இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனிதநேயமும் நூல் ஆசிரியர் முனைவர் வா நேரு நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
இறையன்பு படைப்புகளில்
தன்னம்பிக்கையும் மனிதநேயமும்
நூல் ஆசிரியர் : முனைவர் வா. நேரு
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
எம்ரால்டு பதிப்பகம், 150, முதல் மாடி, காஜா மேஜர் சாலை,
எழும்பூர், சென்னை-8.
பக்கங்கள் : 245, விலை : ரூ.350.
முனைவர் வா. நேரு அவர்கள் கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களை ஆய்வு நெறியாளராகக் கொண்டு முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்த ஆய்வேட்டினை சிறப்பான நூலாக வடிவமைத்து உள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று நூலாக வடித்துள்ளார்.
இனிய நண்பர் வா.நேரு அவர்கள் BSNL நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கடுமையாக உழைத்து இவ்வாய்வை முடித்து உள்ளார். தற்போது பணி நிறைவு பெற்று விட்டார்.
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் முழு வரலாறு நூலில் உள்ளது. அவரைப்பற்றி பலரும் அறிவர். அவரது குடும்பப்பின்னணி வரலாறு பலரும் அறியும்வண்ணம் தெளிவாக விரிவாக எழுதி உள்ளார். மிகச்சிறந்த ஆளுமையான இறையன்பு அவர்களைப் பற்றி பவ்லேறு பரிமாணங்களையும் நூலில் வடித்து உள்ளார்.
மொழி வரலாறு, இலக்கிய வரலாறு சொல்லி, இறையன்பு அவர்களின் வரலாறு, படைப்பின் வகைகள், படைப்பின் தன்மை, நோக்கம் என விரிவாக விளக்கி உள்ளார். படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது. மனதில் சோர்வு, கவலை, விரக்தி வந்தால் இந்த நூல் எடுத்துப் படித்தால் அனைத்தும் போய்விடும். தன்னம்பிக்கை வளர்க்கும் புத்துணர்வு, புதுத்தெம்பு தரும் “டானிக்” போன்ற நூலாக மலர்ந்துள்ளது. பாராட்டுகள்.
முனைவர் பட்ட ஆய்வு நூல்கள் பல படித்துள்ளேன். படிக்க சுவையாக இருப்பதில்லை. ஆனால் இந்நூல் சுவையாக உள்ளது. படிக்க ஆர்வமாகவும் உள்ளது. ஆய்வுக்கு உதவிய அனைவரின் பெயரும் பதச்சோறாக எழுதி நன்றி நவின்று உள்ளார். நூலிலிருந்து சில வரிகள் இதோ.
“அரசுப்பணியில் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தபோதும், இலக்கியப் பங்களிப்பைத் தொடர்ச்சியான செயல்பாடாகக் கொண்டு பல்வேறு அனுபவங்களைத் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்”.
“இறையன்பு எழுத்தாளர் மட்டுமல்ல, பேச்சாளராகவும் தம்மைத் தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொண்டே வருகிறார். இதுவரை இரண்டாயிரம் கூட்டங்களுக்கு மேல் பேசியது மட்டுமல்லாமல், பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று தன்னம்பிக்கை பற்றியும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், மாணவர்களிடையே கலந்துரையாடி வருகிறார்!”
இப்படி நூல் முழுவதும் முதுமுனைவர் இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் சிறப்பியல்பை நற்குணங்களை படம்பிடித்துக் காட்டி உள்ளார். தன்னம்பிக்கை விதை விதைக்கும் படைப்புகளை படைத்ததோடு மட்டுமன்றி மேடைகளில் பேசியும் எழுதியும் இருவேறு துறையில் முத்திரை பதித்த காரணத்தால் தான், சிறந்த ஆளுமை என்பதால், நேர்மையாளர், பண்பாளர் என்பதால் “தலைமைச் செயலர்” பதவி அவரைத்கு தேடி வந்தது என்றால் மிகையன்று.
இறையன்பு அவர்கள் பன்முக ஆற்றலாளர். கவிதை, கதை, நாவல், கட்டுரை என இலக்கியத்தின் அத்தனை வகைப்பாடுகளிலும் படைப்புகள் வழங்கியவர் என்பதை ஒவ்வொரு நூல்களையும் வரிசைப்படுத்தி அதில் உள்ள சிறந்த கருத்துக்களை எடுத்து எழுதி உள்ளார்.
நூலாசிரியர் வா. நேரு அவர்கள் முனைவர் பட்ட ஆய்வு முடித்த பின்னும் பல படைப்புகள் படைத்து விட்டார் இறையன்பு அவர்கள். அவர் ஆய்வு செய்த காலத்தில் வெளிவந்த அனைத்து நூல்களையும் பெற்று சிறப்பான ஆய்வை செய்துள்ளார். துணைநூல்பட்டியல்களும் இடம் பெற்றுள்ளன.
ஆய்வு நெறியாளராக இருந்த கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களையும் பாராட்ட வேண்டும். அவரது நெறிப்படுத்தல் காரணமாகவே இந்த ஆய்வு சிறப்பான ஆய்வாக அமைந்துள்ளது.
இந்த ஆய்வேடு வாழும் காலத்திலேயே ஒரு படைப்பாளிக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பு எல்லா படைப்பாளிகளுக்கும் வாய்ப்பதில்லை. முனைவர் பட்ட ஆய்வுக்குரிய பரந்துபட்ட தலைப்புகளில் எழுதியதன் காரணமாகவே இது சாத்தியமானது.
‘ஆத்தங்கரை ஓரம்’ நாவல் தொடங்கி ஐ.ஏ.எஸ். தொடர்பான கட்டுரை நூல்கள் வரை படிப்பது சுகமே. ஒரு நதியின் ஓசை – I,II ; ஏழாவது அறிவு ; உள்ளொளிப்பயணம் ; மென் காற்றில் விளை சுகமே ; வேடிக்கை மனிதர்கள் ; வாழ்க்கையே ஒரு வழிபாடு ; முகத்தில் தெளித்த சாரல் – இப்படி பல நூல்களில் நிறைந்திருந்த தன்னம்பிக்கை கருத்துகளை எடுத்து இயம்பி திறம்பட நூலாக்கி உள்ளார்.
இந்த ஆய்வேடு படித்த போது, நான் எழுதிய ‘இறையன்பு கருவூலம்’ நூல் என் நினைவிற்கு வந்து போனது. மலரும் நினைவுகளை மலர்வித்தது.
திருக்குறள், சங்க இலக்கியம், பாவேந்தர் பாரதிதாசன் வைர வரிகள், பாரதியார் வரிகள் போன்றவற்றை ஒப்பிட்டு மேற்கோள் காட்டி இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்தது சிறப்பு.
பிற மனிதர்களை நேசித்தல்
பிற மனிதர்களுக்கு இரக்கப்படுதல்
பிற மனிதர்களின் உயர்வுக்காக வாழ்தல்
உலகம் உய்யத் தன்னை அளித்தல்
பண்புடைமையை வாழ்வாதாரமாக அமைத்துக் கொள்ளுதல்
என மனிதநேயத்தை பட்டியலிட்டுள்ளார். பட்டியலிடுவதோடு மட்டுமன்றி வாழ்வில் கடைபிடித்து வருபவர். சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத மனிதர். பல்வேறு திறமைகள் இருந்தாலும் மனிதநேயத்திற்கு முன்னுரிமை தந்து படைத்ததோடு மட்டுமன்றி, வாழ்வில் தினந்தோறும் கடைபிடித்து வருபவர். நலிந்த மக்களுக்காக பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருபவர் இறையன்பு அவர்கள்.
நூலாசிரியர் முனைவர் வா. நேரு அவர்களின் கடின உழைப்பை, தேடலை, மெனக்கெட்டதை அறிய முடிகிறது. பாராட்டுகள். இந்த நூல் இறையன்பு அவர்களுக்கு ஒரு வைரக் கிரீடம் என்றே சொல்லலாம்.