பொறாஅமை மேன்மேலும் செய்து விடுதல் அதுவன்றோ கூன்மேல் எழுந்த குரு - பழமொழி நானூறு 305

நேரிசை வெண்பா

உறாஅ வகையது செய்தாரை வேந்தன்
பொறாஅன் போலப் பொறுத்தால் - பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல் அதுவன்றோ
கூன்மேல் எழுந்த குரு. 305

- பழமொழி நானூறு

பொருளுரை:

செய்யத் தகாதனவற்றைச் செய்தவர்களை அரசன் புறத்தே பொறுக்காதவன் போன்றிருந்து இனித் தவறு செய்யமாட்டான் என்பது கருதி அகத்தே பொறுமை உடையனாயின் அவன் மீண்டும் மனம் பொறுத்துக் கொள்ள முடியாதவற்றை மேலும் மேலும் தொடர்ந்து செய்தல் கூனின் மேல் பெருத்து எழுந்த கட்டிக்கு ஒப்பாகுமல்லவா?.

கருத்து:

அரசன் பொறுமை உடையன் என்பது கருதித் தீமை செய்யற்க.

விளக்கம்:

பின்னது மனம் பொறாது அமைவன எனப் பெயராம். இதுவே அகரந்தொக்கு,

'பொறாமை' எனத் தீயகுணமொன்றற்குப் பெயராய்வரும். பொறான் போன்றது அவனை நல்வழி நிறுத்துதற் பொருட்டாம். அதுவுமறியாது மீண்டும் செய்வானாயின், அது மிக்க துன்பந் தருவதோடு, தம்மால் நீக்க முடியாததாய் விடும்.

முதுகின் கண் எழுந்த கட்டி துன்பந் தருவதோடு, தன்னால் நீக்க முடியாததாய் விடுதல் போல அஃது ஆகும் என்பதாம்.

‘கூன்மேல் எழுந்த குரு’ என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Apr-23, 8:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே