மரணத்திலும் சனனிக்கும் என் காதல்
கோலமயில் வைதேகியின் கற்பின் நிலையறியா
கோணப்புத்திக் கொண்டவனா?
கோசலையின் மைந்தனும்
சந்தேகத்"தீ" கொண்டு நானும்
சகியே! உன்னைச் சற்றும் பார்த்ததில்லை
அரியின் அவதாரம் அனைத்தும் அறிந்திருக்க
அக்னிகுண்டத்தாலே ஆற்றிடும் உண்மையென்ன?
அரியணை ஏறிட அனுதினமும்
தலையணை ஓதுவார் இருக்க
"அரி" எனை நம்பி வந்து
அசோகவனத்தில் அடைப்பட்டாயே!
அன்னையே! அதைஉணராப் பேதையா நான்?
உலை வாயை மூடிடத்தான் வழியும் உண்டு
ஊர் வாயை என்ன செய்ய?
"உத்தமி" நீ என்பதை எங்கனம் நானும்
உலகுக்கு உரக்கச் சொல்ல?
அக்கினியில் நீயும் நிற்க - ரகுநாதன்
அங்கமெல்லாம் சுட்டத் தழலை அறிந்தவரும் யாருண்டு?
அத்"தீ"யும் உன்னைத் தொடமறுத்து அடிதூரம் நகர்ந்தடி
அறியாமையின் உலகமும் உன் மாண்பை ஏற்றதடி
மரணத்தின் விளிம்பில் கூட, மறிக்காமல்
சனனிக்கும் என் காதல் மனமதை அறிவாயோ?