அழகியலில் நமது எண்ணங்கள்

அழகியலில் நமது எண்ணங்கள்

இந்த் உலகத்தில் எவை அழகு, அழகற்றவை என்று நம்மால் சொல்ல முடியும்
அனைத்தும் மனம் சம்பந்தபட்டதாய் இருக்கும்போது !
அழகோ, அழகற்றவையோ, என கருதும் அனைத்தும் புற தோற்றத்தை வைத்து மனம் சொல்வதுதான். இதை ஒரு முடிவாக ஏற்றுக்கொள்ள தயக்கமாகத்தான் இருக்கிறது.
அப்படியானால் உங்களிடமிருந்து ஒரு கேள்வி எழலாம், நாம் திரைப்படங்களிலோ, வண்ணப்படங்களிலோ அல்லது நேரிடையாக இயற்கை சூழ்ந்த மலைப்பிரதேசங்கள், ஓடும் நதி, நீர் வீழ்ச்சி, இன்னும் பல, இயற்கையின் வர்ண ஜாலங்களுடன் இருக்கும் இவைகளை காணும்போது இவை அனைத்தும் அழகு என்று மனம் ஒப்புக்கொள்கிறதே. அதே போல் தண்ணீர் வறண்ட பகுதி, காய்ந்த நிலம், கருகிய செடி கொடிகள் இவைகள் எல்லாம் மனதுக்குள் ஒரு வித அசூயை தருகிறதே.
உண்மைதான் இவைகள் அனைத்தும் நம் பார்வைகள் மனதிடம் கடத்தி கொண்டு சென்று இவை அழகு, அழகில்லாதவை என ஒப்புக்கொள்கிறது. ஆனால்..! உதாரணமாக
நகரத்தில் வசிப்பவர்களாகிய நாம் மாறுதலுக்காக சுற்றுலா செல்கிறோம். அங்கு, அந்த இயற்கை அழகு சூழ்ந்திருக்கும் பகுதியில் இருப்பவர்களிடமோ அல்லது அழகில்லாதவை என நம் மனது குறிப்பிடும் இடங்களிலோ வசிக்கும் மக்களிடம் விசாரித்து பார்க்கிறோம், எப்படி இருக்கிறது உங்கள் வாழ்க்கை?
நூற்றுக்கு எண்பது சதவிகிதம் பேர், அவர்கள் வாழும் பகுதியை விட ஏனைய பகுதிகளைத்தான் அழகு என்று குறிப்பிடுவார்கள், வறண்ட நிலத்தில் வசிக்கும் மக்கள் கூட தங்கள் பகுதியை அழகில்லாதவை என்று ஒப்புக்கொள்ளாமல் அதே நேரத்தில் பரபரப்பான நகர வாழ்க்கையை அழகு என்று சொல்வார்கள்.ஆனால் நகரத்தில் வசிக்கும் நாம் நம் இடத்தை விட்டு இங்கு வந்து தற்போது கண்டு கொண்டிருக்கும் இயற்கை வளமான இடத்தை கண்டு இரசிக்க வந்திருப்போம்.
பொதுவாகவே மனம் சட்டென ஒரு இடத்தையோ, அல்லது மற்றவைகளையோ அழகு அழகில்லாதவை என்று குறிப்பிட்டு எண்ணமிட்டாலும் நம் வாழ்க்கையை அதனோடுதான் எனும் போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொள்கிறது. காலம் செல்ல செல்ல அதையே அழகு என்றும் ஒத்துக்கொள்கிறது.
இது மனித வாழ்க்கையிலும் ஒத்து போகிறது.பிறர் சொல்லியோ அல்லது ஆரம்பத்தில் நம் மனது சொல்லியோ அழகு, அழகற்றவை, என்பவைகளுடன் பழக ஆரம்பித்து, அல்லது அவர்களுடனே வாழ்ந்தாக வேண்டிய கட்டத்தில் மனம் தானாக அவர்களை அல்லது அவைகளை ஏற்றுக்கொண்டு ஒரு கட்டத்தில் அவைகளை விட சிறந்த அழகு எதுவுமில்லை என்றும் ஏற்றுக்கொண்டு விடுகிறது.
நாய், பூனை, குதிரை, போன்றவைகளை வளர்க்கிறோம், நாம் முகம் சுழிக்கும் ஒரு சில விலங்குகளை வளர்ப்பவர்களை நாம் பார்க்கத்தான் செய்கிறோம். அவர்களை பொருத்தவரை அவைகள்தான் அழகு
நம்மால் சேறு சகதியுமான இடங்களில் கூட வசிக்க முடிகிறது, ஆரம்பத்தில் அதை வெறுத்து ஒவ்வாமையால் சிரமப்பட்டாலும் காலப்போக்கில் அங்குதான் இருக்க வேண்டும் என்னும் சூழ்நிலையில் மனம் தானாக பக்குவமடைந்து அந்த சூழ்நிலைக்கு ஒத்து போகிறது.
இப்போது நாம் வசிக்கும் இந்த இடத்தை புதிதாக வந்தவன் பார்த்து என்ன நினைக்கிறான் என்பதை சொல்ல தேவை இல்லை.
அதனால் அழகு என்பது பெரும்பாலும் மனம் சம்பந்தபட்டதுதான். நமக்கு அழகு என்பதோ அழகில்லாதவை என்பதோ மற்றவர் மனங்களில் தோன்றும் எண்ணம் வித்தியாசப்பட்டு இருக்கும்.
உங்களுக்கு அழகு என்பது மற்றவர்கள் கண்களுக்கு அழகற்றவையாக தெரியக்கூடும்.
அப்படி இருக்கும்போது ஒருவர் இருவர் கருதுவதுதான் அழகு என்று எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?
அழகு என்பது நம் மனம் நிச்சயித்திருந்தாலும் அதோடு வாழ்வது, அதனோடு இணைந்திருப்பது என்பதில் ஏற்படும் சிக்கல்கள் சில நேரம் அதனை பற்றிய எண்ணங்களையே மனம் அடியோடு மாற்றிவிடும்
நிறத்தை வைத்து அழகு என்றும் நாம் நிர்ணயித்து கொள்கிறோம். நிறம் என்பது இயற்கை அளிக்குமொரு கொடை என்பதை மறந்துதான் விடுகிறோம். உண்மையில் சொல்வதானால் நம் எல்லோர் மனதுக்குள்ளும் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை உண்டு. வெளிநாட்டாரை கண்டு நாம் பயப்படும் முதல் பிரச்சினையே அவர்களின் நிறம்தான்.அதனை அவன் நன்குணர்ந்தே நம்மை கீழ்மட்ட நிலையில் நினைத்து கொள்கிறார்கள். ஆனால் இன்று அப்படியில்லை, நம் திறமை என்பது அவர்களது நிறத்தை விட மேலோங்கி நிற்பதால் அவர்களது மன நிலையும் இறங்கி வந்துள்ளது.
நீங்கள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அங்கு இலை மீது இருந்த ஒரு புழு நம் மீது ஊறும்போது சட்டென நமக்கு தோன்றுவது எது? ஒரு அருவெறுப்பு, “ஐயே புழு” அதனை உதறி வீசி விட முயற்சிக்கிறோம். ஆனால் போகப்போக, தோட்ட வேலையில் ஆழ்ந்து சென்று கொண்டிருக்கும்போது அந்த புழுக்கள் உங்கள் மனதுக்கு பழக்கமாகி அதனை மென்மையாக எடுத்து கீழே வைக்கும் அளவுக்கு மனம் பக்குவமடைந்து போகிறது.
இது போலத்தான் ஒவ்வொன்றுமே, நாம் காணுகின்ற காட்சிகளை சட்டென ஒரு முடிவெடுத்து சொல்லி விடும் மனம், போகப்போக, அதற்கு நேர்மறையான முடிவுக்கு வந்து விடுகிறது.
இதுதான் மனித வாழ்க்கையிலும் நடை பெறுகிறது. பெண்ணோ ஆணோ புற அழகில் சட்டென மனதை பறி கொடுத்தாலும் போகப்போக அதனுடைய உண்மையை புரிந்து கொள்கிறார்கள். என்றாலும் ஆரம்பத்தில் மனம் சொன்னதையே பிடிவாதமாய் பிடித்து உண்மை என்று நம்பி வாழ்ந்தவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு.
வளம் வளமற்றவை என்று பிரித்து பார்த்து அழகு, அழகில்லாதவை என பிரிக்கும் மன நிலையும் உண்டு. மழையே பெய்யாமல் வறண்டு போன இடங்கள், நன்கு நீரோட்டமாய், மழை பெய்து பசுமையான வெளிகள், சுற்றிலும் பனியால் சூழப்பட்ட பகுதிகள், காடு சூழ்ந்த இடங்கள், இப்படி எண்ணற்ற முறைகளில் இயற்கை தன்னுடைய இடங்களை அமைத்து கொண்டிருக்கிறது. அந்த இடங்களில் மனிதன் மற்றும் ஏனைய ஜீவராசிகள் வாழ்ந்து மறைந்து கொண்டிருக்கின்றன.
இதில் மனிதன் மட்டும் வாழ்வதற்குரிய வசதிகளை தானாகவே ஏற்படுத்தி கொள்கிறான், மற்ற ஜீவராசிகளுக்கு இயற்கை அதற்கான வசதிகளை அதனுடைய உடலமைப்பில் ஏற்படுத்தி தந்து விடுகிறது.
மனிதர்களாகிய நாம் மட்டுமே இவைகள்தான் அழகு, மற்றவை எல்லாம் அழகில்லாதவை என்று பிரித்து பார்த்து நமக்குள் மகிழ்ந்து கொள்கிறோம். அதற்கும் இயற்கை வழி செய்து ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு எண்ணங்களை கொடுத்து அவரவர்க்கு அதது அழகு அழகில்லை என பிரித்து பார்க்க வைத்து விடுகிறது. என்றாலும் இத்தகைய குணத்தை, நாம் மேற்கொண்டிருக்கிறோம், என்பதை இயற்கை நம்மை பார்த்து கிண்டலாய் சிரித்து கொண்டிருப்பது தெரியாமல்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Mar-23, 10:28 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 90

மேலே