நாமே பிய்த்துக்கொள்ளும் நகமும் முடியும்

சில நாட்களுக்குமுன்பு நான் யூடியூபில் ஏதோ ஒரு நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட நேரங்களில் நான் அறிந்தோ அறியாமலோ என் நகங்களை கைகளினால் மெல்ல மெல்ல பிய்த்துக்கொண்டே இருப்பேன். வாரத்தில் ஒருமுறை நான் கை கால் நகங்களை நகவெட்டி கொண்டு வெட்டிவிடுவதால், அப்படி வெட்டிவிட்டு இரண்டு நாட்கள் வரையில் நான் முயன்றாலும் நகங்களை பிய்த்து எரிய வாய்ப்பில்லை.
இப்போதெல்லாம், நான் என் கை நகங்களை நானே பிய்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது நன்றாகவே தெரிகிறது (மௌனம் தியானம் தினமும் அனுசரிப்பதால்?). இருப்பினும் இந்த பழக்கத்தை முழுதும் கட்டுப்படுத்தமுடியவில்லை. மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியை நான் தொலைக்காட்சி பெட்டியில் பார்த்துக்கொண்டிருக்கையில், என் இடது கையில் உள்ள நடுவிரலின் நகத்தை கொஞ்சம்கொஞ்சமாக பிய்க்க ஆரம்பித்தேன். அப்படிச் செய்கையில், இடையிடையே எனக்கு தோன்றியது, ‘இதற்குமேல் வெட்டினால் அந்த நகம் காயமடைந்துவிடும்’ என்று. எனவே அந்த நகத்தை பிய்க்கையில் மிகவும் கவனமாக இருந்தேன். ஆனால் நிகழ்ச்சியை பார்க்கின்ற சுவாரஸ்யத்தில் என்னை அறியாமலேயே அந்த நகத்தை மிகவும் அதிகமாக பிய்த்துவிட்டேன். எப்படி என்றால், நடுவிரலில் நகம் பிய்ந்து தொங்கியது. நகத்தை மிகவும் அதிக அளவில் பிய்த்துவிட்டதால் அது விரலின் தசையை காயப்படுத்திவிட்டது. எனவே நகத்தை முழுவதும் பிய்த்து எடுக்க முடியவில்லை. கத்தரிக்கோலால் கூட வெட்டுவது முடியாமல் போய்விட்டது. இன்று மூன்றாவது நாள், இடது கையின் நடு விரலில் இன்னமும் வலி இருக்கிறது. பிய்ந்த நகம் தன்னாலேயே உதிர்ந்துவிட்டது. இந்த சம்பவத்திற்கும் அதனால் ஏற்பட்ட வலிக்கும் காரணம் யார்? சந்தேகம் இல்லை , நானே தான்.

இப்படிப்பட்ட அனுபவங்கள் உங்களுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். சிலர் முகத்திலிருந்தும் மூக்கிலிருந்தும் உடம்பிலிருந்தும் முடிகளை பிய்த்தவண்ணம் இருப்பார்கள். இப்படி செய்கையில் நல்ல வலி இருக்கும். இருப்பினும் இப்படி செய்ய பழக்கப்படுத்திக்கொண்டவர்கள் இதைச்செய்தவண்ணம்தான் இருப்பார்கள். ஏன் மற்றவர்களை மட்டும் சொல்லவேண்டும்? நானே கூட அவ்வப்போது தலையிலிருந்தும் உடம்பிலிருந்தும் வெள்ளை முடிகளை பிய்த்து எடுத்துவிடுகிறேன். இது நல்ல பழக்கம் இல்லை. என் மனைவி அவ்வப்போது இதை கவனித்து 'ஏன் இப்படி அருவருப்பான காரியங்களை எவ்வளவு முறை சொன்னாலும் செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று பலமுறை சொல்லியிருக்கிறாள். ஆனால் பழக்கம் என்று ஒன்று இருக்கிறதே, நாம் கோபப்படுவதைப்போல, நாம் நகைச்சுவை உணர்வை கொள்வதுபோல, பிறருக்கு துன்பம் எனில் கேட்டு மனம் வாடுவதைப்போல மட்டுமில்லாமல் இதுபோன்ற தேவையற்ற, அருவருப்பான காரியங்களுக்கும் பழகிவிட்டோம். வாலிபனாக இருந்தபோது முகப்பருக்களை பிய்த்துவிட்டு பிய்த்துவிட்டு அதனால் முகத்தில் கருப்பு புள்ளிகள் வந்து அதனால் நான் கொண்ட கவலையை எங்கேபோய் சொல்லி முட்டிக்கொள்வது?

இப்போதைக்கு நான் மிகவும் என்னை திருத்திக்கொண்டுவிட்டேன். இருப்பினும் அவ்வப்போது இந்த துஷ்ட பழக்கங்கள் தலையை தூக்குகிறது. இவைகளின் வால்களை ஓட்ட நறுக்கிவிட ஆவன முயற்ச்சிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன் என்பதை இங்கே திட்டவட்டமாக, அதே நேரத்தில் திட்டசதுரமாகவும் கூறுகிறேன்.

இப்படிப்பட்டச் சின்னச்சின்ன தவறுகள் அல்லது செயல்கள் நாம் தெரிந்து செய்து அதனால் படும் வேதனைகளையும் படுகிறோம். நம் வாழ்க்கையில் நடக்கும் இன்பத்துன்பம் யாவுமே, அறிந்தோ அறியாமலோ நாமே வரவழைத்துக்கொண்ட விருந்தினர்களே என்றுதானே உங்களுக்கும் தோன்றுகிறது?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (6-Apr-23, 8:13 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 40

மேலே