காதல்

காதல்.....!

"அடிஆத்தி இது என்ன பீலு...உன்னால நான் பெயிலு..புடிக்காம ஓட்டினேன் ரீலு..இனிமேல் நான் ஓன் ஆளு......"செல்போன் மூணாவது தடவை பாடி அழைத்தது. ஒரே ஓட்டமாய் ஓடி எடுத்து காதில் வைத்து " என்ன.." என்றாள் கண்மணி.
" எடுக்கறதுக்கு ஏன் இத்தனை நேரம். என்ன பண்ணிக்கிட்டிருந்த..." என்று கரகர குரலில் மிரட்டும் தொனியில் மறுமுனையில்.
" அம்மா பக்கத்தில இருந்தாங்க. அதனாலதான் எடுக்க முடியல. அதான் இப்ப எடுத்துட்டேன்
இல்ல ..."
"இங்க பாரு கண்மணி ..நான் கூப்பிட்டவுடன் நீ எடுக்கணும் அவ்வளவுதான். எத்தனை நாளாச்சு தெரியுமா? நான் மட்டும்தான் இங்க அல்லாடிக்கிட்டு இருக்கேன். அங்க ஒன்னும் அப்படி தெரியலையே. நீ செய்யறது கொஞ்சம்கூட சரியில்ல. ஓன் இஷ்டத்துக்கு இருக்க கண்மணி. ஓன் கூட சண்ட போடுனும்னா போடலாம். அதுக்கு மூடில்ல இப்ப. சரி சொல்லு..."
" என்ன சொல்றது. ஒங்க வீட்லயும் ஒத்துக்கிட்டாங்க. எங்க வீட்லயும் ஒத்துக்கிட்டாங்க. அப்படியே ஒங்கிட்ட பிரியா பேசறதுக்கு. கூட்ட ஒடனே எடுத்து பேசறதுக்கு."
"ஆமாண்டி... எங்க வீட்ல ஒத்துக்குவாங்க. ஒங்க வீட்ல ஒத்துக்குவாங்களா....? பெருசா பேச வந்துட்டா. இப்ப சொல்றி...ஒன்ன எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அவங்க ஒன்ன ஒக்கார வச்சி சோறு போடுவாங்க. ஒன்ன நல்லா கவனிச்சிக்குவாங்க"
"ஒனக்கே அங்க எடமில்லையாம். இதுல என்ன வேற கூட்டிகிட்டு போறதாம்." என்றாள் ஒரு கேலி சிரிப்புடன்.
யார்தான் இப்படி பேசிக்கிறாங்க என்று நாம் கவனித்தோம் ஆனால் இன்னும் மீசை முளைத்தும்... முளைக்காத ஆம்பளையும், வயசுக்கு வந்தும்... வராத பொம்பளையும்....ரெண்டும் பள்ளியில் படிக்கும் இளசுகள். இன்றைய இளைய சமுதாயம் இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. சரி இதெல்லாம் ஹார்மோன்ஸ் செய்யும் செப்பிடு வித்தைகள். எதார்த்த வாழ்க்கையில் நுழைவதற்கு முன்பே கற்பனையும், கனவும் கலந்து...எது கனவு? எது கற்பனை ? எது எதார்த்தம்? எது உண்மை? எது பொய்? என்று பகுத்து பார்க்கும் அறிவில்லாமல் எல்லாமே சுலபம் என்று நினைத்து..... நினைப்பதெல்லாம் உடனே கைகூட வேண்டுமென அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாய் வாழ்வை கெடுத்து கொண்டிருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தின் பிரதிநிதியாகத்தான் இவர்களை பார்க்க வேண்டியிருக்கிறது. இன்று இப்படி பேசுகிறவர்கள் அடுத்த நாளே சண்டை போட்டு 'பிரேக்கப்' என்று பிரிந்து விடுகிறார்கள். சரி இவர்கள்தான் இப்படி என்றால் வளர்ந்து கல்லூரியில் படிக்கும் ஜோடிகளும் அப்படித்தான். அறிவு முதிர்ச்சி வந்தவர்களும் அப்படித்தான்.
சரி. இந்த காதல் வந்து விட்டால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்ன செய்கிறது? என்று யோசிக்க வைத்து விட்டது. அது உண்மை காதலா? தெய்வீக காதலா? வெறும் மோகமா? இல்லை கடந்துபோகும் மேகமா? இலக்கிய காலந்தொட்டு இன்றைய கம்ப்யூட்டர் காலம் வரை இந்த காதல் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது? சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று பார்த்தோமானால்... உறவு வாழ்க்கையிலிருந்து களவு வாழ்க்கைக்குதான் இளைய சமுதாயத்தை இழுத்துக் கொண்டிருக்கிறது.
முதல் பாடமே பொய். எப்படியெல்லாம் பொய்ச்சொல்வது? பொய்யை மெய்யாய் பூசி மொழுகி, அப்படியே நம்புவதுபோல் சொல்வது. அதற்கு ஆதரவாய்...ஆதாரமாய் கொஞ்சம் உண்மையையும், காரண காரியங்களையும் ஜோடித்து அழகாய் ஒரு காவியமாய் சொல்வது. அதற்குத் தகுந்தாற்போல் முக பாவத்தையும் உடல் மொழியையும் தயார் படுத்தி அற்புதமாய் அரங்கேற்றும் கலை எங்கிருந்து வருகிறது? ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. அது இயற்கையிலேயே உடலிலும்...உள்ளத்திலும் ஊறுவதுதான். அவர்கள் படிக்கும் பாடத்தில் பாஸாகிறார்களோ என்னவோ இதில் எல்லோருமே பி.ஹெச்சிடிதான். அப்படியே பொங்கி வழியும் பாருங்கள். வற்றாத ஜீவ நதி பிரவாகம்தான்.
அடுத்து களவு. திருட்டு. ஏமாற்றுதல். பெற்றாரை...உற்றாரை...ஏன் உயிர் நட்பையும் ஏமாற்றுதல். அட...இதுவும் காதல் சொல்லித் தருவதுதான். ஒவ்வொரு நம்பருக்கும் ஒவ்வொரு அழைப்பு மணி... அதேதான் ரிங்க்டோன். எதிர்முனையில் ஆண் குரல்,,,ஆனால் இவள் கூப்பிடுவதோ என்னடி... சொல்லுடிதான். இதையும் நம்பும் ஏமாளிகள்தான் பெற்றவர்கள். இல்லை தெரிந்தும் தெரியாதபடி நடிக்கும் தேர்ந்த நடிகர்கள்தான். ஒருமுறை அடித்து ஓய்ந்தால் ஒரு அர்த்தம். இரண்டு முறை அடித்து ஓய்ந்தால் அது ஒரு சங்கீதம். தொடர்ந்து அடித்தால் அதற்கு வேறு அர்த்தம். இந்த சங்கேத பாஷைக்கு ஒரு டிக்ஷ்னரியே உண்டு. இதில் பெற்றவர்கள் LKG ...UKG தான். இளம் வயதிலேயே டாக்ட்ரேட் வாங்கி டிஸ்டிங்க்ஷனில் வெற்றி பெற்றவர்கள்தான் இந்த தலைமுறையினர்கள். அதுவரை குசு குசு என்று பேசுகிறவர்கள் அருகில் போனவுடன் சட்டென போனை ஆப் செய்வது... இல்லையென்றால் வேறொரு நிகழ்வுக்கு மாற்றிவிடுவது. வாயு வேகம்... மனோ வேகம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வேகங்களை விட அதிரி புதிரி வேகம். அடேங்கப்பா...! இந்த வேகத்தை நல்ல வழியில் இல்லை முன்னேற்ற பாதையில் காட்டினால் எங்கேயோ போய்விடுவார்கள்.
அடுத்து உரிமை...பொஸசிவ்னெஸ். 1...4 ...3 ...என்று சொன்னவுடன் அவன் மேல் அவளுக்கும், அவள் மேல் அவனுக்கும் உரிமை வந்துவிடுகிறது. என் புருஷன்...என் பொண்டாட்டி...என்கின்ற உரிமை. இப்ப வரும் சினிமா பாடல்களும் ஒரு வகையில் இதற்கு பின்பாட்டு பாடுகிறது. " தாலியே தேவயில்ல ...நீதான் என் பொஞ்சாதி.தாம்பூலம் தேவயில்ல நீதான் என் சரிபாதி. அட கிறுக்கா... நான் உனக்காக பொறந்தவடா..அட கிறுக்கா..நான் உனக்காக அலைஞ்சவடா .." இப்படி உண்மையில் உரிமை வருவதற்கு முன்பே உரிமை கிடைத்து விட்டதுபோல் உரிமையோடு பல அந்தரங்களைக்கூட பகிர்ந்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டது. அதனால் வரும் ஆபத்தை உணராமல் நடக்கும் இந்த கூத்துகள்தான் பெற்றோர்களின் வயிற்றில் புளியை மட்டுமா
கரைக்கிறது? பூகம்பத்தையல்லவா உண்டாக்கி விடுகிறது. தினமும் நியுஸிலும்...நியூஸ் பேப்பரில் செய்தியாக வந்து கலவர படுத்துவது வாடிக்கையாகி விட்டது. பல சமயம் இந்த உரிமை.... உரிமை மீறலாகி, சொர்க்கமாய் இருக்க வேண்டிய வாழ்கையை நரகத்தில் தள்ளி நகைப்புக்கு இடமாக்கிப் போகிறது.
விட்டுக்கொடுத்தல்...பொதுவாக எல்லோரும் வாரிவழங்கும் அறிவுரை. சாதாரணமாகத் தோன்றும் இந்த அறிவுரை...நடைமுறைக்கு ஒத்துவருமா? இது அந்த வயசில் ஆராய்ந்து பார்க்க இயலுமா? காதலிக்கும்போது குடிப்பது ரசிக்கும்படியாகவும்..ஏற்றுக்கொள்ள கூடியதாகவும் இருக்கும். காதலனும் ' என் செல்ல குட்டியில்ல...என் புஜ்ஜியில்ல என் பிரெண்டுக்கு பிறந்த நாள் பார்ட்டி...பிரெண்ட்ஸ் எல்லோரும் ஒன்னு கூடுகிறோம். எல்லோரும் குடிக்கும்போது நான் மட்டும் வேணான்னு சொன்னா நல்லா இருக்காதில்ல. கொஞ்சம்...கொஞ்சூண்டு ஒரு ஸ்மால்..ஒரேயொரு ஸ்மால்...சரி அதுவேண்டாம். பீர் மட்டுமாவது கொஞ்சம் குடிச்சிக்கிறேனே. இப்பகூட ஒனக்கு தெரியாம ...ஒங்கிட்ட சொல்லாம நான் குடிக்க முடியும். ஆனா நான் அப்படி செய்யல. உன் கிட்ட சொல்லிட்டுதான்...நீ பர்மிஷன் கொடுத்தாதான் நான் குடிப்பேன். ப்ளீஸ்...ப்ளீஸ்...:" என்று கெஞ்சி... கொஞ்சி கூத்தாடி அவன் ஆசையை நிறைவேற்றி கொள்கிறான். இங்கு என்ன நடக்கிறது? பொய்...கொஞ்சம் உண்மை அரிதாரம் பூசிக்கொண்டு நாடகத்தை அரங்கேற்றுகிறது. சரி போனா போகிறதென்று விட்டுக்கொடுத்தால்.... அது தொடர்கதையாகி வாழ்க்கையையே அதலபாதாளத்தில் தள்ளிவிடுமே. இந்த தலைமுறையினர் புத்திசாலிகள். " நீ என்ன குடிக்கவேணும்னு நினைக்கிறாயோ வாங்கிட்டு வா.... நம்ம ரெண்டுபேரும் சேர்ந்தே குடிப்போம்." என்று விளையாட்டாய் ஆரம்பித்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. இப்போதுதான் பெண்கள் குடிப்பதும் அதிகமாகி விட்டதே.எதையெதை எப்பெப்போ விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதையதை அப்பப்போ விட்டுக்கொடுக்க வேண்டும். எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்க முடியாதல்லவா?. இது இரு பாலருக்கும் பொருந்தும்தானே. ஆனால் உண்மையில் விட்டுக் கொடுப்பது பெற்றோர்களாகிய நாங்கள்தான். எங்கள் ஆசா பாசங்களை விட்டுக்கொடுக்கிறோம். எங்களின் கனவுகளை விட்டுக் கொடுக்கிறோம். எங்களின் வருமானங்களை மற்றும் அவமானங்களை விட்டுக் கொடுக்கிறோம். ஏன்? எங்களின் வாழ்க்கையையே உங்களுக்காய் விட்டுக் கொடுக்கிறோம்.
கோபம்.. ஓ...இந்த கோபம் செய்யும் சேதங்கள்...சேதாரங்கள் எத்தனையெத்தனை. விலையுர்ந்த செல்போனை உடைப்பது... படிக்காமல் எதிர்காலத்தை பாழடைப்பது... அந்த கோபத்தினால் தகாத வார்த்தைகளால் மனதை காயப் படுத்துவது... அப்படிப் பேசிப்பேசி அதுவே பழகிப்போய் நல்ல விதமாய் பேசுவதற்கே மறந்துபோய்... அந்த கோபத்தினால் ஏற்பட்ட வடுவொடு.. வடுவில் வழியும் வேதனைகளோடு வாழ்நாள் முழுதும் வாழ நிர்பந்திக்க படுதல் சகஜமாகி விட்டது.
பிடிவாதம்...அடுத்து பெருந்தொல்லையாய்.... கருவண்டாய் குடைச்சல் தருவது... பிடிவாதம். பெற்றவர்மேல்..கூடப்பிறந்தவர் மேல் இல்லாத நம்பிக்கை, பார்த்தவுடன்..யார்யார் என்று சரிவர புரிந்துகொள்ள முடியாத நிலையில்...காதலும் இல்லாமல்...வாழ்க்கையும் இல்லாமல்...கானல் நீரை நம்பி...அந்த நீருக்காய் பிடிவாதம் பிடித்து வாழ்க்கையை நாசம் செய்துகொள்ளும் இந்த தலை முறையினரை என்னவென்று சொல்வது?. முதலில் வாழ்க்கையில் வலுவாக காலூன்ற நியாமான எதுவானபோதிலும் அதற்கு பிடிவாதம் பிடித்தால் பரவாயில்லை. நீயே சொந்த காலில் வலுவில்லாமல் நிற்கிறாய். அதற்குள் தேவையில்லாததற்கு, உன் வாழ்க்கையையே நாசம் செய்யும்...உன் ஆதாரத்தையே புரட்டிப்போடும் கற்பனை உலகத்தில்...அஸ்திவாரமே இல்லாமல் வானம்வரை கட்டத்துடிக்கும் ஒரு நிலையற்ற வாழ்க்கைக்கு பிடிவாதம் பிடித்தல் எந்த வகையில் நியாமென்று எண்ணிப் பார்க்கிறேன். அந்த பிடிவாதத்தால் உங்களையே வருத்திக்கொள்ளும் அதான்...சாப்பிடாமல் தர்ணா செய்வது...கதவை படார்..படார் என்று அறைந்து சாத்துவது... செல்போனை தூக்கியெறிவது... கையை பிளேடால் அறுத்துக் கொள்வது.. உச்சகட்டமாய் உயிரையே போக்கிக்கொள்வது...எல்லாம் அர்த்தமற்றவையாய்த் தோன்றவில்லை. பிடிவாதம் OK தான். முதலில் உங்களை ஸ்திரப் படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கால்களில் நீங்கள் நில்லுங்கள். பெற்றவர்கள் எங்களுடைய ஆசையும் கனவுகளும் அதுதானே.உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாங்கள் ஒன்றும் காதலுக்கு எதிரிகள் இல்லை. உங்களின் சதோஷம்தான் எங்களின் வாழ்க்கையின் அர்த்தமே அதுதான்.அதற்குத்தான்.
தொடக்கத்தில் இருக்கும்...அந்த அறியா பருவத்தில் இருக்கும் அந்த காதல்...அந்த இனிமை.... அந்த துடிப்பு...எல்லாம் நீச்சல் கத்துக் கொள்ளும் போது இருக்கும் ஆர்வமும்..உற்சாகமும் போல்தான். அனுபவம் வந்தபின் அடங்கிவிடும். மாறிப் போவதற்கும் சான்சஸ் அதிகம். ஆக காதல் கற்றுத்தருவது களவு..பொய்...பிடிவாதம்.. கோபம்... எதிர்மறை விளைவுகள்தான் அதிகம். நேர்மறையாய் ஏதுமில்லையா? என்ற கேள்விக்கு...முழுமையான...தைரியமான ஆதாரங்கள் அதிகம் இல்லை. கை விட்டு எண்ணி விடலாம். எதிர்மறைதான் அதிகம்...ஏன் பெரும்பாலும் இருக்கிறது. அப்படியென்றால்...காதலிக்கவே கூடாதா? இல்லையில்லை நான் அப்படி சொல்ல வரவில்லை. காதல் இல்லாமல் இந்த உலகம் இயங்குமா? வாழ்வின் இயக்கத்திற்கு காதல் ஆதார சுருதி அல்லவா?
'காதல் காதல் காதல்...காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்....' என்று மகா கவியே சொன்ன பிறகு நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அவர் சொன்ன சாதல் உயிரை மாய்த்து சாவதல்ல. உனக்கு காதல் வரவில்லையென்றால்..அல்லது நீ காதலிக்கவில்லை என்றால் உணவாழ்வு சாதலை ஒத்ததாகும். ஒரு உயிர்ப்பு...ஒரு இயக்கம்....ஒரு துடிப்பு... இல்லாது செத்த பிணம்போல்...சாவைப்போல் இயக்கமின்றி...சலனமின்றி...கிடந்தது பாழாய் போய்விடும். காதலியுங்கள். காதலியுங்கள். தன்மானத்தை விடாமல்...உயிர்போல் இருக்கும் மானத்தையும் துறக்காமல்.எதிர்கால வாழ்க்கையை நினைவில் நிறுத்தி, தேர்ந்தெடுக்கும் துணையின் தன்மையை நன்கு ஆராய்ந்து..பொறுமையாய்..நிதானமாய்...உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காமல் வாழ்வின் யதார்த்தத்திற்கு தலை வணங்கி... உண்மையையாய் காதலியுங்கள். யார் வேண்டாமென்பது? ஜாக்கிரதையாயும்...எச்சரிக்கையையும் இருங்கள் என்பதுதானே எங்களது கோரிக்கை. எங்கள் நம்பிக்கைக்கே துரோகம் செய்தால்..அதனால் கஷ்டப்படப் போவது நீங்கள்தானே. நஷ்டம் வந்தபின் யோசிப்பதினால் பயனொன்றும் இல்லை. அவனை திருத்துவதற்கோ...இல்லை அவள் எப்படி இருந்தாலும் சமரசம் செய்து கொண்டு வாழ்வதற்கோ நீங்கள் பிறப்பெடுக்கவில்லை. இதை நன்றாக உங்கள் மனதில் வையுங்கள். ஊர் கூடி ...உறவு கூடி சொந்தமானபின்...உரிமை வந்தபின் எல்லாம் செய்வது நல்லது. எதிர்மறையாய் அமைந்து விட்டால் உங்கள் தலை எழுத்து. அதன் பின் சாம..பேத...தான...தண்டம் கையில் எடுக்க வேண்டியதுதான்.
தவிர்க்கவே முடியாமல் உங்கள் மனது அந்த துணையைத்தான் நாடுகிறதென்றால்...ஆணாக இருந்தால் உன் தனி வாழ்க்கையே போராட்டம் என்றால் இதில் மேலும் ஒரு துணைக்கு போராட நீ என்ன செய்ய வேண்டும்?. இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். எது நடந்தாலும் துணையை காப்பாற்ற நீ முதலில் நிலைப் படவேண்டும். படித்து முடித்து உன்னையும் உன் வாழ்க்கையும் துணையோடு...தொடரும் உன் சந்ததியோடும் முழுமையாய்...சந்தோஷமாய் அனுபவிக்க ஆதாரமாய் இருக்கும் வருமானத்தை பெருக்க முதலில் முயலுங்கள். அப்போதுதான் மரியாதையோடு...மற்றவர்கள் பாராட்ட வேண்டாம்...மற்றவர்கள் மதிக்கும்படி வாழ முடியும்.
பெண்ணாக இருந்தால்...ஆணை மட்டும் நம்பி வாழ்க்கையில் இறங்கிவிடாதே. நீயும் உன் சொந்த காலில் நிற்க வேண்டும். அப்போதுதான் உனக்கு போகுமிடத்தில் மரியாதை கிடைக்கும். காதலனும் அதான்... கணவனும் உன்னை மரியாதையாய் நடத்துவான். உன் காதல் உண்மையாக இருந்தால் அவனுடன் இன்பத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளாமல் வரும் துன்பத்திலும் கைகொடுக்க உனக்கும் அறிவு...வருமானம் அவசியம் வேண்டுமல்லவா? எப்போ இதை செய்வது? காலத்தே பயிர் செய்ய வேண்டுமல்லவா! காலம் கடந்தபின் எல்லாம் கை மீறிப் போய்விடும். காதல் செய்யுங்கள். கொண்டாட வேண்டியதுதான். எதிர்கால சவால்கள்...இடர்பாடுகள்... போட்டிகள்... பொறாமைகள் அத்தனையையும் எதிர்கொள்ள உடலிலும்...உள்ளத்திலும்...தைரியத்தையும் வலுவையும்...வருமானத்தில்...வாய்ப்புகளையும் இழந்துவிடாமல் நழுவவிடாமல் ...காதலையையும் வாழ்க்கையும் சமமாக பங்கிட்டு வாழ்ந்தால் வெற்றி நிச்சயம். எல்லோரும் லவ் பண்ணுங்கோ..!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (4-Jun-23, 1:06 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : kaadhal
பார்வை : 541

மேலே