தலையுள் குறுக்கண்ணி யாகி விடும் - பழமொழி நானூறு 294

நேரிசை வெண்பா

ஒருவன் உணரா(து) உடன்றெழுந்த போருள்
இருவ ரிடைநட்பான் புக்கால் - பெரிய
வெறுப்பினால் போர்த்துச் செறுப்பின் தலையுள்
குறுக்கண்ணி யாகி விடும். 294

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஒருவன் ஆராயாது மாறுபட்டுச் சினந்து எழுந்தபோரில் அவ்விருவருக்கும் இடையே நட்பாக்கும் பொருட்டுப் புகுந்தால், தன் சொற்களைக் கேளாது மிக்க வெறுப்பினால் மீண்டும் போர் தொடுக்கும் உள்ளத்தராயின் எருதின் தலையிலுள்ள சிறிய கயிற்று முடிச்சைப் போல் திருத்த முடியாதாம்.

கருத்து:

தன்சொல் கேளாதவரைத் திருத்தப் புகலாகாது.

விளக்கம்:

குறுங்கண்ணி - குறுக்கண்ணி என வலித்தது. எருதின் தலையில் கட்டியிருக்கும் குறுகிய கயிற்றை அச்சத்தால் திருத்த முடியாதவாறு போல், தன் சொற்களைக் கேளாதார் பூண்ட பகைமையும் திருத்த முடியாதாம்.

'தலையுள் குறுக்கண்ணி யாகிவிடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Mar-23, 6:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே