காக்கையைக் காப்பிட்ட சோறு – பழமொழி நானூறு 315
இன்னிசை வெண்பா
ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை
நோக்குமின் என்றிகழ்ந்து நொவ்வியார் கைவிடுதல்
போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப!
காக்கையைக் காப்பிட்ட சோறு. 315
- பழமொழி நானூறு
பொருளுரை:
வடிவாய் இல்லாத கடல் நீர்த்துளிகளைத் தூவுகின்ற, கரையினைப் பொருதுகின்ற உப்பங்கழிகளை உடைய குளிர்ந்த கடல் நாடனே!
ஒருவர் தான் முயன்று வருந்தித் தேடிய சிறப்பான பொருளை ’காவல் செய்து வா’ என்று எளிதாக நினைத்து நேர்மையற்ற கீழான குணமுடைய மக்களிடம் ஒப்புவிப்பது காக்கையை சோற்றிற்குக் காவலாக வைப்பதற்கு ஒப்பானதாகும்.
கருத்து:
காத்துத் தருமாறு கீழான குணமுடைய மக்களிடம் ஒப்புவித்த பொருளைப் பின்னர்ப் பெறுதல் அரிதாம்.
விளக்கம்:
கடலைப் 'போக்கில் நீர்' என்றார், வருவாயேயன்றி வடிவாய் இன்மையால். காக்கையைக் காவலாக வைத்த சோற்றினைப் பிறகு பெறுதல் அரிதாதல் போல, கீழான குணமுடைய மக்களிடம் காவலாக ஒப்புவித்த பொருளையும் திரும்பப் பெறுதல் அரிதாம்.
'காக்கையைக் காப்பிட்டசோறு' என்பது பழமொழி.