அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால் - பழமொழி நானூறு 314
நேரிசை வெண்பா
அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்
றடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
இடையன் எறிந்த மரம். 314
- பழமொழி நானூறு
பொருளுரை:
வேலினது தன்மையைப் பெற்று முகம் முழுதும் நிறைந்திருக்கின்ற கண்களையும் பசிய தொடியையும் உடையாய்! மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் தமக்கொன்று வேண்டியதாகக் கூறுஞ் சொற்களைக் கேட்டால், தன்னிடத்திலில்லாத அப்பொருளை தன்னிடத்துள்ளது ஒன்றாகவும், அதனைச் செய்வாராகவும் உறுதியாகக் கூறினால் அங்ஙனம் கூறுதல் இடையனால் வெட்டப்பட்ட மரத்தினை யொக்கும்.
கருத்து:
முடியாத செயலை முடியும் என்று கூறற்க.
விளக்கம்:
'அடையப் பயின்றார்' என்றது தன்னோடு மிகவும் நெருங்கிப் பழகினமையால் கூறியன தட்டமுடியாதாரை.
'ஒட்டின' என்றது அவர்மீதுள்ள அன்பினால் எதுவாயினும் அவர் விரும்பியன தன்னிடத் துளதாகவும் அதனைக் கொடுப்பதாகவும் உறுதி கூறுதலை.
இடையன் தழை பெறும் பொருட்டு நாள் தோறும் மரத்தினைச் சிறிது சிறிதாகக் குறைப்பான். இஃது இடையன் எறிந்த மரம் எனப்பட்டது.
இடையனால் எறியப்பட்ட மரம் நாடோறும் குறைந்து வருதல் போலத் தன்னிடத்தில்லாததை உளதாகக் கூறதலால் ஒருவன் புகழ் அதனால் குறைந்துகொண்டே போகும் என்பதாம். இடையனால் தழை வெட்டப்படுதல் போல இல்லாததை உளதாகக் கூறுதலால் புகழ் குறைக்கப்படும்.
'இடையன் எறிந்த மரம்' என்பது பழமொழி.