நேயம் எதுவெனச் சொல்
#நேயம் எதுவெனச் சொல்..!
நீண்ட தொலைவு பயணத்தில்
நிழல் தேடும் பறவையைப்போல்
வாயிலில்ஒதுங்கியோர்க்கு
நீராகாரமும் நீர் மோரும்
அளித்துத் தாகம் தணிக்கும்
மண்ணுலக தேவர்களை
நீங்கள் கண்டதுண்டா..?
நீரினுள் தவறி விழுந்து
உயிர் பிழைக்கத் தத்தளிக்கும் எறும்பினை காப்பாற்றிக்
கரை சேர்த்து இன்புறும்
கண்ணியவான்களைக்
நீங்கள் கண்டதுண்டா..!
சுகவீனப்பட்டு
புயலில் சாய்ந்த மரமாய்
படுக்கையில் விழுந்து
அனற்றிக் கொண்டிருக்கும்
வயது முதிர்ந்தோரை
நலம் விசாரித்து, நெற்றி நீவி
ஆறுதல் மருந்துகளில்
அவர்களின் ஆயுளைத்
துளிர்க்கச் செய்யும்
தேவாதி தேவர்களை
நீங்கள் கண்டதுண்டா..!
அலுவலகத்தில் அவசர பணியின் போது
தலைவலியும் மயக்கமும்
உயிரைப் பிழிந்து கொண்டிருக்க
உன் பணியை நான் செய்கிறேன்
நீ சற்று ஓய்வு கொள்
யாமிருக்க பயமேன்
என்று கடவுளாய் நின்று
நம் பணியை
நேரத்திற்கு முடித்தளிக்கும்
மனித வடிவில்
முருகக் கடவுளை
நீங்கள் கண்டதுண்டா..?
விபத்தில் அடிபட்டு
கால் எலும்பு முறிவடைந்து
சாலையில் குருதி வழிய
ஓலமிட்டவளை
ஒரு குழந்தையைப் போல்
அள்ளி எடுத்து
பெஞ்சு மீது கிடத்தி
கத்தித் கத்தி வரண்டிருக்கும்
வாய்க்கு நீரூற்றி
யாரென்றே தெரியாதவளை
கரிசனத்தோடு
மருத்துவமனை அழைத்துச் சென்ற
கல்கி கடவுளை
நீங்கள் கண்டதுண்டா..?
வாகன நெரிசலில்
பார்வைகள் அற்ற ஒருவன்
சாலையைக் கடக்க
அவனின் கைப் பிடித்து
சாலையைக் கடப்பதற்கு உதவிடும்
கருணைக் கடவுளை
நீங்கள் கண்டதுண்டா..!
பேருந்து நெரிசலில்
சிக்கித்தவிக்கும்
கர்ப்பிணிப் பெண்ணிற்கோ
ஊனமுற்றோருக்கோ
முதியவர்களுக்கோ
தன் இருக்கையை அளித்த
கண்ணியவான்களை
நீங்கள் கண்டதுண்டா..?
பேருந்தில் பயணிக்கும்
ஒருத்தி
பணப்பையை பறிகொடுத்துவிட்டு
தவிக்கையில் அவருக்கு
பயணசீட்டு எடுத்துக் கொடுத்து
வழிச்செலவிற்கும் பணம் கொடுத்து
அனுப்பிய கலியுகவள்ளல்களை
நீங்கள் கண்டதுண்டா..?
இப்படி எல்லாம் கண்டிருப்பீர்கள் என்றால்
நீங்கள் நேயத்தையும் அங்கே
கண்டிருப்பீர்கள்..!
முகமறியா தோருக்கும்
எதிர்பார்ப்பின்றி
இப்படி எல்லாமும்
உதவியிருந்தால்
நீங்களும் நேயம் மிக்கவர்களே..!
நேயங்கள் சாயங்களால்
மிளிர்வதில்லை
நியாயமான மனிதர்களால்
மலர்பவை..!
நேயம் எங்கோ ஓரிடத்தில்
மலர்ந்து கொண்டிருப்பதால் தான்
உலகம் இன்னமும்
சுவாசித்துக் கொண்டிருக்கிறது..!
#சொ.சாந்தி