606 மங்கையர்க்கு நன்குணர்த்தல் ஈன்றோர் மாண்பு - மாதரைப் படிப்பித்தல் 2
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)
தீதறத் தன்மையுந் தெய்வ நேயமும்
ஓதரி யதானவில் லறவொ ழுக்கமும்
காதலர் வலர்த்தலுங் காந்தர்ப் பேணலும்
மாதருக் குணர்த்தல்ஈன் றோர்க்கு மாண்பரோ. 2
- மாதரைப் படிப்பித்தல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
பிறப்பு முதலாகிய தீமை எல்லாம் அகன்று, சிறப்பு முதலாகிய செல்வமெல்லாம் பெற்று வாழும்படி நல்லொழுக்கமும், கடவுளன்பும், சொல்லுதற்கரிய இல்லற மாண்பும், பிள்ளைகளை வளர்த்தலும் கணவனைப் பேணுதலும் ஆகிய உய்யும் முறைமைகளைப் பெண்மக்கட்குக் கல்வி வழியாகக் கட்டுரைத்தல் வேண்டுவது தாய்தந்தையர் தனிக்கடமையாம். அதுவே அவர்கட்கு நன்மையுமாகும்.
தீதற - தீமையகல. நேயம் - அன்பு. ஓதரிய - சொல்லி முடியாத. காதலர் - பிள்ளைகள்.
காந்தன் - கணவன். மாதர் - பெண்கள். ஈன்றோர் - தாய்தந்தையர். மாண்பு - நன்மை.