நம்பிக்கை, அவநம்பிக்கை

நம்பிக்கை, அவநம்பிக்கை

கடவுள் இருக்கிறார், என்று சொல்பவர்கள், கடவுள் இல்லை என்று சொல்பவர்கள், இருவர் கொண்டிருந்த கருத்துக்களுமே, அவரவர் நம்பிக்கை அடிப்படையிலேயே அவர்களால் சொல்லப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் கடவுள் இருக்கிறார், இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று தன் நம்பிக்கையை அவரே மறுத்து கூறுவாராயின் அது அவரிடம் இருக்கும் அவநம்பிக்கை.
இதேபோலத்தான் கடவுள் இல்லை என்பவர்களும் , இருந்தாலும் இருக்கலாம் என்று தாங்கள் கொண்ட நம்பிக்கையில் ஊசலாட்டமாய் இருந்தால் அது அவர்களிடம் இருக்கும் அவநம்பிக்கை.
இங்கு சொல்ல வருவது என்னவென்றால் நாம் வாழ்க்கையில் கடைபிடித்து கொண்டிருக்கும் நம்பிக்கை, அவ நம்பிக்கை இவைகளின் அடிப்படை குணங்கள் மட்டுமே, அலசப்படுகிறது. மற்றபடி அவைகளின் நன்மை, தீமை, அதற்கான அறிவுரை இதை பற்றி இக்கட்டுரை குறிப்பிடப்படவில்லை.
ஏதோ இருக்கிறது, இது கிடைக்கும், அங்கு போனால் அவர் இருப்பார், போன்ற எதிர்பார்ப்புடன் கூடிய திடமான எண்ணங்கள் நம்பிக்கை என்று சொல்லப்படும்.
மேற் கூறப்பட்டவைகள் போலவே அங்கு இருந்தாலும் இருக்கலாம், கிடைத்தாலும் கிடைக்கலாம், இருப்பார், இல்லாமலும் போகலாம், இவைகள் போன்ற எண்ணங்களை கொண்டிருந்தால் அதை அவநம்பிக்கை எனலாம்.

தன்னம்பிக்கைக்கும் நம்பிக்கைக்குமே சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன. பொதுவான ஒரு செயல் நடக்கும், இருக்கும், கிடைக்கும், என்று நம்புவது நம்பிக்கை. அது கண்டிப்பாய் கிடைக்கும், கண்டிப்பாய் இருக்கும், கண்டிப்பாய் நடக்கும், என்று சொல்வது தன்னம்பிக்கை.
எனக்கு கிடைக்கும், நமக்கு கிடைக்கும் போன்ற வார்த்தைகள் ஒருமை பன்மையால் விளிக்கப்பட்டாலும் அது தன்னம்பிக்கை வார்த்தைகளாகத்தான் கொள்ளப்படும்.

நம்பிக்கை
ஒரு செயலை செயல்படுத்த போகும் முன் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய மன உறுதி நம்பிக்கை.
இந்த நம்பிக்கை நாம் எந்த செயலையும் செய்விக்க ஊக்கமுற செயல்பட அனுமதிக்கும்.
“நம்பிக்கைதான் வாழ்க்கை” என்பார்கள். உண்மைதானே நாளை இருப்போம் என்பதும் நம்பிக்கைதான், அந்த நம்பிக்கையை வைத்துதானே ஒவ்வொரு நாளையும் தொடங்கி முடித்து கொண்டிருக்கிறோம்.
இன்று மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களும் “இப்பொழுது நிச்சயம்” என்னும் எண்ணத்தில் தன் வாழ்க்கையின் அடுத்த அடியை எடுத்து வைத்து நகர்த்தி கொண்டிருக்கின்றன.
இந்த உலகமே நம்பிக்கை அடிப்படையில்தான் இயங்கி கொண்டிருக்கின்றன என்று சொன்னாலும் தவறில்லை. நாம் சாதாரணமாக இருக்கிறோம், ஒன்றும் தெரியவில்லை, நாம் வாழும் பூமியை காட்டுகிறார்கள், அது அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கிறது. நம்முடைய எண்ணம் இப்படி போகிறது பூமி விழுந்தோ விட்டால்..? இந்த இடத்தில் பல லட்சம் ஆண்டுகளாக பூமி இப்படித்தான் இயங்குகிறது, இனியும் இப்படித்தான் இயங்கும் என்பதும் நம்பிக்கைதானே.
இப்படித்தான் ஒவ்வொன்றுமே நம்பிக்கை என்னும் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கிறது.
நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைகளில் கூட நம்முடைய எண்ணங்கள் (எதிர்கால சேமிப்பு, சொத்து வாங்குதல், வாரிசுகளுக்கு கல்விக்காக செலவு செய்தல், இன்னும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.இவையெல்லாம் எதன் அடிப்படையில் செய்கிறோம். நம்முள் இருக்கும் நம்பிக்கை என்னும் எண்ணத்தால் மட்டுமே.
அவ நம்பிக்கை
அவ நம்பிக்கை என்பது மோசமானது, வாழ்க்கையை குட்டி சுவராக்கி விடும் என்று பல கருத்துக்கள் இருக்கின்றன.
அவ நம்பிக்கையால் பல செயல்பாடுகள் செயல்படுத்த முடியாமலேயே போனாலும், ஒரு சில செயல்பாடுகளில் அவ நம்பிக்கை நமக்கு உதவத்தான் செய்கிறது.
எதையும் சந்தேக கண்கொண்டு பார்க்கும் பார்வை அவ நம்பிக்கையுடையது. இது நமக்குள் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தினாலும், இதே குணத்தை ஒரு சில இடங்களில் நாமும் கடை பிடிக்கத்தானே செய்கிறோம்.இதுவும் மனதின் ஒரு எச்சரிக்கைதானே.
எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வது என்னும் பழக்கம் நமக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தி விடத்தான் செய்கிறது. அப்பொழுது நமக்கு படிப்பினையாக கிடைப்பது அவநம்பிக்கைதான். இதில் தவறு ஒன்றுமில்லையே. இது நம்மை எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை படுத்தி “அவனை நம்பாதே” “அவர்களை நம்பாதே” என்றபடி நம் மனதுக்குள் எண்ணத்தை உருவாக்கி கொடுக்கிறதே.
சில நேரங்களில் அவநம்பிக்கை நம்மிடையே ஒரு எதிர்பார்பற்ற மன நிலையை உருவாக்கி அதன் மூலம் நம்முடைய செயல்பாடுகளை முடுக்கியுமிருக்கிறது, முடக்கியுமிருக்கிறது.
இன்னொரு உண்மை என்னவென்றால் எப்படி மனித வாழ்க்கையில் உண்மை,பொய், நன்மை, தீமை போன்றவைகள் பின்னி பினைந்திருக்கிறதோ அதுபோலவே நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டும் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவைகள் அவ்வப்பொழுது நம் மனதுக்குள் எழுந்து நாம் செயல்படுத்த போகும் எந்தவொரு காரியத்தையும் வழி நடத்துவதற்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறது. நம்பிக்கை வைக்கும் இடத்தில் நம்பிக்கை வை, அதே நேரத்தில் அவநம்பிக்கை கொள்ளும் இடத்தில் அவநம்பிக்கையுடனேயே இருந்து நம்மை எப்பொழுதும் உசார் நிலையில் வைத்திருக்கவும் செய்கிறது.
உதாரணமாக சொல்வதென்றால் தனி மனிதன் வயதான காலத்தில் தான் வாழ்வதற்கு சேமித்தல், அவனுடைய வாரிசுகள் மீது அவ நம்பிக்கை வைத்து இப்படி சேமிக்கிறான் என்று சொல்ல முடியாது. அவனுக்கு அவநம்பிக்கை உணர்த்தி கொடுக்கும் எண்ணம் “யாரையும் நம்பாதே” கடைசி காலத்தில் உன்னுடைய சேமிப்பே உன்னை காப்பாற்றும். எனபதுதான்.
நம்பிக்கை, அவ நம்பிக்கை இரண்டையுமே நம் வாழ்க்கையில் அடிப்படையாக வைத்திருப்பதில் தவறொன்றுமில்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Mar-23, 3:53 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 169

சிறந்த கட்டுரைகள்

மேலே