புன்னகை இதழ்தேனைச் சிந்தி நீவந்தால்

தென்றல் வீசும்தேன் மலர்கள் மகிழ்ந்தாடும்
புன்னகை இதழ்தேனைச் சிந்தி நீவந்தால்
மன்றம் பொலிந்த தமிழமுதக் கவிதை
என்மன மெல்லாம் உலாவும் வாராயோ
----அடி தோறும் வேறுபட்ட வாய்ப்பாட்டில் அமைந்த
கலிவிருத்தம்
தென் புன் மன் என் -----ஒரே அடி எதுகை நாலு சீர் நாலடி யால்
அமைந்ததால்
தென்றல் வீசும்தேன் மலர்கள் மகிழ்ந்தாடும்
மென்புன் னகையிதழ்கள் தேனைச் சிந்திநீவா
மன்றம் பொலிந்திடும்நற் றமிழின் பூங்கவிதை
என்நெஞ் சம்தன்னில் உலாவும் வருவாயா
---இதுவும் அதுவே
வித்தியாசம்
மா காய் மா காய் எனும் முதலடி வாய்ப்பாடே பிற அடிகளிலும்
பொலிந்து வர அமைந்த கலிவிருத்தம்
தென்றல் வரதேன் மலர்கள் மகிழ்ந்தாடும்
மென்புன் னகையிதழில் நற்தேனைச் சிந்திநீவா
மன்றம் பொலிந்திடும் செந்தமிழ்ப் பூங்கவிதை
என்நெஞ் சிலுலாவும் வா
----எதுகைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து
எழுதப்பட்ட ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
தென்றல் வரவும்தேன் பூக்கள் மகிழ்ந்தாடும்
மென்புன் னகையிதழில் நற்தேனைச் சிந்திநீவா
மன்றம் பொலிந்திடும் மட்டிலாப் பூங்கவிதை
பொன்னாய் மலரும்வா பார்
-----எதுகை மோனை இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து
வடிவமைக்கப்பட்ட ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
தென்றல் வரவும்தேன் பூக்கள் மகிழ்ந்தாடும்
புன்னகை மெல்லிதழ்தேன் சிந்திட -- என்னன்பே
மன்றம் பொலிந்திடும் மட்டிலாப் பூங்கவிதை
பொன்னாய் மலரும்வா பார்
----இப்பொழுது சற்று மாற்றி ஒருவிகற்ப நேரிசை வெண்பாவாக
மாற்றியிருக்கிறேன்
--பயில்வோர் கூர்ந்து கவனித்து பயன் பெறலாம்
நல் யாப்பு ஆசான் நல் யாப்பு நூல் வழி மட்டும்
பயில்வோர் தேர்ந்து தெளிவது சாலச் சிறந்தது