156 இல்வாழ்வார் இருவரும் இயற்கையில் ஒருவரே - கணவன் மனைவியர் இயல்பு 48

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3, மா அரையடிக்கு)

ஒருதருமற் றொருதருவி னுதவியின்றிக் காய்க்கும்
..உயராண்பெண் சேர்க்கையின்றி யொருமகவுண் டாமோ
இருமையின்றி யிருவருமே நம்மனைநம் பொருணம்
..இகுளைநஞ்சேய் எனப்பொதுவி னியம்புரிமை யாலும்
உருவமொன்றா லாண்பெண்ணை யமைத்தனன்முன் பரனென்(று)
..உயர்ந்தோர்சொல் வதுநிசமா முரியோனில் லென்னும்
இருவ’ர்’கள்தம் நயந்துயரம் ஏகமெனக் கருதி
..இட்டமொடு பெட்டமரிற் கட்டமவர்க் குளதோ. 48

- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”ஒரு மரத்திலே ஆண் பெண் பூக்கள் அமைந்திருப்பதால், அம்மரம் வேறு ஒரு மரத்தின் உதவியில்லாமல் காய்க்கும்.

ஆனால், பிறப்பில் உயர்ந்த உயர்திணை ஆண் பெண் என்னும் இருவரின் குடும்ப வாழ்க்கையின்றி மகப்பேறு உண்டாகுமா?

வேறுபாடின்றி இருவரும் ஒருமை எண்ணத்துடன் நம் வீடு, நம் பணம், நம் சுற்றம், நம் பிள்ளைகள் எனப் பொதுவாகவே சொல்லுகின்றார்கள். அவ்வுரிமையாலும், ஆண்டவன் முன்னாளில் ஆண்பெண்ணை ஓருடம்பினின்றும் படைத்தான் என்று ஆன்றோர் கூறுவது உண்மையாம்.

தலைவன் தலைவியென்னும் இருவரும் இன்ப துன்பங்களை ஒன்றெனக் கருதி விருப்பமுடன் பொருந்தி வாழ்ந்தால், துன்பம் அவர்க்கு ஏதும் உண்டோ?”.

இல்லை என்றும், இல்வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் இணைந்து வாழவேண்டும் என்று இப்பாடலாசிரியர் அறிவுறுத்துகிறார்.

(விலங்கு முதலிய சிற்றுயிர்கள் இனம் பெருக்கக் கூடினாலும் பெரும்பாலும் தனித்தனியாகப் பிரிந்தே வாழ்கின்றன)

தரு - மரம். சேர்க்கை - குடும்பவாழ்க்கை.
பொருள் - பணம். இகுளை - சுற்றம்.
பரன் - ஆண்டவன். நயம் - இன்பம்.
ஏகம் – ஒன்று, ஒருமை. இட்டம் - விருப்பம். பெட்டம் - பொருத்தம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Mar-23, 8:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே