உங்களுக்காக ஒரு கடிதம் 37

உங்களுக்காக ஒரு கடிதம் 37


அன்பு நண்பர்களே...
தொடர் விட்டு சுமார் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஏதேதோ காரணம் நிறைய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இடைவெளிக்கு நான்தான் காரணம். என்ன செய்வது? வேலை பளு ஒரு காரணம். தினமும் உங்களோடு தொடர்பில் இருந்திட மனம் நிறைய ஆசைகள் இருக்கின்றது. சில சமயம் நம் கட்டுப்பாட்டை மீறி நடந்து விடுகிறதே என்ன செய்ய? சரி சமாதானங்களும்... சமரசங்களும் கொஞ்சம் ஒதுக்கி வைப்போம்.அதனால் ஒரு லாபமும் இல்லை. தினம்தினம் என்னை மனதளவில் பாதிக்கும் நிகழ்வுகளை உங்களோடு பகிர்வதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. நான் நிகழ்வுகளையும் அதனால் எனக்குள் ஏற்பட்ட பாதிப்புகளையோ இல்லை மாற்றங்களையோ மட்டும்தான் பகிர விருப்பப் படுகிறேன். அதற்கான தீர்வையோ இல்லை எந்தன் முடிவையோ நான் சொல்லப்போவதில்லை. என்னுடைய நிலைப்பாடையும்...என்னுள் ஏற்பட்ட பாதிப்புகளை மட்டும் எழுதப்போகிறேன். அவ்வளவுதான்.
இன்று.......நான் பணியாற்றும் மருத்துவத் துறையில் நான் கவனித்த...என்னை பாதித்த சில நிகழ்வுகளை சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளானாலும் சரி....அவர்களை பெற்றெடுத்த பெற்றோர்களானாலும் சரி...பெரியவன் ஆனதும் நீ என்னவாகப் போகிறாய்? என்று கேட்டால் தயக்கமில்லாமல் உடனே "டாக்டர்...." என்று ஒரு வித சந்தோஷத்தோடும்...பெருமிதத்தோடும் ஏன்? கொஞ்சம் கர்வத்தோடும் பெருபான்மையான பிள்ளைகள் சொல்வதை கேட்டிருப்போம். அவர்களின் பெற்றோர்களின் நிலையம் அப்படித்தான். எப்படியாவது என் பிள்ளையை டாக்டர் ஆக்கி பார்த்துடனும் என்பதுதான் அவர்களுடைய கனவும் லட்சியமாகவும் இருக்கிறது. இது ஊர் அறிந்த உண்மைதானே.
அப்படி சிறு வயதிலிருந்தே ஏன்? கருவிலிருந்தே கனவுகளோடு பெற்றெடுத்து பொத்து பொத்து பாதுகாத்து....வேண்டியதையெல்லாம் பாத்துப்பாத்து செய்து கொடுத்து அங்க முட்டி.... இங்க முட்டி...முட்டியெல்லாம் தேய்த்து ...தேய்ந்து.... மெடிக்கல் காலேஜில் சீட் வாங்கி பிள்ளைகளை சேர்த்துவிட்டுவிட்டு கனவுகளோடு பாதி கண் மூடியும் மூடாமலும் எந்திரமாய் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பெற்றோர்களை நாம் தினம்தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
பிள்ளைகளையும் ஒன்றும் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ..மார்க்...மார்க்...என்ற ரேஸில் முட்டிமோதி...முட்டி தேய ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பள்ளி....பள்ளியை விட்டால் ட்யூஷன்...வீட்டிற்கு வந்தால் ஹோம்ஒர்க் என்று விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் மார்க்..மார்க்..என்று மந்திரிச்சு விட்ட கோழியாய் 10,11, 12 வகுப்பு மூடியும் வரை பயித்தியம் பிடித்து மதி மயங்கி....எப்படியோ பாஸாகி....அதற்கப்புறமும் ' நீட்டாமே...நீட்' அந்த எக்ஸாமுக்கு கோச்சிங் சென்டருக்கு படையெடுத்து...முதுகொடிந்து முக்கித்தக்கி நல்ல மார்க் வாங்கி....பாதி கனவுகளோடும் மீதி மன அழுத்தத்தோடும் மெடிக்கல் காலேஜுக்குள் காலடி எடுத்து வைக்கும் சிங்க பெண்ணையும்... ஆண் புலிகளையும் என்ன சொல்ல! பாராட்டியே ஆகவேண்டுமல்லவா...முதலில் பாராட்டிடலாம். Congrats.... பிள்ளைகளே வாழ்த்துக்கள். வாழ்வின் அடுத்த நிலைக்கு உங்களை வரவேற்கிறோம்.
ஸ்கூலில் ஏற்பட்ட பாதிப்பு...மன அழுத்தம் குறைவதற்கே ஆண்டுகள் பல தேவை. சேர்ந்தவுடனே ஆசுவாசப்படகூட நேரமில்லாமல் அனாடமி, பிசியாலஜி, பார்மகாலஜி என்று சோர்வடைந்த மூளைக்குள் இத்தனையையும் துருத்தி பர்ஸ்ட செமிஸ்டர்...செகண்ட் செமிஸ்டர் என்று நிதானிப்பதற்குள் மேலும் மேலும் AK 47 கொண்டு பிள்ளைகளை தாக்கி கொன்றுவிடுகிறார்களே. என்ன செய்ய? மெடிக்கல் டீச்சிங் கரிக்குலமே அப்படித்தானே இருக்கிறது. உயிரோடு போராடப் போகின்ற...உயிரைப் பாதுகாக்கப் போகிறவர்களை இப்படி கைதிகளை போல் நடத்தினால் என்ன செய்வது? இது எல்லோருக்கும் பொருத்தாது. பெரும்பாலான சதவிகித பிள்ளைகள் தடுமாறி...தடம் மாறிப் போய்விடுவதும் இதனால்தானே.....
தொடரும்...

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Jun-23, 7:52 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 72

மேலே