'பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்' என்ற ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்தாயே அதைத்தான் கேட்கிறேன்.

டிஎம்எஸ்: ஓ அதுவா. மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்காக 'ராஜவீட்டுப்பிள்ளை' என்கிற படத்தில் பாடினேன். பைத்தியக்காரன் என்று நான் பாடியதை நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

எம்ஜியார்: நீங்க பாடினாலும் பாடாவிட்டாலும் நாம எல்லோருமே பைத்தியகாரங்கதான். இந்த மெட்டு கேட்க நன்றாக இருக்கிறது. எங்கே ஒருமுறை சரணத்தையும் ஒரு பல்லவியையும் பாடுங்க, கேட்போம்.

(டிஎம்எஸ்ஸும் எம்ஜியார் கேட்டதுபோல அந்தப்பாடலின் சரணத்தையும் முதல் பல்லவியையும் பாடிக்காண்பித்தார். எம்ஜியார் சிவாஜி இருவரும் கேட்டுவிட்டு டிஎம்எஸ்ஸை 'ஆஹா ரொம்ப நல்லா பாடினப்பா. இதன் பாடல் வரிகள் எங்கள் இருவருக்குமே பொருந்துவதுபோல அருமையாக இருக்கிறது' என்று பாராட்டினார்கள். அந்த நேரத்தில் எங்கிருந்தோ கோவில்மணி போல ஓசை வந்தது. உடனே டிஎம்எஸ் " அப்போ நான் வர்றேங்க. இங்கே சுமார் மூவாயிரம் முருகபக்தர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது முருகனை வழிபடும்போது இந்தமாதிரி மணியோசையை எழுப்புவார்கள். அதன் பிறகு நான் சில முருகன் பக்தி பாடல்களை பாடவேண்டும். வாய்ப்பு இருப்பின் மீண்டும் சந்திக்கலாம்" என்று சொல்லிவிட்டு 'அன்று கேட்பவன் அரசன் மறந்தால் நின்று கேட்பவன் இறைவன்' என்று பாடியவண்ணம் ஒளியாய் மறைந்தார்)

எம்ஜியார்: ஒருவிதத்தில் பார்த்தல் இந்த டி எம் எஸ் கொஞ்சம் பெரிய கில்லாடிதான்.

சிவாஜி: ஐயோ ஏங்க அவரை அப்படிசொல்லுறீங்க. ரொம்ப நேர்மையான நேராகப்பேசும் பாடகர் அவர். அவர் பாடவில்லை என்றால் நம் இருவருக்கும் இந்த அளவுக்கு புகழ் கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.

எம்ஜியார்: தம்பி, இந்த விஷயத்துல நீ சொல்வதை நான் நூற்றுக்கு நூறு ஒப்புக்கொள்கிறேன். அவர் பாடல்களுக்கு நான் வாயசைத்ததால் என்னுடைய பெருமை கூடியது.

சிவாஜி: ஆமாம். அதைப்போல அவர் என் நடிப்புக்கு பாடியதால் அவருக்கு புகழ் ஓங்கியது. இதை நான் சொல்லவில்லை. டிஎம்எஸ்ஸே சொல்லியிருக்கார்.

எம்ஜியார்: நான் சொல்லவந்தது, டிஎம்எஸ் நம் இருவருக்கு மட்டும் பாடவில்லை. ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், முத்துராமன், ராஜேந்திரன், சிவகுமார், நாகேஷ் என்று பலருக்கும் பாடியிருக்கிறார். சொல்லப்போனால் ஜெய்சங்கருக்கு அவர் பாடிய பாடல்கள் மிகவும் அருமை. டிஎம்எஸ்ஸின் இயற்கையான குரல் ஜெய்சங்கருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது. ஜெய்சங்கரின் முதல் படமான 'இரவும் பகலும்' படத்தில் 'உள்ளத்தின் கதவுகள் கண்களடா' என்ற பாடலை எப்போது கேட்டாலும் நான் உருகிவிடுவேன்.

சிவாஜி: ஆமாம் அண்ணே, ரவிச்சந்திரனுக்கு ஒரு படத்தில் 'மலரை போன்ற பருவமே மனதை மயக்கும் உருவமே' என்ற பாடலை கேட்கும்போது எனக்கும் ரொம்ப உற்சாகமாக இருக்கும். அந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் 'ஸ்டாப் லிசன் ப்ரொசீட்' என்ற வரிகளை சூப்பராக பாடியிருப்பார்.

எம்ஜியார்: அடிமைப்பெண் படத்தில் பாடல்கள் ரிகார்டிங் நடந்துகொண்டிருந்தபோது அவர் தன் பிள்ளையின் திருமணத்திற்காக மதுரை செல்லவேண்டும், ஒரு வாரத்தில் வந்து பாடல்களை பதிவு செய்துவிடுகிறேன் என்றபோது நான் அவரிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துகொண்டேன். அந்த நேரத்தில் அவர் பாடல் தொகையையும் அதிகரிக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். அதுதான் தருணம் என்று நான் டிஎம்எஸ் பாடியிருக்கவேண்டிய ஒரு டூயட் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியத்தை வைத்து ரிகார்ட செய்துவிட்டேன். 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடல்தான் அது. மக்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றது. அப்போதிலிருந்து நான் என்னுடைய பல படங்களில் பாலசுப்ரமணியம் யேசுதாஸ் இருவரையும் பாடவைத்தேன். ஒரு வகையில் டிஎம்எஸ் பின்னடைவுக்கு நானும் தார்மீகப்பொறுப்பேற்றுத்தான் ஆகவேண்டும்.

சிவாஜி: பாவம் டிஎம்எஸ். நம் இருவரின் திரைப்படப்பாடல்கள் நன்றாக வரவேண்டும் என்று எப்படி பாடுபட்டு குரலை மாற்றி எவ்வளவோ ஹைபிச் பாடல்களை நம் இருவருக்கும் பாடியுள்ளார். நான் ஒன்று மட்டும் உறுதியாகச்சொல்ல முடியும். நான் இதுவரை கேட்ட சினிமா பாடகர்களில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆண்மை குரல் என்றால் அது நம் அருமை நண்பர் டிஎம்எஸ்ஸின் கம்பீரக்குரல்தான்.

எம்ஜியார்: சரியாச்சொன்னாய் தம்பி. அதுவும் உனக்காக டிஎம்எஸ் பாடிய சில பாடல்கள் என்னுடைய பாடல்களுடன் ஒப்பிடவேமுடியாத வகையில் மிகவும் உயர்வாக இருந்தது. 'பாட்டும் நானே பாவமும் நானே' 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' ' எங்கே நிம்மதி' 'தெய்வத்தின் தேர்தெடுத்து தேவியைத்தேடு' போன்ற பாடல்களை நான் எப்போது கேட்டாலும் உருகிவிடுவேன். அவர் மீண்டும் நம் தமிழ்நாட்டில் பிறந்து ஐம்பதாயிரம் பாடல்கள் பாடி சாதனை புரியவேண்டும் என்று நான் மனமார அவரை வாழ்த்துகிறேன்.

சிவாஜி: இப்போ அவர் முருகன் பாடல்கள் பாடிவரச்சென்றுள்ளார். திரும்பி நம்மிடம் அவர் வருவாரா என்றுதான் தெரியவில்லை.

(அந்த நேரத்தில் டிஎம்எஸ் தூக்கம் கலைந்து விழித்துக்கொண்டார். மிகுந்த குழப்பத்துடன் விளக்கைப் போட்டு கடியாரத்தை பார்த்தார். இரவு இரண்டு மணி. காலண்டரை பார்த்தார் தேதி 24. 03. 2013. அன்று அவரது பிறந்த தினம். படுக்கையிலிருந்து எழுந்து உட்காரும் தெம்பும் அவருக்கில்லை. 'சுமித்ரா' என்று தீனக்குரலில் அழைத்தார். அவர் மனைவி சுமித்ரா கொஞ்சம் வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாக டிஎம்எஸ் வாயினில் கொடுத்தார்.

அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து, (25 . 05. 2013), அவர் இந்த உலகைவிட்டுப் பிரிந்து எம்ஜியார் சிவாஜியுடன் சேரப்போகிறார் என்பதை டிஎம்எஸ் அந்த நேரத்தில் உணர்ந்திட வாய்ப்பில்லை).

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (6-Mar-23, 7:20 pm)
பார்வை : 50

சிறந்த நகைச்சுவைகள்

மேலே