242 அளவில்லா ஆசையால் பொருளெல்லாம் சூதில் இழப்பர் – சூது 6
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
வட்ட மாநில மீதுமன் னார்விடம்
இட்ட பாலை யினிதளித் தாலெனக்
கட்ட மேவுங் கழகத்தில் வென்றுகொள்
ஒட்டங் கையினி லொட்ட மளிக்குமால். 6
- சூது, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை
”உருண்ட பெரிய உலகத்தில் பகைவர், நஞ்சு கலந்த பாலை மகிழ்வுடன் தருவது போல, துன்பமே பெருகும் சூதாடும் இடத்தில் வென்று கிடைத்த பந்தயப் பொருள் மேலும் மேலும் பொருளிழக்கும் ஆசையை உண்டாக்கிக் கையில் ஓட்டைத் தரும்” என்றும்,
அளவில்லாத ஆசையால் மேலும் கைப்பொருள் கொண்டு சூதாட்டம் ஆடிப் பொருளெல்லாம் இழப்பார்கள் என்றும் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.
மன்னார் - பகைவர். கட்டம் - துன்பம். கழகம் - சூதாடுமிடம். ஒட்டம் - ஆசை. ஒட்டு - ஓடு.