முன்னையுடையது காவாது இகந்திருந்து பின்னர் கொள்குறுதல் தவறு - பழமொழி நானூறு 325
நேரிசை வெண்பா
முன்னை யுடையது காவா திகந்திருந்து
பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல்
மைத்தடங்கண் மாதராய்! அஃதாதல் வெண்ணெய்மேல்
வைத்து மயில்கொள்ளு மாறு. 325
- பழமொழி நானூறு
பொருளுரை:
இனிய இயல்பையுடைய மையுண்ட அகன்ற கண்களையுடைய பெண்ணே!
தான் எளிதாகக் கொள்ளக் கூடிய முன்னால் உள்ள பொருளை பெற்றுக் காவல் செய்தலின்றி, விரும்பாமல் வெறுத்திருந்து பின்னால் எளிதாகக் கொள்ள முடியாத காலத்தில் அப்பொருளைத் தேடிக் கொள்வது, வெண்ணெயை மயிலின் மேலே வைத்து அஃது உருகிக் கண்களை மறைத்தபின் மயிலைப் பிடிப்பதற்கு ஒப்பானதாகும்.
கருத்து:
எளிதாகக் கொள்ளக்கூடிய பொருளைக் கொள்ளாது சிரமப்பட்டுப் பின்னர் அதனை வருந்திப் பெறுதல் மடமையாகும்.
விளக்கம்:
வெண்ணெயை வைக்கும்போதே மயிலைப் பிடித்துக் கொள்ளாது அது உருகி உக்கபின் மயிலைக் கொள்வது அறியாமையாதல் போலத் தான் எளிதாகக் கொள்ளுமாறு முன்னே இருப்பதைக் கொள்ளாது கிடைத்தற்கு அரிதான காலத்து அதனை வருந்தப் பெறுதலும் அறியாமையாகும்.
'வெண்ணெய்மேல் வைத்து மயில் கொள்ளுமாறு' என்பது பழமொழி.