607 பெண்பாலார் கல்வியெலாம் ஆண்பாற்குப் பெரும்பொருளாம் - மாதரைப் படிப்பித்தல் 3

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளச்சீர் அருகி வரும்)

வாணியுமை கமலையௌவை முதலியவர் மாதரன்றோ
..மைந்தர் நாவைக்
காணிகொள்வா டனைப்போன்ற மடந்தையர்நாச் சேராளோ
..கதிரோ னில்பார்
சேணிகருங் கல்வியிலா மாதரகம் படித்துணரத்
..தீட்டப் பாடப்
பூணிழையார் அறிகுவரேல் நிதியமது போலுமுண்டோ
..புருடர்க் கம்மா. 3

- மாதரைப் படிப்பித்தல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

அறிவும் ஆற்றலும் ஆக்கமும் ஆகிய செல்வநலன்களை முறையே அருளும் கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகிய தெய்வங்கள் பெண்பாலாகும்.

இம்மூன்றும் ஒருங்கு ஓர் உருவெடுத்தாற் போன்று கண்காண் தெய்வமாய்த் திகழ்ந்து எல்லார்க்கும் எல்லா நிலையிலும் ஏற்புடைய அறநூல்கள் பலவருளி நெடுநாள் வாழ்ந்து தமிழோம்பிய தமிழ்த்தாய் ஒளவையார் பெண்பாலராவர்.

ஆகவே, பெண்பாலார்க்கே கல்வி முதலுரிமை. ஆண்பாலார் நாவிலுறைந்து நன்மொழி பயில நயந்தருளும் கலைமகளாகிய நாமகள் தன் இனமாகிய பெண்பாலாரைச் சாராளென்று எண்ணுதல் பேதைமையன்றோ?

படிப்பில்லாத பெண்கள் ஞாயிறில்லாத மண்ணும் விண்ணும்போல் மனமழுங்கி மதியின்மையான் மாண்பிலாராவர்.

அழகிய இழையணிந்த பெண்பாலார் உளங்கிளர்ந்து படித்துணரவும் எழுதவும் பாடவும் அறிவாரானால் அதைவிடச் சிறந்த செல்வம் ஆண்பாலார்க்கு வேறு என்னிருக்கின்றது? (ஒன்றுமில்லை யென்பது கருத்து)

வாணி - கலைமகள்; நாமகள். உமை - மலைமகள். கமலை - அலைமகள்; திருமகள்.
மாதர் - பெண்பாலார். காணி - உறைவிடம். மடந்தையர் - பெண்பாலார். கதிரோன் - ஞாயிறு.
பார் - மண். சேண் - விண். நிகரும் - ஒக்கும். தீட்ட - எழுத. நிதியம் - செல்வம். புருடர் - ஆண்பாலார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Mar-23, 5:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே