நூலின் பெயர் இரா இரவியின் திரைச்சுவடுகள் நூலாசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் கவிஞர் மு வசீகரன்ஆசிரியர் பொதிகை மின்னல்
நூலின் பெயர் : இரா. இரவியின் திரைச்சுவடுகள்
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி 98421 93103.
நூல் விமர்சனம் : கவிஞர் மு. வசீகரன்.ஆசிரியர் பொதிகை மின்னல் ,மின்னல் கலைக்கூடம் , 117எல்டாம்ஸ் சாலை ,தேனாம்பேட்டை .சென்னை .
வெளியீடு :வானதி பதிப்பகம்
..23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17
தொலைபேசி044 24342810 / 24310769
பக்கங்கள் 178. விலை ரூபாய்160
55 திரைப்படங்களுக்கு, தான் இணையவழியில் எழுதிய விமர்சனக்களைத் தொகுத்து ‘திரைச்சுவடுகள்’ என்ற நூலாகத் தந்து இருக்கின்றார் கவிஞர் இரா. இரவி அவர்கள். கவிஞர், எழுத்தாளர் மட்டுமல்ல, நல்ல திரைப்படங்களை சுவைப்பவராகவும், ஊக்குவிப்பவராகவும் இருக்கின்றார் கவிஞர்.
வார இதழ்கள், தின இதழ்களில் வெளியிடப்படும் விமர்சனங்கள் போல் வெறும் மேலோட்டமாகவும், வெறும் பாராட்டாகவும் இல்லாமல் நல்ல சமுதாயச் சிந்தனைகளை விதைக்கும் படங்கள் வெளிவர வேண்டும் என்ற நோக்கில் ஆழமான பார்வையை பதிக்கின்றார் நூலாசிரியர் கவிஞர் இரா. இரவி.
மங்காத்தா படத்துக்கு இரவி எழுதியுள்ள விமர்சனம் சிந்திக்க வைக்கிறது. இயக்குநரை வாரு வாரு என்று வாரி இருக்கிறார். குடித்தல், கொல்லுதல், புகை பிடித்தல், பெண்கள் மது அருந்துவது சாதாரணம் தான் என்றெல்லாம் காட்சிப்படுத்தி இருப்பதைக் கண்டிக்கிறார். பணத்தைக் கொள்ளை அடிக்கும் கதாநாயகன் – எதிர்மறை கெட்டவனாக வந்ததோடு வெல்வதாகக் காட்டியிருப்பதை ஏற்கமுடியாமல் தவிப்பதோடு, நடிகர் அஜித்திடம் இனி நல்லவனாக மட்டுமே நடியுங்கள், நல்ல கருத்துகளை பரப்புங்கள் என கோரிக்கை வைக்கிறார்.
தாண்டவம் படத்தில் பார்வை இல்லாமல் வரும் விக்ரம் கொலை செய்வதையும் அவரால் ஏற்க முடியவில்லை. பார்வையற்றவர்கள் மென்மையானவர்கள் என்கிறார். அதே சமயம் அனுஷ்காவை ஆபாசமாகக் காட்டாமல் அக்கறையுள்ள மருத்துவராகக் காட்டியிருப்பதை பாராட்டுகிறார்.
உத்தம வில்லன் வித்தியாசமான, பொழுதுபோக்கு படம் என்கிறார். திரையரங்கம் சென்று பார்க்கலாம். நான் எந்த படமும் திரையரங்கம் சென்று பார்த்து தான் விமர்சனம் எழுதுகிறேன் என குறிப்பிடும் நேர்மை இனிது.
இந்தப் புத்தகத்துக்கு நடிகர் சத்யராஜ் அணிந்துரை வழங்கி இருப்பது அருமையானது. நல்ல படம் பார்க்க விரும்புவோர் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள், அல்லது கவிஞர் இரா. இரவியிடம் கேட்டு தேர்வு செய்யங்கள்.