நினைவோ ஒரு பறவை

மின்சார துண்டிப்பு ஏற்பட்டு வெக்கையையாய் உணர்ந்த அவளுக்கு சற்று வீதியில் உலா வர மனம் எண்ணியது. இருந்தும் வீட்டின் போர்டிகோவில் நின்றபடி நடுஜாமத்தின் மீது எண்ணங்களை படரவிட்டாள். துயில் உணராமல் உமிழ்த்து கொண்டிருந்த காக்கையின் பின்னணி குரலுக்கு ஏற்றவாறு மரங்களின் இலைகள் நடனமாடி கொண்டிருந்தன. சாலை தோறும் வெக்கை கரைந்து அம்புலி சுடரில் ஜில்லென்ற காற்று வீச தொடங்கியது. சற்று தூரத்தில் திக்கற்ற முதியவர் ஒருவர் சால்வை ஒன்றை இழுத்து போர்த்தி சாலையில் உறங்க ஆயத்தம் ஆனார். முட்டியளவு டிரவுசர் அணிந்த ஆண்கள் பலர் அங்குமிங்கும் வீதியில் நண்பர்களுடன் காற்று வாங்கியவாறு நடந்து கொண்டிருந்தனர். பெரிதும் பெமினிசம் பேசுபவள் இல்லை இருப்பினும் பெண்கள் மட்டும் ஏன் நடுஜாமத்தில் தெருவில் நடந்து போக அனுமதியில்லை என யோசித்தாள். உடனே ஒரு பூனை கத்தும் சத்தம் ஆம் ஆண் பூனை ஒன்று இன சேர்க்கைகாக ஒரு பெண் பூனையை துரத்தி கொண்டிருந்தது. சரிதான் விலங்குகளுக்கே சுதந்திரம் இல்லாத இந்த கலியுகத்தில் பெண்கள் நடமாடினாள் என்னவாகும்.. என சுதந்திரமாக இலைகளை ஆட்டியவாறு உல்லாச இரவை அம்புலியுடம் கடக்கும் நடுஜாமத்தின் மீது ஏகாந்த எண்ணங்களை படரவிட்டு மின்சார வரவை எண்ணி காத்திருந்தாள்.
- கௌசல்யா சேகர்