ஊற்றம் இலாதார் படையின் படைத்தகைமை நன்று - பழமொழி நானூறு 324

இன்னிசை வெண்பா

கொடையும் ஒழுக்கமும் கோளுள் ளுணர்வும்
உடையர் எனப்பட்(டு) ஒழுகிப் பகைவர்
உடையமேற் செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின் படைத்தகைமை நன்று. 324

- பழமொழி நானூறு

பொருளுரை:

கொடைத் தொழிலும், செங்கோன்மையும், படைகுடி முதலியவற்றின் கருத்தை அறியும் நுண்ணறிவும் உடையவர் இவரென்று படை, குடி முதலியவற்றால் சொல்லப்பட்டு அந்நெறியிலேயே ஒழுகி, மாற்றலர் புறமுதுகிட்டு ஓட மேற்சென்று அவரை அழிக்கத்தக்க வலிமை இல்லாதவர்கள் படைகளை உண்டாக்குவார்களாயின் அப்படைகளின் பண்புகள் சிறப்புற இருக்கும்.

கருத்து: படை உடையானுக்குக் கொடை, செங்கோன்மை, கோளுணர்வு முதலியன வேண்டும்.

விளக்கம்:

ஈத்தளிக்கும் இயல்பு சிறப்பாக வேண்டுமென்பார் கொடையை முற்கூறினார்.

ஒழுக்கம் பொதுவாயினும் ஈண்டு அரசர் மேற்றாய் ஒழுக்கங்களும் என நின்றது.

கோள் உள்ளுணர்வு என்றது படையின் கருத்தினை ஆராய்ந்தறிதலை.

இம்மூன்றும் உடையார் படையின் படை நன்று. இலராயின் படைமாட்சி உண்டாவதில்லை. இம்மூன்றும் உடையானே படைமாட்சி உடையான் எனப்படுவான். இம்மூன்றும் படைகோடற்கு ஏதுவாயின.

'படையின் படைத்தகைமை நன்று' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-May-23, 8:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே