வணிக உலகம்

வணிக உலகம்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தை இயற்கையால் நிர்மாணிக்கப்பட்ட, அமைதியான உலகமாக நினைத்து கொண்டிருந்தீர்கள் என்றால் அது தவறு. அப்படிப்பட்ட உலகம் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்திருக்கலாம். அவனுக்கு வேண்டியதை அவனே பெற முயற்சிப்பதும், அதனால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், உயிரிழப்பு, போன்றவைகள் இயற்கையாக நடந்து கொண்டிருந்ததும் அப்பொழுது வேண்டுமானால் நடந்திருக்கலாம்.
ஆனால்..! மனிதனுக்கு தான் வாழ்வதற்கு இயற்கை கொடுத்தது மட்டுமல்ல செயற்கையும் தேவை என்னும் நிலைமை ஏற்பட்ட பின் ஆரம்பித்த வணிகம் வளர்ந்து இன்று ஒரு குழந்தை இந்த உலகத்திற்குள் பிறந்து விட்டால், உடனே அது வணிக உலகத்துக்குள் ஒரு நுகர்வோராக அங்கிகரிக்கப்பட்டு விடுகிறது.
அதனுடைய தேவைகள் என்ன என்ன என்பதை பெற்றோர்கள் நிர்ணயிப்பதாக வெளியில் தெரிந்தாலும், பொதுவாக அவைகள் வணிக நிறுவனங்களால் இவர்கள் மனதிற்குள் செலுத்தப்பட்ட விளம்பர அலைகள் மூலமே முடிவு செய்யப்படுகிறது. இத்தகைய விளம்பரங்களை கொடுக்க ஊடகங்களும், பத்திரிக்கைகளும் தங்களது வணிக மூளையை பயன்படுத்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கொண்டு செல்லும் வேலையை கச்சிதமாய் செய்து முடிக்கின்றன.
இதனை உதராணமாக சொல்வதென்றால் முன்னர் குழந்தை பிறந்ததும் பெரியோர்கள் தங்களது அனுபவ அறிவால் கிடைக்கும் பொருட்கள் குழந்தைகள் உண்வாக கொடு என்று அறிவுரை சொல்வார்கள். இன்று அப்படி அல்ல, அவர்களின் மனதுக்குள் குழந்தைக்கு இந்த உடை சிறந்தது, அதுவும் இங்கு வாங்கினால் சிறந்தது, இந்த உணவு சிறந்தது, அதை வாங்குவதற்கும் ஒரு இடம், அதன் தயாரிப்பு நிறுவனம், இப்படி புள்ளி விவரங்களாக அடுக்கி பெற்றோர்களை வாங்க வைத்து விடுகின்றன. அல்லது வாங்கி கொடுக்க சொல்லி வற்புறுத்தப்படுகின்றன. அப்படி பார்க்கும் போது பிறந்த குழந்தையும் வணிக உலகில் நுகர்வோராகி விடுகிறது.
அடுத்த கட்டத்துக்கு செல்லலாம், குழந்தையினுடைய கல்வி, அங்கும் ஆரம்பிக்கிறது வணிக உலகின் பலம். இந்த கல்வி சிறந்தது, அதுவும் இங்கு படித்தல் சிறந்தது, என்று ஒவ்வொரு கல்வி நிறுவனமும் முன்னர் கூறியிருந்த வழி முறைகள் மூலமாகவே பெற்றோர்களின் மனதுக்குள் ஆக்ரமித்து விடுகின்றன. இதனால் அவனது கல்வியும் வணிக உலகம் நிர்ணயித்தபடியேதான் நடக்கிறது.
இப்படி ஆரம்பிக்கும் அவனது தொடக்க கல்வி (அதிலும் கிண்டன் கார்டன்) ஆரம்பித்து கல்லூரி வரைக்கும் அவனது முயற்சி, கற்றல், உழைப்பு என்றாலும், அவனது சான்றிதழை பெற்றபின் அந்த சான்றிதழுக்கு தகுந்த பணி கிடைக்க போராடும் போதும் வணிக உலகம் அவனை இரு கை நீட்டி வரவேற்கிறது. அதாவது இந்த உலகத்தில் நீயும் ஒரு உறுப்பினர், அது விற்போனாகவும் இருக்கலாம், நுகர்வோனாகவும் இருக்கலாம், படைப்போனாகவும் இருக்கலாம், என்று அவனை அரவணைத்து கொள்கிறது.
ஆக மொத்தம் அவனது அல்லது அவளது உலகமே இதற்குள்ளேயே உருண்டு பிரண்டு முடிவடைகிறது.
இன்று திருமணம் முடிந்து ஒரு வருடம் அல்லது இரு வருடங்கள் ஆகியிருந்தால் கூட பிள்ளை வரம் கொடுக்க கூட நிறைய நிறுவனங்கள் (விளம்பரங்கள் மூலம்) இவர்கள் இருவரின் மனதுக்குள் வேப்பிலை அடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் இயற்கை அளித்த செயலின் மூலம் கிடைக்க கூடிய பலனை ஏதோ இவர்கள் ஏற்பாடு செய்து தருவதாக இவர்கள் இருவரும் நினைக்கும் வண்ணம் ஆகி விடுகிறது. போதாக்குறைக்கு சுற்றம், உற்றம் இதற்கு தூபம் போட்டு மேலும் அவர்களை மன இயல் ரீதியாக இத்தகைய மருத்துவ மனைகளை நோக்கி ஓடும்படி செய்து விடுகிறார்கள்.
பிறப்பை கூட வணிகமாகவே ஆக்கி விட்ட செயல்களும் நடைமுறையாக்கப்பட்டு விட்டது. அதுவும் அவர்களை அப்படி தூண்டுவதற்கு ஜோதிட நிபுணர்களை கொண்டு நல்ல நேரம் குறித்து கொடுத்து அதற்காகவே காத்திருக்கும் மருத்துமனைகளில் சிசேரியன் என்னும் முறையில் ஏற்பாடு செய்து விடுகிறார்கள் நன்கு கவனியுங்கள் இங்கு மருத்துவ வணிக உலகம், ஜோதிட உலகம் இன்னும் ஒரு சில இருக்கலாம் அவைகளின் கூட்டு முயற்சியினால் மனித பிறப்பே நடப்பதாக மாயை தோன்றி விட்டது.
மனித உலகமே நுழைய முடியாத காட்டு உலகத்தில், கடல் நீர் உலகத்தில் இயற்கை பிறப்புகள் இயல்பாய் நடந்து கொண்டிருக்க, மனித உலகில் அது இன்று ஏனோ இமாலய சிக்கல் நிறைந்ததாக ஆக்கப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல சாதாரண தம்பதிகள் குழந்தை பெறுவதற்கு கூட ஏராளமான செலவுகளை நோக்கி இழுத்து விடவும் செய்து விட்டது.
இப்படி நாம் பிறந்தது முதல் சாகும் வரைக்கும் இந்த உலகில் வாழவேண்டி இருப்பதால் நமக்கு இந்த வணிக உலகம் பழகி விட்டது. அது மட்டுமல்ல நம்மால் அதை தாண்டி இது இயற்கை, நடப்பது இயற்கையின் செயல் என்று கூட எண்ணம் வராமல் செய்து விட்டது.
இதனால் மனித வாழ்க்கையை செம்மைபடுத்த சாமியார்கள் உலகம் என்று புதிதாக தோன்றி விட்டது. அவர்களும் போட்டி மனப்பான்மை, விளம்பரங்கள், இவரிடம் போனால் இப்படி என்று தனி மனித உசுப்பேற்றல், என்று அதுவும் பெரிய உறுபினராகிவிட்டது, இந்த வணிக உலகில்.
சர்வ சாதாரணமாய் வணிக உலகம் இன்று உலகத்தை ஆக்ரமித்து ஒரு மனிதனை நுகர்வோனாகவும், படைப்பவனாகவும், விற்பவனாகவும் ஆக்கி அதன் மூலமே நமது வாழ்க்கையும் ஓடி மறைந்து போய் விடுகிறது.
உதாரணமாகவே சுட்டி கட்டப்பட்டுள்ள பிறப்பு, படிப்பு இரண்டையும் தவிர்த்து இன்னும் ஏராளமானவைகள் நம்மிடையே இருக்கின்றன. அவைகள் வணிகமாகவே நம்முடன் தொடர்ந்து பயணிக்கின்றன.
கொஞ்சம் யோசித்து பாருங்கள் நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால் உங்களுடய படைப்புக்களை வாசகனிடம் கொண்டு சேர்க்க எந்த உலகை நாட போகிறீர்கள்? அது கிடக்கட்டும் நீங்கள் படைக்க தேவைப்படும் பொருட்கள் அது பேனாவாகவோ, பென்சிலாகவோ, கணினியாகவோ, எதுவாக இருந்தாலும் அதை வாங்குவதற்கு உங்கள் மனதுக்குள் வந்து நிற்பதென்ன? வணிக உலகம் உங்கள் மனதுக்குள் இது நல்லது, இதை வாங்கலாம் என்று உபதேசித்து வைத்திருக்கிறதே!
இப்படித்தான் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நம்முடைய உடை, உணவு, இருப்பிடம், செயல்பாடுகள், மருத்துவம், எல்லாவற்றிலும் நம்மால் இந்த வணிக உலகத்தை விட்டு அது எப்பேர்ப்பட்ட பிறப்பாக இருந்தாலும் (ராஜா வீட்டு), விட்டு செல்ல முடியாமல் அவைகளுடனே குதித்து நீந்தி இறுதியில் இதனுடனேயே மறைந்தும் போக வேண்டி இருக்கிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-May-23, 11:47 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : vaniga ulakam
பார்வை : 133

மேலே