நல்லோர் எங்கும் தோன்றலாம் - நீதி வெண்பா 1
நேரிசை வெண்பா
தாமரைபொன் முத்துச் சவரம்கோ ரோசனைபால்
பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வா(து) – ஆமழல்மற்(று)
எங்கே பிறந்தாலும் எள்ளாரே; நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என்? 1
- நீதி வெண்பா
பொருளுரை:
தாமரை மலர் சேற்றில் மலர்கிறது; தங்கம் பூமிக்கடியில் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்துப் பிரிக்கப்படுகிறது;
ஒளிவீசும் முத்து கடலில் சிப்பியின் வயிற்றிலிருந்து கிடைக்கிறது;
அரசர்களுக்கு வீசப்படும் சாமரத்தின் தோகை ஒரு வகை மானின் உடலில் வளர்ந்த முடி;
கோரோசனை ஒருவகை பசுவின் வயிற்றில் கிடைக்கிறது;
நாம் அருந்தும் பால் பசுவின் உடலில் உற்பத்தியாகி அதன் மடியின் மூலம் கிடைக்கிறது;
பூக்களில் உற்பத்தியாகும் இனிமையான தேன் தேனீக்களால் உறிஞ்சப்பட்டு கூடுகளில் சேகரிக்கப்படுகிறது; நாம் அணியும் பட்டு பட்டுப்பூச்சி உருவாக்கிய கூட்டிலிருந்து கிடைக்கிறது; இறைவனின் பூசைக்கு உகந்த புனுகும், ஜவ்வாதும் ஒரு வகைப் பூனையின் கழிவிலிருந்து கிடைக்கிறது.
தீ எதிலிருந்து எழுந்தால் என்ன? மேலே சொல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் எப்படிப்பட்ட இழிவான இடத்தில் தோன்றியிருந்தாலும் அவைகளின் பெருமையை யாரும் நகைத்து, குறையாக மதிப்பிடுவதில்லை.
அது போல நல்ல குணமுடையவர்கள் எந்த குடியில் பிறந்திருந்தால் என்ன? அவர்கள் என்றும், எல்லோராலும் போற்றப்படுவர் என்று இப்பாடலாசிரியர் மக்களுக்கு நற்குணநலன்களின் அவசியம் பற்றிக் கூறுகிறார்.