“இரு சகோதரர்கள்” நாவல் விமர்சனம்

“இரு சகோதரர்கள்” நாவல் விமர்சனம்
ஆசிரியர் ரமணன்.
முதற் பதிப்பு-2016
ராதிகா பதிப்பகம்
சென்னை-91
பிரெஞ்சு நாட்டின் தலை சிறந்த இலக்கிய மேதையும் சிறுகதை மன்னனாகவும் திகழ்ந்த “மாப்பசான்” எழுதிய இந்த நாவல் “பியர்-ஜீன்” என்ற பெயரில் வெளிவந்தது. இந்த நாவலோடு சேர்த்து உலகின் தலை சிறந்த ஆறு நாவல்களை படைத்திருக்கிறார்.
இவரது வாழ்க்கை குறிப்பு பிரான்ஸ் நாட்டில் “நாட்மண்டி” என்னும் கிராமத்தில் 1850ம் ஆண்டு பிறந்து, 1880 ஆம் ஆண்டிற்கு மேல் இவரது இலக்கிய திறமையான படைப்புக்கள் உலகெங்கும் பரவி அழியா புகழை அவருக்கு பெற்று தந்தன
ரஷ்ய இலக்கிய மேதை “டால்ஸ்டாய்” மாப்பசான் எழுதிய “யுனிவி” என்னும் நாவலை போற்றி புகழ்ந்திருக்கிறார். இவரது கதைகளில் சிலவற்றை தழுவி ரஷ்ய மொழியில் சில கதைகள் எழுதியிருக்கிறார்.
இந்த இலக்கிய மேதையின் மறைவு 1893 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ம் நாள்.
இவரது “பியரி-ஜீன்” என்னும் நாவல் தமிழில் திரு ரமணன் அவர்களால் “இரு சகோதரர்கள் “ என்னும் பெயரில், நாவலின் மூலம் சுவை குன்றாது உயிரோட்டமும் துடிதுடிப்பும் மிக்க ஆற்றல் வாய்ந்த நடையில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
கதாபாத்திரங்கள்: இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அறுவர். குடும்ப தலைவர் திருவாளர் ரோலண்ட், நகை வியாபாரி. திருமதி ரோலண்ட், அவரது இயற்பெயர் எமிலி, அழகானவர், கவர்ச்சியானவர், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் பியரி, மருத்துவம் முடித்து தொழில் செய்து கொண்டிருப்பபவன் இளையவன் ஜீன், சட்டம் படித்து வழக்கறிஞனாக வாழ்வை தொடங்க போகிறவன். அடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் விதவை ரோஸ்மில்லி, அழகானவள், பணக்காரி.
அடுத்து கடைசி வரை வெளிப்பார்வைக்கு வாரமலேயே இந்த கதையை கொண்டு செல்லும் மாரிசல். ரோலண்டின் சினேகிதர், குடும்ப நண்பர், பாரீஸ் நகரை சேர்ந்த பணக்காரர்.
கதையின் முன்னோட்டம் : தொடக்கத்தில் ‘ரோலண்ட் குடும்பம்’ பாரீசில் வசிக்கிறது. அப்பொழுதுதான் மாரிசல் நண்பராகிறார், அடிக்கடி வருவார், நன்றாக பழகுவார். மறக்க முடியாத, பிரிக்க முடியாத குடும்ப நண்பராகவும் ஆகிப்போனார்.
திருவாளர் ரோலண்ட் நகை வியாபாரத்தில் நீண்ட நாள் ஈடுபட்டு நல்ல சம்பாத்தியம் கிடைத்த பின்னால், வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதில் மட்டும் இருக்க கூடாது, அனுபவிக்கவும் தெரிய வேண்டும் என்னும் நோக்கில் “ஹார்வேயில்” குடும்பத்துடன் குடியேறுகிறார். மைந்தர்களை கல்வி கற்க பாரீசில் தங்கி படிக்கவும் ஏற்பாடு செய்து விடுகிறார்.
‘ஹார்வேயில்’ சொந்தமாக ஒரு படகு வாங்கி, அதை ஓட்டவும் பழகிக்கொண்டு அதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம், கடலுக்கு சென்று மீன் பிடித்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறார்.
இந்த கட்டத்தில் பியரியும் மருத்துவ படிப்பை பாரீசில் முடித்து “ஹார்வேயில்” தொழில் நடத்த முயற்சி மேற்கொண்டிருக்கிறான். வயது முப்பதை தொட்டும், கூர்மையான அறிவு இருந்தும் தொழில் சரிவர அமையாமல் தடுமாறியபடி இருக்கிறான்.
பியரியை விட ஐந்து வயது இளையவனான ஜீன், பாரீசில் சட்டம் படித்து முடித்து அவனும் ‘ஹார்வேயில்’ அலுவலகம் வைக்க இடம் தேடிக்கொண்டிருக்கிறான்.
இருவரது தோற்றத்திலும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு, பியரியை விட சிவந்த நிறமும் கொழு கொழு உடலும், அழகிய முகமும் படைத்தவன், பெருந்தன்மையும் கொண்டவன் ஜீன்.
இவை எல்லாவற்றையும் விட ஜீனை பக்கத்து வீட்டில் வசிக்கும் ‘ரோஸ்மில்லி’ விரும்புவதாக படுவதும், இவனும் அவள் மீது மையல் கொண்டிருப்பதும் கூட பியரிக்கு இவன் மீது ஒரு அசூயை இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது, காரணம் அந்த பெண்ணை அடிக்கடி “விதவை விதவை என்று குத்தி காட்டி பேசுவதால் ஜீனும், இவர்கள் இருவரின் தாயாரான திருமதி ரோலண்டும் கூட பியரின் மேல் வருத்தம் கொண்டிருக்கிறார்கள்.

கதை சுருக்கம்:
இவர்களின் குடும்பம் இப்படியாக “ஹார்வேயில்” வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்த வேளையில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்து சேருகிறது. இவர்களது குடும்ப நண்பரும், பாரீசில் வசித்து வந்தவருமான மாரீசல் தனது பெரும் சொத்துக்களை இவர்களது இளைய மகனான “ஜீனின் பெயரில் எல்லாவற்றையும் எழுதி வைத்துவிட்டு மறைந்து விட்டதாக செய்தி கிடைக்கிறது.
இந்த செய்தி கிடைத்தது முதல் திருவாளரும், திருமதி ரோலண்டும், பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். தங்கள் இளைய மகனுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமும், செல்வமும் கிடைத்து விட்டதால் இனி அவன் பெரும் பிரபு வம்சத்தை சேர்ந்தவனாகி விட்டான். அது மட்டுமல்ல, அந்த வசதிக்கு தகுந்தபடி அவன் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அடுத்து அதே போல் பணக்காரியான விதவை ரோஸ்மில்லியையும் அவனுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் முடிவு செய்து கொள்கிறார்கள். ஜீனுக்கும் பெரும் மகிழ்ச்சிதான் என்றாலும் அதிகமாக வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்தான்.

கதையின் போக்கு இங்கிருந்துதான் சூடு பிடிக்கிறது, இதில் ஏற்கனவே சரியான தொழில் அமையாமலும் வயதும் ஏறியபடி கவலையில் இருந்த பியரியின் நிலைமை இன்னும் சிக்கலுக்கு உள்ளாகி விடுகிறது. என்னதான் சகோதரனுக்கு கிடைத்ததுதானே என்று ஒரு பக்கம் மனம் எண்ணினாலும், அதெப்படி ஒரு குடும்ப நண்பர் அந்த குடும்பத்தில் இரு குழந்தைகள் இருக்கும்போது இருவருக்கும் சமமாகத்தானே பிரித்து எழுதி வைக்க வேண்டும், ஜீனுக்கு மட்டும் எழுதி வைக்க காரணம் என்ன? இதற்கும் தன் குடும்பத்தில் அறிமுகமாகும் போது முதலில் சிறு வயதில் அந்த நண்பர் இவனைத்தான் தூக்கி கொஞ்சி கொண்டிருந்ததாக பெற்றோர்கள் சொல்ல கேட்டிருக்கிறான். அப்படி இருக்கையில் அதற்கு பிறகு பிறந்த ‘ஜீனுக்கு’ மட்டும் முழு சொத்தை எழுதி வைப்பதன் காரணம் என்ன?
அவனை சுற்றியுள்ள நண்பர்கள் இதை கேள்விப்பட்டு ஒரு மாதிரியாக சிரிக்கவும் பேசவும் முற்படும் போது அவன் மனம் பெரும் போராட்டத்திற்குள்ளாகிறது. ஜீனுக்காக தன் தாயை கொச்சைப்படுத்துவதை அவன் மனம் விரும்பாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதன் உண்மை அவனுக்கு தெரிய வருகிறது.
சுய இரக்கம்,பரிதாபம், தன் மனதுக்குள் உயர்ந்த இடத்தில் வைத்திருந்த தன் தாயை பற்றிய எண்ணங்கள் எல்லாம் சிக்கி சிதறிப் போய் கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறான்..
இதனால் அவன் தாயை வார்த்தைகளால் குத்தி கிழித்து காயப்படுத்துகிறான். அவனை கண்டு திருமதி ரோலண்டு தன் நிம்மதி குலைந்து தான் அன்று செய்த தவறு இன்று தன் மூத்த மகனால் தினம் தினம் சுட்டி காட்டப்பட்டு மனம் ரணமாக்கப்பட்டு கிழிபடுகிறாள்.
ஒரு கட்டத்தில் அவனை கண்டாலே புத்தி பேதலிக்கும் நிலைமைக்கு சென்று விடுகிறாள்.
அம்மாவின் நிலைமையை கண்ட ஜீன், அண்ணனிடம் சண்டைக்கு செல்கிறான். ஒரு கட்டத்தில் உணர்ச்சி வேகத்தில் பியரி ஜீனிடம் அவனைபற்றிய உண்மையை சொல்லி விடுகிறான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீன், பலவித மன போராட்டங்களுக்கு உட்படுகிறான்.
அம்மாவை அணைத்து, மனதை தேற்றி, இது உண்மையா? என்று கேட்கிறான்.
இனி மேலும் மறைப்பதால் பயன் இல்லை என்று உணர்ந்த திருமதி ரோலண்டு எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறாள். அது மட்டுமல்ல தான் இனி உயிருடன் வாழ போவதில்லை என்றும் சொல்கிறாள்.
ஜீன் அவள் மனதை தேற்றி, இனி நீ என்னுடன் இரு, என்று ஆறுதல் சொல்லி அவளை தன்னுடனே வைத்து கொள்கிறான்.
பியரி தான் தன் தம்பியிடம் இதை சொன்னது தவறான செயல் என்று மனம் வருந்தினாலும் அவனது மனப்போராட்டம் அவனை விட்டு விலக மறுக்கிறது.
இதற்கிடையில் பக்கத்து வீட்டு ரோஸ்மில்லை ஜீனுக்கு திருமணம் செய்து வைக்க திருமதிரோலண்டும், ஜீனை அழைத்து கொண்டு அவள் வீட்டுக்கே சென்று நிச்சயம் செய்து வைக்கிறாள். இனி தான் ஜீனுடனே வசிக்கவேண்டும் என்றும் முடிவு செய்து கொள்கிறாள்.
ஜீன் தன் சகோதரனுக்காக “ஹாரவேவுக்கு” வந்து சென்று கொண்டிருக்கும் பல நாட்டு கப்பல்களில் அமெரிக்கா செல்லும் ஒரு கப்பலில் மருத்துவர் ஒருவர் தேவை என்று கேள்விப்பட்டு, அதற்கு ஏற்பாடு செய்கிறான்.
பியரிக்கு அந்த வேலை உறுதி செய்யப்பட்டு அவன் ‘ஹார்வேயை’ விட்டு இன்னும் ஐந்தாறு நாட்களில் செல்ல வேண்டும், என்று முடிவானதும் அவனது மனப்போராட்டங்கள் அவன் மனதை விட்டு அகலுகின்றன.
அவன் மனதுக்குள் தான் இனி ஒரு ‘அனாதையாக’ நாடு விட்டு நாடாக கப்பலிலேயே தன் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கப்போகிறது, தான் மீண்டும் இந்த குடும்பத்தில் சங்கமிக்கும் நிகழ்வே நடக்கப்போவதில்லை, என்னும் உண்மை அவன் மனதை பற்றற்ற நிலையில், கொண்டு போய் வைக்கிறது.
பியரியை கப்பலில் வைத்து வழி அனுப்ப திருவாளர், திருமதி ரோலண்டு, ஜீன், இவர்கள் மூவரும் வழி அனுப்பிய பின் திருமதி ரோலண்டு குலுங்கி குலுங்கி அழுகிறாள்.
ஏன் அழுகிறாய்? உன் மகன் இன்னும் ஓரிரு மாதத்தில், திரும்ப வீட்டுக்கு வருவான் என்று திருவாளர் ரோலண்டு சொல்கிறார்.
ஆனால் திருமதி ரோலண்டுக்கு தெரியும், அவளது மூத்த மகன் இனி தன்னை பார்க்க வரமாட்டான், அதற்கான தகுதியை அவள் இழந்து விட்டதாக முடிவு செய்து விட்டான் என்பதையும், இதனால் அவன் மீண்டும் இங்கு வராமலேயே எங்கோ ஒரு அநாதையாய்..! கப்பலிலேயே வாழ்ந்து கொண்டு…

முடிவாக: இந்த கதையில் மாப்பசான் மனிதர்களின் மன போராட்டங்களையும், உணர்ச்சிகளையும், வெகு அழகாக பியரின் பாத்திரம் மூலமும், மனதளவில் தான் இன்னும் மாரிசல் நினைவுடன் தான் வாழ்கிறேன், என்று திருமதி ரோலண்டு தன் மகன் ஜீனிடமே சொல்லி மனம் குமுறுவதும், அவரின் நினைவாக தான் வைத்திருந்த மாரிசலின் சிறு போட்டோவை ஜீனிடமே கொடுத்து அவர்தான் உன் தந்தை என்று உணர்த்துவதும், அதே நேரத்தில் தன் வயிற்றில் பிறந்த மூத்த மகன் தாயின் இந்த நிலையினால் அவனது மனப்போராட்டங்களில் சிக்கி பைத்தியக்காரனாக ஆகும் அளவுக்கு அவன் சிரமப்படுவதை பார்த்து பாசத்தில் துடிப்பதும் அருமையாக சொல்லியிருப்பார்.
இது எதுவுமே அறியாத மனிதனாய் தன் சுகம், மகிழ்ச்சி, இவைகளை மட்டுமே கொண்டபடி, திருவாளர் ரோலண்டு இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதையும் காட்டியிருப்பார்.
உணர்ச்சிகளின் போராட்டங்கள், கோபம், அவமானம், பழிச்சொல், மறுகுதல், தான் முன்னர் செய்த தவறு மூத்த மகனை பாதிக்கிறதே என்னும் தாயின் பரிதவிப்பு, அற்புதமான நாவலாக மாப்பச்சன் வடித்திருப்பார். அதே சுவையோடு மூலத்தில் இருந்த எல்லா உணர்வுகளையும் அப்படியே ரமணன் நமக்கு தமிழில் தந்திருக்கிறார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-Apr-23, 10:08 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே