நான் வைத்த புனைப்பெயர்கள்

என் பள்ளிப்பருவத்தில் (நாற்பத்தியைந்து ஐம்பது வருடங்களுக்கு முன்பு) நான் செய்த சில சேட்டைகளில் ஒன்று பிறருக்கு புனைபெயர் வைப்பதாகும். இப்போதெல்லாம் அந்தமாதிரி பெயர்கள் வைப்பது இல்லை. (மிகவும் அத்தியாவசியம் என்றால் ஏதோ ஒன்று ரெண்டு இந்தமாதிரி புனைபெயர்கள் வைத்திருக்கிறேன்). அவ்வளவு ஏன், கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு நானே வைத்துக்கொண்ட புனைபெயர் 'ஜாய்ராம்'. இந்த பெயரில்தான் நான் என் எழுத்துக்களை வெளியிட்டுவருகிறேன்.

பம்பரம்: எங்கள் வீட்டு எதிர்த்தெருவில் ஒரு நடுவயது பெண்மணி வசித்துவந்தார். அவர் நடக்கையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு (இடுப்பு மொத்தமும் வட்டமிடும்) முன்னோக்கியும் நடப்பார் (பூமி சூரியனை சுற்றிவருவதுபோல). எனவே அவருக்கு நான் வைத்த பெயர்தான் 'பம்பரம்'. அவரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது.

பூசணி கிழவி: என் வீட்டில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள். அந்த குடும்பத்தின் தலைவி சுமார் அறுபது வயது கொண்ட ஒரு பெண்மணி. ரொம்ப கஷ்ட்டப்பட்ட குடும்பம். அவர் அவ்வப்போது எங்கள் வீட்டிற்கு வந்து என் தாயிடம் ஒரு நாள் ‘ஒரு உருளை கிழங்கு கொடுங்கள், இன்னொரு நாள் ‘நாலு வெண்டைக்காய் கொடுங்கள்’, மற்றொரு நாள் ‘இரண்டு கத்தரிக்காய் கொடுங்கள்’ என்று கேட்டு அவர் வீட்டு சமையலுக்கு வாங்கிச்செல்வது வழக்கம். கஷ்ட்டப்படுகிற குடும்பம் என்று என் அம்மாவும் கொஞ்சம் காய்கறிகளை கொடுத்துவந்தார். அந்த பெண்மணிக்கு பூசணிக்காய் என்றால் மிகவும் விருப்பம். என் அம்மா கடைத்தெருவுக்கு சென்று காய்கறி வாங்கி வந்தால் பூசணி வாங்கி வந்திருக்கிறாரா என்றுதான் அவர் முதலில் கவனிப்பார். பூசணி இருந்தால் அடுத்த நாள் காலையில் ஒரு சிறு கிண்ணத்தை கொண்டுவந்து 'ஒரு நாலு துண்டு பூசணி கொடுப்பீர்களா?" என்று கேட்டு பூசணித் துண்டுகள் வாங்கிச்செல்வார்கள். அவர் மிகவும் அதிக அளவில் எங்கள் வீட்டில் எடுத்துச்சென்ற காய் பூசணி என்பதால் அவருக்கு நான் 'பூசணி கிழவி' என்று பெயர் வைத்தேன். அவரது மகளும் வந்து அவ்வப்போது பூசணி துண்டுகள் வாங்கி செல்வாள். எனவே அவருக்கு 'சின்ன பூசணி கிழவி' என்று பெயர் சுற்றினேன்.

கொம்பி: என் வீட்டில் வயதான ஒரு பெண்மணி கொஞ்ச வருடங்கள் குடியிருந்தார்கள். அவர் எப்போதும் கம்பை பிடித்துக்கொண்டுதான் நடப்பார்கள். அதே சமயம் வேகமாகவும் நடப்பார்கள். அவருக்கு நான் வைத்த பெயர் 'கொம்பி'. அவருடைய தங்கை அவரைப்பார்க்க அவ்வப்போது வந்து செல்வார்கள். அவரை கொம்பியின் தங்கை என்று சுற்றிவளைத்து சொல்லாமல் நேரடியாக 'நெம்பி' என்று பெயர் வைத்துவிட்டேன். இப்போதும் இவர்களின் இயற்பெயர் எனக்குத்தெரியாது.

துணி: என் பள்ளிப்பருவத்து நண்பன் ஒருவன் இருந்தான். அவனை பார்த்து பேசும்போதும் 'எனக்கு இப்போ நேரம் இல்லை. துணிகளை தோய்க்கவேண்டும் " என்பான். இன்னொருமுறை " இன்றைக்கு எனக்கு துணி அதிகமாக இருக்கிறது. தோய்க்கவேண்டும்" என்பான். அடுத்த முறை ' என் அப்பாவின் துணிகள் தோய்த்து காய்ந்துவிட்டது. நான் அவைகளை இஸ்திரி செய்யவேண்டும்' என்பான். எனவே அவனுக்கு 'துணி' என்றே பெயர் வைத்துவிட்டேன். என் நண்பர்களின் வட்டாரத்தில் அவனை 'துணி' என்றே குறிப்பிடுவார்கள்.

பாதி மூலம்: கொஞ்ச வருடங்கள் ஆதிமூலம் என்பவர், கொஞ்சம் வயதானவர், எங்கள் வீட்டில் குடியிருந்தார். அவர் மகன் அவரைப்போலவே இருப்பார். எனவே குழப்பம் இல்லாமல் இருக்க அவருக்கு 'பாதி மூலம்' என்ற பெயர் இட்டேன். அவருக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருந்தது. பாவம் அந்த குழந்தைக்கு மட்டும் எப்படி பெயர் வைக்காமல் இருப்பது என்பதற்காக அதற்கு 'மீதி மூலம்' என்று திருநாமம் அளித்தேன்.

இப்போதும் என்னுடைய சகோதர சகோதரிகள் மேற்கூறியவர்களைப்பற்றி பேசுகையில் நான் வைத்த புனைபெயர்களைச்சொல்லித்தான் குறிப்பிடுவார்கள். ஏனெனில் அவர்களும் என் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களின் இயற்பெயரை அதிக அளவில் மறந்துவிட்டனர்.

நான் மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நிஜ வாழ்க்கையில் நடந்தது என்றாலும் இதையெல்லாம் நான் நகைச்சுவைக்காகத்தான் எழுதுகிறேன். மற்றவர்களின் மனதை சிறிதளவுகூட புண்படவைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. எனவே இவற்றை படிக்கும் வாசகர்கள் இதையெல்லாம் சுத்தமான நகைச்சுவை என்று மனதில்கொண்டு உடனடியாக மறந்துவிடவேண்டும். படிங்க, முடிஞ்சா சிரிங்க, இல்லேன்னா விடுங்க, அம்புட்டுத்தேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Mar-23, 8:38 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 72

சிறந்த நகைச்சுவைகள்

மேலே