நிகழ்வின் முரண்

நிகழ்வின் முரண்

என்னப்பா எல்லாம் தயாரா இருக்கா?
இருக்குங்க,
சரி உள்ளாற போய் வூட்டம்மா கிட்ட சொல்லி எல்லாரையும் காருக்கு வர சொல்லு, அப்புறம், அவங்க கார் டிரைவருக கிட்ட சொல்லிட்டியா, அவங்க பாட்டுக்கு காரை நிறுத்தி தூங்கிட்டு இருக்க போறானுங்க.
இல்லீங்க பன்னெண்டு காருக, டிரைவர் கிட்டயும் சொல்லி ரெடியா இருக்க சொல்லியிருக்கனுங்க. அவங்க எல்லாரும் வெளிய வரவும், காருங்க வரிசையா வந்துருங்க.
மாப்பிள்ளை வூட்டுல ஏற்பாடுக எல்லாம் பண்ணிட்டாங்களா?
நேத்தே போய் சரியா பத்துமணிக்கு எல்லாரும் வந்துடுவாங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேனுங்க, இப்ப கிளம்புனா சரியா இருக்கும், பத்து மணிக்கு அங்க கரெக்டா போய் சேர்ந்துடலாம்.
சரி பேசிகிட்டே நிக்காதே உள்ளே போ, போய் அவங்களை ரெடியாகி வரச்சொல்லு, எப்ப பாரு வள வளன்னு பேசிகிட்டு நின்னுக்கறே.
முதலாளியின் குற்றச்சாட்டு குமரேசனுக்கு பழகியதுதான், இதுவரை அவர்தான் பேசிக்கொண்டிருந்தார், இல்லை கேள்வி கேட்டு இவனிடம் பதிலை எதிர்பார்த்து கொண்டிருந்தார் என்று வாய் விட்டு சொல்ல முடியுமா? அதுவும் இந்த நேரத்தில்.
இன்னும் என்ன யோசனை பண்ணிட்டு நிக்கறே?
இல்லீங்க இதா போயிட்டனுங்க.
பனிரெண்டு கார்களும் வரிசையாய் மாப்பிள்ளை வீட்டு பங்களா முன் நிற்க, முதல் காரில் இருந்து இறங்கிய முதலாளி யாரையோ தேடினார்.
ஐயா அடித்து பிடித்து ஓடி வந்தான் குமரேசன்.
ஏண்டா எங்க போய் தொலைஞ்சே, போ..போ..சீக்கிரமா போய் எல்லா கார் கதவையும் திறந்து விடு, அவங்க சரியா பத்துமணிக்கு உள்ள இருக்கணும்.
ஐயா கார் கதவை திறந்து விட்டு வர்றதுக்குத்தாங்க லேட்டாயிடுச்சு, இப்ப எல்லாம் உள்ளே போயிருப்பாங்க, குமரேசன் சொன்னாலும், இவர் காரில் ஏறி உட்கார்ந்து வந்து விட்டார், இவன் பாவம் கூட கம்பெனியில் வேலைய செய்யற சோமையனின் டி.வி.எஸ்சை எடுத்துக்கொண்டு இவர்கள் சென்று கொண்டிருந்த கார்களின் பின்னாலேயே வந்து இவர் இந்த வேலையைத்தான் சொல்லுவார் என்று தெரிந்து எல்லா கார் கதவையும் திறந்து விட்டு அவர்கள் வீட்டு உறவு பெண்களை உள்ளே அனுப்பி விட்டு வருவதற்குள் இத்தனை கூப்பாடு.
எல்லாம் சரியாக நடந்து மாப்பிள்ளை வீட்டில் உணவும் முடித்து வெளியே வந்தார்கள்.
மாப்பிள்ளை வீட்டு உறவுகள் அனைவரும் நின்று இவர்களுக்கு கை கூப்பி வழி அனுப்ப, சரி நானு கிளம்பட்டுங்களா, முதலாளி கை கூப்பியபடி மாப்பிள்ளை பெற்றோரிடம் சொல்லி விட்டு கார் ஏறப் போனவர் நின்று கொண்டிருக்கும் குமரேசனிடம், வூட்டுல எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டியா? மதியம் எல்லாம் சாப்பிட்டுட்டுத்தான் போவாங்க, சமையல் எல்லாம் ரெடி பண்ண சொல்லிட்டியா?
ஆச்சுங்க, நீங்க எல்லாம் உள்ளே போனவுடனே நான் நம்ம வூட்டுக்கு போயி எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சுட்டுத்தான் இங்க வந்தேனுங்க.
என்ன ரெடி பண்ணி கிழிச்சியோ, மாப்பிள்ளை உறவுகளிடம் சரியான சோம்பேறிங்க,
என்ன பண்ணறது? பத்து வருசமா கூட இருக்கறான், என்னென்ன செய்யணும்னு ஒவ்வொரு முறையும் நாம சொல்லிக் கொடுத்துத்தான் வேலை செய்யறான்,சலிப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டார்.
குமரேசனுக்கு வெட்கமாக இருந்தது, புது உறவுகளின் முன்னால் வேலைக்காரனை இவர் குறை சொல்லி பேசினால், நாளை வீட்டுக்கு வரப்போகும் மாப்பிள்ளை இவனை எப்படி மதிப்பார், இல்லை அவனின் பெற்றோர்கள்தான் மதிப்பார்களா?
சட்டென இந்த நினைவை உதறி விட்டு ஒன்றும் தெரியாதவன் போல் தலையை சொறிந்தபடி முதலாளி கார் பின்னால் ஓடி சற்று தள்ளி நிறுத்தியிருந்த டி.வி.எஸ்சை எடுத்து அவர் கார் பின்னாலேயே சென்றவன் ஒரு இடத்தில் வலது சந்துக்குள் புகுந்து அவரது கார் வீடு போகும் முன் இவன் போய் சேர வண்டியை முறுக்கினான். அவர் இறங்கும் போது அங்கு அவன் இல்லையென்றால், அதற்கும் ஏதாவது சொல்வார். அங்கு இவர் உறவுகளின் முன்னால்.
மதியம் அசைவ உணவு, திருப்தியாய் உண்ட மயக்கத்தில் ஒவ்வொரு உறவுகளும் கை கூப்பி விடை பெற்று கொள்ள, குமரேசனை பார்த்து போ..போ..காரை வரிசையா வந்து வாசல்ல நிறுத்த சொல்லு, விரட்டினார்.
ஒரு வழியாய் எல்லாம் நல்லபடியாய் முடிந்த திருப்தியுடன் முதலாளி, குமரேசனிடம், சரி நீ கிளம்பு, குடோனுக்கு போயிட்டு ஆளுங்க கிளம்பிட்டாங்களான்னு பார்த்துட்டு போயிடு, அதற்கு மேல் பேச எதுவுமில்லை என்பது போல் உள்ளே சென்று விட்டார்.
நீ சாப்பிட்டயா இல்லையா? மாப்பிள்ளை வீட்டிலயும் கேட்கவில்லை, மதியம் இங்கு நடந்து முடிந்த விருந்திலும் கேட்கவில்லை.
என்றாலும் இதைப்பற்றிய எண்ணமே இல்லாமல், வேறு ஒரு அவசரமாய் பறந்து கொண்டிருக்கிறான்.
காலையில் வீட்டிலிருந்து விடியற்காலை ஐந்து மணிக்கு கிளம்ப போனவன், அவனை வழி அனுப்ப வந்து நின்ற மனைவிக்கு திடீரென பிரசவ வலி வந்து விட்டது. அவசரமாய் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் மனைவியை அருகில் இருந்த மருத்துமனையில் சேர்த்து விட்ட்டான். மானேஜருக்கு போன் பண்ணி நிலைமையை சொன்னான்.
மானேஜர் “அய்யோ குமரேசா என்னை இக்கட்டுல மாட்டிவிடாதே’ அந்த ஆளு ஒரு வாரமா சொல்லிகிட்டிருந்தாரு, குமரேசனை இன்னைக்கு விடியக்காலையிலேயே அனுப்பி வச்சிருன்னு, நீ ஏழு மணி வரைக்கும் இன்னும் போகலைனு தெரிஞ்சா, எகிறி குதிக்க போறாரு, பிரசவம்தானே, அக்கம்பக்கம் பார்த்துக்க சொல்லிட்டு அந்தாளு கூட இருந்து சமாளிச்சிடேன், எப்படியும் மதியத்துக்குள்ள பங்க்ஷன் முடிஞ்சிடும். எந்த ஆஸ்பிடல்னு சொல்லு, நான் வேணா நம்ம கம்பெனி ஆளு ஒருத்தரை மருந்து மாத்திரை வாங்க உதவி தேவைன்னா அனுப்பி வைக்கிறேன்.
மனைவிக்கு என்னவாயிற்றோ? இன்னும் போனை காணோம், அதனால குழந்தை பிறந்திருக்காது, ஆனாலும் ஏன் இவ்வளவு லேட்டாகுது? மனதில் பயப்படும்படியான எண்ணங்களுடன் அந்த மருத்துமனை காம்பவுண்டுக்குள் நுழைந்து வண்டியை நிறுத்தி விட்டு, தனக்குரிய கவலைகளுடன் உள்ளே ஓடினான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Jun-23, 12:08 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 70

மேலே