இடம்கொண்டு, தம்மினே என்றால், கொண்டார் வெகுளல் கைப்பாய் விடும் - பழமொழி நானூறு 304
நேரிசை வெண்பா
கடம்கொண்ட ஒண்பொருளைக் கைவிட்(டு) இருப்பார்
இடம்கொண்டு, ‘தம்மினே’ என்றால், - தொடங்கிப்
பகைமேற்கொண் டார்போல, கொண்டார் வெகுளல்,
நகைமேலும் கைப்பாய் விடும்! 304
- பழமொழி நானூறு
பொருளுரை:
தாம் கடனாகக் கொண்ட ஒள்ளிய பொருளை பிறரிடம் தம் கையினின்றும் விட்டிருப்பார் அவரிடத்தில் சென்று என்னிடம் பெற்ற பொருளைத் தரவேண்டுமென்று கேட்டால் தம்மோடு பகையினை மேற்கொண்டவரைப் போலத் தொடங்கி கடன் வாங்கியவர் சினத்தல் விளையாட்டாகச் செய்தவிடத்தும் மனதிற்குக் கசப்பாய் விடும்.
கருத்து:
கொடுப்பதாகக் குறித்த காலத்தில் தாங்கொண்ட பொருளைக் கொடாராயின் கடன்கொண்ட ஒண்பொருளை உடையார்க்கு மனக்கசப்பை உண்டாக்கும்.
விளக்கம்:
'கடங்கொண்ட ஒண்பொருளைக் கைவிட்டிருப்பார்' என்றது, ஒருவரிடத்தில் இன்ன காலத்திற்குள் கொண்ட பொருளைத் தருகின்றேன் என்று தமக்காக வாங்கி, தம்மிடத்தில் பொருள் உள்ளதை அறிந்து கேட்கும் தட்ட முடியாத ஒருவரிடத்துத் தாம் கூறியிருக்கின்ற வாக்குறுதியைக் கூறித் தம்பொருட்டு வாங்கிய பொருளை அவரிடம் கொடுத்திருப்பவர்.
'இடம் கொண்டு தம்மினே என்றல்' என்பது, தமக்குக் கடன் கொடுத்தார் குறித்த காலத்தில் வந்து பன்முறையும் கேட்க அது பொறாது தாம் கொடுத்த பொருளுடையார் இருக்குமிடம் சென்று பொருளைக் கொடுத்தல் வேண்டுமென்று பணிந்து கேட்பது.
'பகைமேற் கொண்டார் போல' என்றது, முன்னர் நட்பாயிருந்தவர் தான் கொடுத்ததைக் கேட்கப் பகை மேற்கொண்டார் போன்றார்.
'கைப்பாய் விடும்' என்பது, தனக்கு மிக வேண்டியவராதலின் நெருக்கிக் கேட்கவும் இயலாது. தாம் பொருள் பெற்றாரிடம் மறுமொழி கூறவும் இயலாது தன்னைத் தானே நொந்துகொள்வர் போன்று மனங்கசந்து நிற்றல் என நடைமுறையிற் கூறியவாறாம்.
’கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை', 'வாங்கும்போது இனிப்பு கொடுக்கும்போது கசப்பு' என்பன இச்செய்யுட் பழமொழிகள்.