இந்த சிரிப்பெல்லாம் அழுகைதானா

நாம் பிறந்தவுடன் அழுகிறோம், நம் பெற்றோர்கள் சிரிக்கிறார்கள், அவர்கள் பட்ட பாட்டிற்கு பலன் கிடைத்தது என்று!

பள்ளியில் முதலில் நுழையும்போது அங்குள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் கண்டு அழுகிறோம், அவர்கள் சிரிக்கிறார்கள்!

படிப்பு முடிந்தவுடன் நாம் சிரிக்கிறோம், நாம் அதிகம் படித்திருந்தால் சிலர் புகழ்கின்றனர், பலர் வெறுக்கின்றனர் ,சிலர் அழுகின்றனர்!

உத்தியோகம் கிடைத்ததும் யோகம் அடித்ததுபோல சிரிக்கிறோம், உத்தியோகமின்றி தவிப்பவர்கள் நம்மைக்கண்டு சோகம் கொண்டு அழுகிறார்கள்!

பணிபுரியும் அலுவலகத்தில் மாதாமாதம் சம்பளம் கிடைக்கும் நாளில் நாம் சிரிக்கிறோம், நம்மைவிட குறைவான சம்பளம் வாங்குபவர்கள் பொறாமையுடன் பெருமூச்சுவிட்டு அழுகிறார்கள்!

காதலித்து வெற்றிகண்டோ அல்லது தோல்விகண்டோ அல்லது காதலிக்காமலேயே திருமணம் ஆகும்போது சிரிக்கிறோம், நம் பால்ய உணர்வுகளை பரிமாறிக்கொள்ள ஒரு வாழ்க்கை துணை கிடைத்துவிட்டது என்பதால்! அதைக்கண்டு திருமணத்திற்காக ஏங்குபவர்கள் நம் திருமணம் எப்போதோ என்று அழுகிறார்கள்!
சில வருடங்களில், பெற்றோர்கள் என்னும் இன்பம்போன்ற துன்பமான சுமை நமக்கு வந்தபின்னர் அதை எண்ணி அவ்வப்போது சிரிக்கிறோம், அவ்வப்போது அழுகிறோம்!

உத்தியோக ஓய்வு பெற்றபின்னர், முதுமை வந்து தாக்குகையில், நம் உடல் மனநலம் பாதிக்கப்படுகையில், நாம் அழுகிறோம், இதைக்கண்டு பலர் சிரிக்கிறார்கள்!

இறுதிவேளை வருகையில் நாம் ஏன் இவ்வுலகில் பிறந்தோம் என்று நினைத்துப்பார்த்து வேடிக்கையாக சிரித்தவண்ணம் 'அழுகை' என்கிற நாமே உருவாக்கி, வளர்த்துவிட்ட நண்பன் போன்ற பகைவனை விட்டு விலகமுடியாமல் அழுதுகொண்டே அதனை அணைக்கிறோம்!

இவ்வளவு வருடங்கள் நம்மைப் பார்த்து சிரித்துவந்த காலம், சிறிது அனுதாபம் கொண்டு நம்முடைய மங்கலாக எரியும் விளக்கை (வாழ்க்கையை) அணைக்கிறது! அந்த நேரத்தில் நாம் சிரிக்கிறோமோ அல்லது அழுகிறோமா என்பது யாருக்குத்தெரியும்?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Apr-23, 11:24 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 74

சிறந்த கட்டுரைகள்

மேலே