முத்தம் கொடுங்க ஆனால் தனிமையில்

மனிதன் முதன் முதலில் அனுபவிப்பது, பிறந்தவுடன் அவன் தாய் தரும் தெய்வீக அன்பு கமழும் பாசமுத்தத்தை. பள்ளிப்பருவம் வரை இது தொடர்கிறது. தோளுக்கு உயர்ந்தவன் தோழன் என்பதுபோல ஒருவன் பத்துவயதைத் தொட்டவுடன் தாய் தந்தை தரும் முத்தம் படிப்படியாக குறையத் துவங்குகிறது.
சுமார் பன்னிரண்டு வயதில் ஒருவரது பாலியல் எண்ணம் மெதுவாக ஒருவரது மனதில் வித்திட்டு, படிப்படியாக அந்த எண்ணம் ஓங்குகிறது. பதினான்கு பதினைந்து வயதி எட்டுகையில் ஒருவருக்கு பாலியல் எண்ணம் அதிகமாகவே சுரக்கிறது. எனவேதான் பதினான்கு முதல் பதினாறு வயது மிகவும் விடலைப்பருவமாக கருதப்படுகிறது. மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், இந்த வயதில் தான் டேட்டிங் என்று சொல்லப்படும், ஒரு வாலிபனும் ஒரு கன்னிப்பெண்ணும் முதன் முதலில் சந்தித்து நெருங்கி பழகும் நாள், மிக அதிக அளவில் நடக்கிறது. இதில் பெரும்பான்மையான ஜோடிகள் காமத்தின் எல்லையை அனுபவித்துவிடுகின்றனர். இந்த டேட்டிங் என்பது ஒரு வாலிபன் அல்லது ஒரு கன்னிப்பெண் என்ற அளவில் முடிந்துவிடுவதில்லை. மாறாக வாலிபர்கள் பல கன்னிப்பெண்களுடனும் அதைப்போலவே கன்னிப்பெண்கள் பல வாலிபர்களுடனும் இந்த டேட்டிங் உறவை வைத்துக்கொள்கிறார்கள்.
நம் நாட்டிலும் இந்த டேட்டிங் ஆங்காங்கே மறைமுகமாக நடக்கின்றது என்று சில செய்திகளின் வாயிலாக கேள்விப்படுகிறேன். சமுதாயத்தில் இந்த டேட்டிங் மூலம் எத்தகைய மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் இருக்கும் என்று ஓரளவுக்கு நாம் யூகிக்கமுடியும். இந்தியாவில் இப்போது அதிகமாகிவரும் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் இத்தகைய டேட்டிங் மூலமாகத்தான் அதிகரித்துவருகிறது என்றால் அது மிகையாகாது.

சரி, இப்போது முத்தத்திற்கு வருவோம். டேட்டிங், காதல் என்று நடக்கும்போது ஒரு பெண்ணும் ஆணும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுப்பது, நாம் திரைப்படங்களில் பார்ப்பது (சில நல்லவற்றை, பல தீய விஷயங்களை பொதுமக்களுக்கு சுலபமாக கற்றுத்தரும் ஊடகம் திரைப்படம் என்றால் அது மிகையாகாது), சில சமுதாய நிகழிச்சிகளில் கவனிப்பது, ஏன் சில பூங்காவிலும் கண்டும் காணாமல் போகும் நிகழ்ச்சிகள்தான். ஒருவரை விரும்பும் ஒருவர், முத்தம் கொடுத்துக்கொள்வதில் உங்களைப்போலவே எனக்கும் ஒரு ஆட்சேபணையும் இல்லை. ஆனால், முத்தம் கொடுப்பது காமத்தின் முதற்கட்டம் என்பதை நாம் அறிவோம். அதுவும் கன்னத்தில் முத்தம் கொடுப்பது, உதட்டில் முத்தம் கொடுப்பது இது போன்றவை அந்தரங்கத்தில் நிகழவேண்டிய செயல்கள்தானே தவிர பொதுஇடங்களில் அல்ல.

அமரிக்காவும் மற்றைய மேற்கத்தைய நாடுகள் பலவற்றிலும் ஒருவரின் முன்னேற்றத்திற்கு வேண்டிய வசதிகளும் அனுகூலங்களும் எவ்வளவு இருக்கிறதோ அதைப்போலவே பொது இடங்களில் முத்தம் கொடுக்கும் ஒரு அருவருக்கத்தக்க பழக்கம் அந்த காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பொது இடங்களில் முத்தக் காட்சிகள் இடம்பெறாத ஆங்கில மற்றும் மற்றும் இதர மேலைநாட்டு மொழிப்படங்கள், ஆவணப்படங்கள் , தொலைக்காட்சி தொடர்கள் எதாவது ஒன்று இருக்கிறதா என்றால் அது சந்தேகமே. அதுவும் வெறுமனே கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தை நான் சொல்லவில்லை. ஒருவர் உதடுகளால் இன்னொருவர் உதடுகளில் தரும் 'பிரெஞ்சு கிஸ்' ஸைத்தான் சொல்கிறேன்.
டேட்டிங் என்று முடிவு எடுத்தவுடன் ஒரு கிஸ்ஸிங், டேட்டிங்கின்போது கிஸ்ஸிங்குடன் சகலமும், அலுவலகத்தில் சந்தித்துக்கொண்டால் கிஸ்ஸிங், ஷாப்பிங் மாலில் சந்தித்துக்கொண்டால் கிஸ்ஸிங், ஒரு சண்டை நடக்கையில் கிஸ்ஸிங், அந்த சண்டை முடிகையில் கிஸ்ஸிங், ஒரு வாரம் தனித்து செல்ல பிரிகையில் கிஸ்ஸிங் , வெளியூர் செல்லும்போது கிஸ்ஸிங், வெளிநாடு செல்லும்போது கிஸ்ஸிங், திரும்பிவரும்போது கிஸ்ஸிங் , சின்ன காயம் பட்டு ஒருவர் இன்னொருவரை பார்க்கையில் கிஸ்ஸிங், ஆஸ்பத்திரிக்கு போகையில் கிஸ்ஸிங் , ஆஸ்பத்திரியில் இருக்கையில் கிஸ்ஸிங், அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகையில் கிஸ்ஸிங். இப்படி வாய்மூலம் நீண்ட முத்தம் தரும் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. இதற்குமேலும் ஒரு கொடுமை என்ன தெரியுமா? ஒரு காதலனின் உறவினரோ அல்லது காதலியின் உறவினரோ அல்லது நண்பரோ இறந்துவிட்டால் அதற்கும் கூட இந்த பிரெஞ்சு கிஸ்ஸிங் கொடுப்பது கொஞ்சம் அல்ல மிகவும் ஓவராக இருப்பதாகவே தோன்றுகிறது. எப்படி நம் இந்தியத் திரைப்படங்களில் காதல் பாடல்களும் நகைச்சுவையும் வருகிறதோ அதைவிட இரண்டு மடங்கு ஆங்கில படங்களில் இந்த நீண்ட பிரெஞ்சு கிஸ்ஸிங் கொடுப்பது.

குறிப்பாக, ஓரளவுக்கு பதியும் ஆன்மீகமும் அதிகம் புழக்கத்தில் இருக்கும் நம் அருமை நாட்டிலும், இதுபோன்ற மேற்கத்திய முத்தக் காட்சிகள் ஆரம்பித்துவிடுமோ என்கிற பயம் எனக்கு இருக்கிறது. பொது இடங்களில் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தையே எதிர்க்கும் நாம், இந்த பிரெஞ்சு கிஸ்ஸிங் முறையை ஆதரிப்போமா? நாம் ஆதரிப்பது ஆதரிக்காதது ஒரு புறமிருக்கட்டும். இன்றைய இளைஞர்கள் நிறையவே ஆங்கில பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்பதால் இவர்களும் பொது இடங்களிலும் வெறும் முத்தம் மட்டுமின்றி பிரெஞ்சு கிஸ்ஸிங்கையும் செய்து கூத்தடிக்கப்போகிறார்களா என்கிற சந்தேகம் உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறன்.
காதலன் காதலி, கணவன் மனைவி, முத்தம் கொடுத்து கட்டியணைப்பது இவையெல்லாம் மிகவும் இயற்கையே ஆனால் பொது இடங்களில் அல்ல தனிமையில் அந்தரங்கத்தில் என்பதுதான் என் கருத்து. இந்தச் செயல்கள் யாவுமே காமத்தின் ஒரு பகுதி என்பதால் இவை அந்தரங்கத்தில் நிகழ்ந்தால்தான், அதில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கண்ணியமும் மரியாதையும் இருக்கும் என்று நான் நினைக்கிறன். ஏற்கெனவே இந்த அஞ்சு-இஞ்சு அலைபேசி நம்மை ஆட்கொண்டு நம்மை உண்டு இல்லை என்று படுத்தியெடுப்பது போதாதா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (5-Apr-23, 7:33 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 31

மேலே