மனம் புத்தி இரண்டும் மனிதர்களுக்கிடையே

மனம் புத்தி இரண்டும் மனிதர்களுக்கிடையே

இதற்கு இன்னொரு சொல் கூட உண்டு “இதயம்” இந்த இதயத்தை பற்றித்தான் எத்தனை கவிதைகள் கதைகள் கட்டுரைகள், காவியங்கள்.
ஆனால் ஒன்று பாருங்கள்..! மனம் என்னும் சொல் ஒரு படைப்பாளியை (கவிஞர், கதையாசிரியர், நாடகாசிரியர், கட்டுரையாளர்) பலவிதமாய் பரவசப்படுத்தி அல்லது துன்ப படுத்தி வடிக்கிறார்கள்.
அதே நேரம், ‘மருத்துவர்கள் ‘மனம் என்னும் சொல்லை ஒதுக்கி வைத்துவிட்டு அதற்கு “இதயம்” என்றே குறிப்பிட்டு அது ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
அவர்கள் சொல்வதை நம் மனம் ஏற்க வேண்டுமே? இந்த இடத்தில் நம் மனம் என்பது நமது எண்ணங்கள். நமது புத்தி என்று எடுத்து கொள்ளலாமா?
இப்படி மனம் (போன போக்கில்) இதயம் என்றோ அல்லது மூளையின் செயல்பாடுகள் என்றோ வாதிடுபவர்கள் இருக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு இந்த மனம், புத்தி இவைகள் நம்மை படுத்தும் பாடுகளை நாம் சற்று பார்க்கலாமே
“மனம் போன போக்கில் வாழ்” இந்த இடத்தில் மனம் என்பது ஒரு இடத்தில் நிலையாக நிற்பதல்ல என்பதை உணர்த்தவே இப்படி ஒரு சொல்வடை. அப்படியென்றால் மனம் என்பது கெட்டதா? அந்த தொனியில்தானே இந்த சொல்வடை அமைந்திருக்கிறது. உண்மையா இல்லையா? இதற்கு அறிஞர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
புத்தியோடு வாழ் (புத்தி இருந்தா பொளைச்சுக்குவான்) இது ஒரு சொல்வடை. அப்படியானால் புத்தி (மூளை) ரொம்ப நல்லவரோ? என்ன சார் நியாயம்? மனதை சொல்லும்போது பேசப்படும் சொல்வடை கெட்டதாகவும் மூளையை சொல்லும்போது நல்லதாகவும் இருக்கிறதே இந்த சொல்வடை
இதற்கு படைப்பாளிகளையும் குற்றம் சொல்லலாம், மனம் ஒரு உணர்ச்சிகளின் சங்கமம் என்னும் வடிவத்தில் அமைத்து விட்டதால். அதனுள் ஏற்படும் காதல், காமம், கோபம், மற்றும் பல உணர்ச்சிகளின் தொகுப்பு கொண்ட உருவமற்ற உருவமாக படைத்து விட்டார்கள்.
“என் மனசு கேக்கலீங்க” இந்த வார்த்தையை கேட்டிருக்கிறீர்களா? இந்த இடத்தில் மனம் என்பதை “அடாத காரியம் செய்யாது” பிறருக்காக பரிதாபப்படும், துன்பம் தராது, இப்படி குறிப்பிட்டுத்தானே இந்த வார்த்தை சொல்லப்படுகிறது. அப்படியானால் மனம் என்பது நல்லதுதான் என்னும் முடிவுக்கு நாம் வரமுடிகிறது.
இருந்தாலும் மனிதர்களின் பேச்சு வழக்கு அல்லது எண்ணங்கள் மனம், புத்தி இவைகளை வேறுபடுத்தித்தான் வைத்து இருக்கின்றன. இன்னொரு வார்த்தையையும் கவனியுங்கள்.
“உனக்கு மனசாட்சி இருக்கா? “ இதில் என்ன உணர்வுகள் தொக்கி நிற்கிறது? நீ பாவம் செய்யாதே, துன்பபடுத்தாதே என்று கேட்பதற்கு பதிலாக “மனசாட்சி” என்னும் வார்த்தையை உபயோகிக்கிறார்கள்.
புத்தியை பற்றி பேசும்போது கொஞ்சம் விவரமாக (அதாவது வரவு செலவு சரியாக) (அதிகமாக போனால் செலவாளி என்றோ, குறைவாக போனால் கஞ்சம், என்றோ சொல்லி விடுவார்கள்) இருப்பவர்களை “அவ புத்தியுள்ள புள்ளையப்பா கட்டு செட்டா குடும்பம் நடத்திடுவா, அல்லது ஆண்பாலாய் இருந்தால் நடத்திடுவான், இல்லையென்றால் “படிச்சு நல்லா வந்துட்டான்” என்று முடித்து விடுகிறார்கள்.
அதே நேரத்தில் அவன் பிறரை கெடுப்பவனாகவோ, தொல்லை செய்பவனாகவோ இருந்து விட்டால் “கெட்ட புத்தி உடையவ” “உடம்பு பூரா விசம்” இப்படி சொற்களை பிரயோகப்படுத்துவார்கள்.
மனம் ஏன் மனிதர்களின் சொல்வடைகளில் பின் தங்கி விடுகிறது என்றால் முன்னர் சொன்னது போல அதை ஒரு உணர்ச்சிகளின் குவியலாக காட்டுவதால். அதிலும் படைப்பாளிகள் இருக்கிறார்களே அவர்கள் மனதை ஒரு சோக சித்திரமாகவே அந்த காலத்தில் இருந்து காட்டி விட்டார்கள். அதுவும் எப்படி? காதலில் துன்பம், வறுமையில் துன்பம், தியாகத்தில் துன்பம், அடடா துன்பங்களை வரிசைப்படுத்தி அதை மனம் என்னும் ஒரு சொல்லிலிருந்து எடுத்து வெளியே விடுவார்கள் பாருங்கள்.
“அவன் அல்லது அவ மனசு என்ன கல்லா? இந்த வார்த்தையை கேட்டிருக்கிறீர்களா? நாம் கொஞ்சம் கடினமானவர்களாக இருந்தால் (அதாவது மனம் சொல்லும் துன்பங்களை அண்ட விடாமல், அல்லது எந்த துன்பங்கள் வந்தாலும் வெளிக்காட்டாமல் இருந்தால், இந்த வார்த்தையை பிரயோகப்படுத்துவார்கள்.
அதிலும் இறப்பு வீட்டில் மக்கள் படுத்தும் பாடு இருக்கிறதே “ஓரு இறப்பு” அது நமக்கு இழப்புத்தான், ஏற்றுக்கொள்கிறோம், தடுக்க முடியாது. (புத்தியாலோ அல்லது மனதாலோ) சாதாரணமாக இருந்து விட்டால் அவ்வளவுதான் மேலே சொன்ன வார்த்தைகள் அங்கும் இங்கும் கிசுகிசுக்கப்பட்டு நாமும் சரி தொலையுது கொஞ்சம் அழுவது மாதிரியாவது முகத்தை வச்சுக்குவோம் என்று அதை செயல்படுத்த முயற்சிப்போம். (இது சில சமயம் ஓவர் ஆக்டிங்காக கூட) போய்விடுவதுண்டு.
இது என்னவாகிறது? இது போல நிறைய இடங்களில் நடித்தே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறது. பிறரிடம் புன்னகைப்பது, சோகமாய் வைத்து கொள்வது இப்படி பல பல..
இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள் “செய்தி வாசிப்பாளர் வேலை என்பது எவ்வளவு சிரமமானது என்று. அவர் மகிழ்ச்சியான செய்தி சொல்லும்போது முகத்தை மலர்ச்சியாகவும், சோகமான செய்தி சொல்லும்போது சோகமாகவும் வைத்தே ஆக வேண்டும். இது சமுதாய பார்வை. அதில் நடித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
மேலே சொன்னவைகளில் ஒரு சிலருக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அவர்களும் இந்த கட்டுரையை சாதாரண நிகழ்வாக படித்து விட்டு சென்று விடலாம் வீணாக சினம் ஏற்பட்டு, புத்தி மனம் இரண்டுக்கும் வேலை கொடுக்காமல் “தேமே’ என்ற் இருந்து விடுங்களேன்.
இப்படியாக மனமும், புத்தியும் நம் வாழ்க்கையில் (அதாவது சொல்வடையில்) வந்து அக்கம் பக்கம் இருப்பவர்களின் வாயின் மூலமாகவோ, அல்லது குறிப்புகள் மூலமாகவோ நம் கவனத்துக்கு வந்து நம்மையும் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல நடிகர்களாகத்தா உருவாக்கி விட்டிருக்கிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Apr-23, 3:36 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே