நிமிர்ந்து நிற்குது
உடன் பிறப்புகள் எப்போதும்
ஒற்றுமையாக
ஒருமித்து வாழ்ந்தால்
உனக்கும் பெருமை சேர்க்கும்
ஊரும் உன்னை மதிக்கும்,
காசுக்கு ஆசைபட்டு
கூடப் பிறந்தவனையே
வெறுத்து ஒதுக்கினால்
எவன் உன்னை மதிப்பான் ?
இறைவன் கூட கைவிடுவான்
தந்தை சாகும்போது
தந்த நிலமும், பணமும்
இரு பிள்ளைகளுக்கும்
சரிசமமாக, பிரித்து கொடுத்த
நிலத்தின் நடுவே
நின்றிருந்த புளிய மரம்
யாருக்கு சொந்தமென
இருவருக்குமிடையே
இடர் தந்து பகையை வளர்த்தது
புளிய மரம் யாருக்கு என
போட்ட வழக்குகள்
பல வருடங்கள் படுத்துறங்கி
பின் வந்த தீர்ப்பில்
அண்ணன் நிலம்
அண்ணன் வக்கீலிடமும்,
தம்பியின் நிலம்
தம்பியின் வக்கீலிடமும் சேர்ந்து
பெருமை கொள்ளும்
புளிய மரம் நிமிர்ந்து நிற்குது