கொடுப்பவர் தாமறிவார் தஞ்சீ ரளவு - பழமொழி நானூறு 316

இன்னிசை வெண்பா

தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர
அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான்
தொடுத்தின்ன ரென்னலோ வேண்டா கொடுப்பவர்
தாமறிவார் தஞ்சீ ரளவு. 316

- பழமொழி நானூறு

பொருளுரை:

செல்கெழு குட்டுவனுடைய புகழைச் செய்யுளாகப் பாடிய பெரிய புலவனாகிய கௌதமன் துறக்கத்தை யானும் என் சுற்றமும் அடையுமாறு செய்வாயாக என்று சொல்ல. அங்ஙனம் சொல்லிய அப் புலவற்கு அவர் சொல்லிய குறை தீரும் பொருட்டு வேள்வி செய்து துறக்கத்தின்கண் நீடு வாழ்வாயாக என்று கூறினான்.

ஆகையால், ஒரு பொருளை வேண்டுவார் முறையாக இத் தன்மையை உடையார் என்று புகழ்ந்து கூறுதல் வேண்டாவாம், கொடுக்கின்றவர்கள் தம் நிலையின் அளவையறிந்து செய்வார்கள்.

கருத்து:

கொடையாளிகள் தொடுத்துக் கூறுதலை எதிர் நோக்காது தம் நிலைமைக்கேற்பக் கொடுப்பர்.

விளக்கம்:

சொற்குறையாவது, யானும் என் சுற்றமும் துறக்கம் ஓம்புமாறு வேள்வி செய்தல் வேண்டும் என்பது,

'வாழியரோ என்றான்' என்பது பத்துப் பெருவேள்விகள் வேட்பித்துப் பத்தாவது வேள்வியில் துறக்கம் சுற்றத்தோடு புகுமவனை நீடு வாழ்வாயாக என்று கூறியதை.

அடுத்தர - அடுக்க! இது போதர என்றாற் போன்றது. துறக்கம் வருவித்து உரைக்கப்பட்டது.

'தொடுத்தின்னர் என்ன வேண்டா' என்றது தொடுத்த புலவற்கு ஒருவன் துறக்கம் ஈந்தான்; அங்ஙனம் புகழ்ந்து கூறுதலும் வேண்டா என்றதை.

'கொடுப்பவர் தாமறிவார் தஞ்சீரளவு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Apr-23, 2:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே