அரைகுறையாய்க் கற்றவர்கள் அறிய வேண்டிய ஒன்று - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு. 332

- பழமொழி நானூறு

பொருளுரை:

கற்றார் முன்பு ஒன்றைச் சொல்லுந்தோறும் குற்றம் உண்டாதலால் மனத்தளர்வின்றி கற்குந்தோறும் நான் கல்லாதவன் என்று கருதி கல்லா தொழிந்த நாட்களுக்கு வருந்தி,

மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து, வருந்தி அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின் பின்னும் நூல்களைக் கற்குந்தோறும் தான் கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவன்.

பதவுரை:

சொல்தொறும் சோர்வுபடுதலால் - (கற்றார் முன்பு) ஒன்றைச் சொல்லுந்தோறும் குற்றம் உண்டாதலால்,

சோர்வின்றி - மனத்தளர்வின்றி, கல்தொறும் கல்லாதேன் என்று - கற்குந்தோறும் நான் கல்லாதவன் என்று கருதி,

வழியிரங்கி - கல்லா தொழிந்த நாட்களுக்கு வருந்தி,

உற்று ஒன்று சிந்தித்து - மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து; உழன்று,

ஒன்று அறியுமேல் - வருந்தி அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின்,

கல்தொறும் - பின்னும் நூல்களைக் கற்குந்தோறும்,

தான் கல்லாதவாறு - தான்கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவன்.

கருத்து:

படிக்குந்தோறும் அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவனும் படிக்கவேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-23, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே